PUBLISHED ON : ஜூலை 06, 2025

திரையில் இவர் ஏற்கும் பாத்திரங்களும், அதன் உணர்வுகளும் பன்முகத்தன்மை வாய்ந்தவை. நிஜத்தில் 'முயற்சி' பற்றிய இவரது அபிப்பிராயம் என்ன?
யார் குரல்?
நடிகர் எம்.எஸ்.பாஸ்கர்
வயது - 67
'ஐந்தறிவு உயிரினங்கள் உயிர்வாழ மட்டுமே முயற்சி செய்றப்போ, ஆறறிவுள்ள மனுஷன் மட்டும்தான் புகழ், வெற்றி, பணம்னு உயிர் வாழ்றதைத் தாண்டியும் முயற்சிக்கிறான். இப்படி முயற்சிக்கிறது தப்பில்லை; ஆனா, முறையான திட்டத்தோட முயற்சிக்கலேன்னா அது தப்பு!
'எனக்கு தெரிஞ்ச ஒரு தம்பி, நல்ல வேலையில இருந்தார். ஒருநாள் என்கிட்டே, 'சார்... நான் வேலையை விட்டுட்டேன்; சினிமாவுல முயற்சி பண்ணலாம்னு இருக்கேன்'னு சொன்னார். 'குடும்பம் இருக்கே தம்பி; எப்படி சமாளிப்பீங்க'ன்னு கேட்டேன். 'பி.எப்., பணம் இருக்கு சார்'னு பதில் வந்தது!
'இம்மாதிரி ஆளுங்ககிட்டே, 'முயற்சி திருவினையாக்கும்'னு சம்பிரதாயத்துக்காக கூட நான் சொல்றதில்லை!'
எஸ்.எஸ்.எல்.சி., தேர்வில் தனது நான்காவது முயற்சியில் தேர்ச்சி பெற்றவர் எம்.எஸ்.பாஸ்கர். கல்வித் தகுதியை காட்டிலும் தொடர் தோல்விக்கு முடிவு கட்டவே இம்முயற்சியை மேற்கொண்டவர், பின்னாளில் பி.காம்., பட்டதாரி ஆகி இருக்கிறார்!
'எப்பவுமே 'முயற்சி'ங்கிறது சுகமான அனுபவமா இருக்காது. அந்த கஷ்டத்தை ஏத்துக்கிட்டு காத்திருக்கப் பழகணும். காத்திருப்புதான் முயற்சிக்கான முக்கியமான எரிபொருள்!
'கலைத்துறைக்கு வந்த புதுசுல அந்தந்த பகுதிக்கான வட்டார உச்சரிப்புகள் ரொம்பவே சவாலா இருந்தது. நிறைய 'டப்பிங்' பேசிப் பேசி, அடுத்தவங்க உச்சரிப்பை பொறுமையா கவனிச்சு உள்வாங்கினதால மட்டும்தான் இன்னைக்கு எல்லா வட்டார வழக்கையும் என்னால சரியா பேச முடியுது!'
தஞ்சாவூர், முத்துப்பேட்டையில் இருந்து நடிகராகும் கனவோடு சென்னை வந்த எம்.எஸ்.பாஸ்கர், 'டப்பிங்' கலைஞராக தன் முயற்சியைத் துவக்கி, நீண்ட காத்திருப்புக்கு பின்னரே தன் கனவை நனவாக்கிக் கொண்டவர்!
'கடன் வாங்கியாவது வீட்டு விசேஷங்களை ஆடம்பரமா நடத்துறது, கடன் வாங்கி சுற்றுலா போறது மாதிரியான முட்டாள்தனங்கள் எல்லாம் இப்போ நல்லா வாழ்றதுக்கான முயற்சின்னு சொல்லப்படுது; எனக்கு இதுல உடன்பாடு இல்லை!
'நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமோட மகன் மொயின் நவாஸ் கஸ்கர், மதம் சார்ந்த புனிதப்பணியில இறங்கிட்டார்னு செய்தியில படிச்சேன். 'தன்னை வேரோடு பிடுங்கி இன்னொரு இடத்துல ஊன்றிக்க அந்த பையன் எடுத்ததுதான் சிறந்த முயற்சி'ன்னு நான் சொல்வேன்!'
குரல் சொல்லும் குறள்
குறள்: 618
பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்து
ஆள்வினை இன்மை பழி.
பொருள்: நன்மை விளைவிக்கும் விதி அமையாதது குற்றம் ஆகாது; அறிய வேண்டியவற்றை அறிந்து முயற்சி செய்யாது இருப்பதே பெரும் குற்றமாகும்.