PUBLISHED ON : மே 04, 2025

ஒப்பனையை மாற்றி நிற்கும் கங்குவா!
'என்னை நீங்க தம்பியாவே நினைக்கலேல்ல...'ன்னு ஆறு படத்துல சூர்யா கண்கலங்குவாரு இல்லையா; 'சூர்யா சார்... அதே எக்ஸ்பிரஷன் இதுலேயும் வேணும்'னு கார்த்திக் சுப்புராஜ் கேட்டதால, 'என்னை நீ மகனாவே நினைக்கலேல்ல...'ன்னு ஜோஜு ஜார்ஜ்கிட்டே அப்படியே கலங்குறார்!
யெஸ்... ஜோஜு ஜார்ஜ், பாரிவேல் என்கிற சூர்யாவோட வளர்ப்பு தந்தை!
தன் வயித்துல இருக்குற 'சூலாயுத' மச்சத்தை 'வேல்' மச்சம்னு நினை க்கிற மூளைக்கார பாரியோட மனசுல ருக்மணி. ருக்மணிக்கு பாரி சண்டை போடுறது பிடிக்காது; சண்டை போடுறதைத் தவிர பாரிக்கு எதுவும் தெரியாது. இப்படி ஒரு முடிச்சை தமிழ் சினிமாவுல நாம பார்த்ததே இல்லைதானே?
கார்த்திக் சுப்புராஜ் போட்ட இந்த கயித்தை பிடிச்சுக்கிட்டு அப்படியே திரைக்கடல்ல நீந்திப் போய் அந்தமான் தீவு பக்கம் இருக்குற அடிமைகளை பாரி காப்பாத்துறார்; நடுநடுவுல, 'நீ என் பேச்சை மீறி சண்டை செய்றே'ன்னு ருக்மணி கண்ணை கசக்கிட்டே இருக்குது!
இடைவேளைக்கு அப்புறம் அந்த மச்சத்துக்கான பின்னணி கதையை சூர்யாகிட்டே உருட்டி உருட்டி சொல்ற ஆளு, சொல்லி முடிச்சதும் மூஞ்சியை தொங்க போட்டிருப்பான் பாரு...
நம்ம முகத்துக்கு நேரா கண்ணாடி நீட்டுற மாதிரி இருக்கு! 'கனிமா...' பாட்டுல 'ஆத்தி... சந்தன கட்டை' ஒலிக்கிறப்போ மட்டும் விசில் சத்தம்; அந்த பாட்டோட ஒளிப்பதிவு... செம வித்தை!
க்ளைமாக்ஸுக்கு அப்புறம் நடிகர் ஜெயராம் ஒரு ஜோக் சொல்றாப்ல; நகைச்சுவைன்னா என்னன்னே அறியாத பயபுள்ளைக லேசா சிரிக்குதுங்க. கங்குவா வேஷத்தை கலைச்சிட்டதால படம் முழுக்க சூர்யா கத்தலை. அப்புறம்... அந்த 'பட்டுக்குஞ்சம்' மாதிரி இதுலேயும் ஒரு இளையராஜா பாட்டு.
ஆக....
இப்படைப்பை கொண்டாடும் மனம் சுனாமியை பெரும் சிரிப்போடு எதிர்கொள்ளும்!