PUBLISHED ON : ஜூன் 01, 2025

பல்லவப் பேரரசன் காடவராய கோப்பெருஞ்சிங்கன் கோட்டை கட்டி ஆண்ட சேந்த மங்கலத்தில் உள்ள கருங்கல் சிற்பம் இது!
கள்ளக்குறிச்சி கெடிலம் ஆற்றங்கரையில் இருந்து ஒரு கி.மீ., தொலைவிலுள்ள கோட்டை சுவற்றின் அகழிப்பள்ளம் கடந்தால் வாணிலை கண்டீஸ்வரம் கோவில்; கோவில் எதிரே சாலை கடந்தால் குளம்; குளக்கரையில்...
'கி.பி.,1231ல் மூன்றாம் ராஜராஜ சோழனை சிறையிட்டதால் மூண்ட போர் சிதைத்தது போக எஞ்சியிருப்பது இந்த இசைக்கல் குதிரை' என்கிறது வரலாற்று குறிப்பு. சிற்பத்தை பாதுகாக்கிறது இந்திய தொல்லியல் துறை!
வேகம் சொல்லும் கால்கள், விவேகம் சொல்லும் கடிவாளம், கம்பீரம் சொல்லும் ஆபரணங்கள், வசீகரம் சொல்லும் முகம் என கலை மின்ன செதுக்கப்பட்டுள்ளது குதிரை!
'கல் துாண்கள் கலைநயத்தால் இசைத் துாண்களாகித் தரும் பரவசத்தை அப்படியே இச்சிற்பத்தின் உடல் பாகங்களும் தருகின்றன; இதுவே, கல்குதிரை 'இசைக்கல் குதிரை' ஆன காரணம்' என்கிறார் கோவில் அர்ச்சகர் மோகனசுந்தரம்!
கூடவே, 'ஆபத்சகாயீஸ்வரர் உடனுறை பிரஹன்நாயகி அம்பிகை எழுந்தருளும் ரதத்தை இழுத்துச் செல்லும் இரு குதிரைகளாக இச்சிற்பம் இருந்திருக்க வேண்டும்; அதோ... ஒன்று முற்றிலும் சிதிலமடைந்து கிடக்கிறது' என்றும் கை காட்டுகிறார்.
கலையில் ஒளிந்திருக்கும் நம்பெருமையை காப்பாற்ற வேண்டியதன் அவசியம் புரிகிறது.