PUBLISHED ON : பிப் 23, 2025

ஏலேய்... படம் 'ஜாக்பாட்' அடிச்சிருச்சுடோய்!
கல்லுாரியில் 48 அரியர் வைத்து வெளியேறும் ராகவன், வாழ்வில் குறுக்கு வழியில் முன்னேற நினைக்கிறான்; சூழ்நிலை நெருக்கடியால் தான் செய்த குறுக்கு வழி தவறுகளை திருத்த வேண்டிய நிர்பந்தம்; இதன் முடிவில் சொல்லப்படும் கருத்து என்ன?
'டியர் ஸ்டூடன்ட்ஸ்... இந்த கதையில இருந்து நீங்க என்ன கத்துக்கிட்டீங்க' என்று பள்ளியில் ஆசிரியை கேட்க, 'குறுக்கு வழியில் ஜெயிக்கக் கூடாதுன்னு தெரிஞ்சுக்கிட்டோம் மிஸ்' என்று கும்பலாக குழந்தைகள் சொல்வதை நினைவூட்டும் துவக்க பள்ளி கதை;
இதை பொறுப்புடனும், கலகலப்புடனும் சொல்லி இருப்பதால் கவனம் ஈர்க்கிறது. இளமை களைகட்டும் கதையில் 'ரிப்பீட் மோடு' பாடல்கள் இல்லாதது ஏமாற்றம். நாயகன் மனதில் லட்சிய வெறி பிறந்ததும் படித்துக் கொண்டே சண்டை செய்வது, படித்துக் கொண்டே கார் ஓட்டுவது போன்ற காட்சிகள் எல்லாம் 'நட்சத்திர ஜன்னலில்...' பாடலையே துாக்கி சாப்பிடுகின்றன!
பிரதீப் ரங்கநாதன் தன் நடிப்பு நரம்புகளை நன்றாக கட்டுப்படுத்தி காட்சிகளை ரசிக்க வைத்திருக்கிறார். ஞானம் உள்ள கல்லுாரி முதல்வராக மிஷ்கினின் பாவங்கள் கதைக்கு பலம் சேர்க்கின்றன!
காட்சிகளுக்கு இடையிலான சங்கிலி தொடர்பை பொருள்பட இணைக்கிறது அஷ்வத் மாரிமுத்துவின் இயக்கம். நாயகன் நாயகியிடம் மன்னிப்பு கேட்பது, ஜூனியர் மாணவர்களுக்கு அறிவுரை தருவது உள்ளிட்ட முதிர்ச்சியான காட்சிகளுக்கு பாராட்டுகள். இறுதிவரை குதுாகலம் குறையாததால் குறைகளுக்கு குட்டு வைக்கத் தோன்றவில்லை.
ஆக...
'டைம் வேஸ்ட், பைசா வேஸ்ட்' என்று ஸ்டேட்டஸ் பதிவிட துாண்டாத சவாரி!