PUBLISHED ON : நவ 16, 2025

'மதவெறி' பின்னணியில் ஒரு த்ரில்லர்!
ஜம்முவின் பாரமுல்லாவில் மதம் மாறச்சொல்லி 'பண்டிட்' சமூகம் வதைக்கப்பட்ட, விரட்டப்பட்ட வரலாற்றை ஆன்மா நடமாட்டம், தீவிரவாத பயங்கரம், போலீஸ் விசாரணை கலந்து சொல்லும் திரைக்கதை!
எதையும் காணாமல் போக வைத்து மீண்டும் கண்டெடுத்து கைதட்டல் வாங்கும் 'மேஜிக்' கலைஞனுக்கு, கைவிலங்கு பூட்டும்படியான சம்பவத்தை நிகழ்த்தியது யார்; இந்த 'திகில்' கேள்வியை முன்வைத்து துவங்கும் காட்சிகள், விசாரிக்க வரும் காவல் அதிகாரியை அமானுஷ்ய வீட்டில் தங்க வைத்து பயத்தில் நம்மை வியர்க்க வைக்கின்றன!
ஒளிரும் கண்களோடு கூடிய ஆன்மாவை காவல் அதிகாரியின் மகன் முதன்முதலாக அவ்வீட்டில் சந்திக்கும் கணத்தில், யாருமற்ற இருள் கவ்விய சாலையில் நள்ளிரவில் தனியாக இருசக்கர வாகனத்தில் பயணிக்கையில்... தோளில் விரல்கள் தீண்டும் உணர்வு!
சிறுவர்கள் காணாமல் போவதற்கும், கல்லெறியும் கிளர்ச்சிக்கும், தீவிரவாத செயல்களுக்குமான தொடர்பைச் சொல்வதாக எந்த குப்பையையும் கிளறாமல், 'இவனை எங்கேயோ பார்த்திருக்கிறேனே...' என்று ஒரு யோசனையையும், அடுத்து ஒரு துப்பாக்கிச் சூட்டையும் மின்னலாய் நிகழ்த்தி, நிகழ்கால மதவெறி அழிக்கப்படும் விதம் சொல்லி ஜெயித்திருக்கிறார் இயக்குனர்!
'நான் போராளி' என படம் காட்டுபவனிடம், வெற்று துப்பாக்கி கொண்டு அவன் 'போராளி போர்வை' உருவப்படும் விதம்... நச்! 'நாங்க கடத்தலை சார்...' என அவன் கதறும்வரை, ஆன்மாவின் பக்கம் நம் சந்தேகம் திரும்பாதவாறு பார்த்துக் கொள்ளும் படத்தொகுப்பு... சிறப்பு!
'அன்று பாதிக்கப்பட்ட பண்டிட் சமூக மக்கள் இன்றும் தங்கள் வீடு திரும்பவில்லை' எனும் செய்தி சொல்கிறது க்ளைமாக்ஸ்; இக்காட்சிக்கு கண் கசியும் இந்தியர்களுக்கு இப்படம் பிடிக்கும்.
ஆக...
'கோவையில் நிகழ்ந்தது கார் வெடிப்பு' என இன்னும் சொல்லும் மூளைகளுக்கு இப்படம் நிச்சயமாய் பிடிக்காது!

