PUBLISHED ON : பிப் 16, 2025

'2கே மேரேஜ் ஸ்டோரி' தலைப்புக்கான கதை!
தோழி மோனிகாவின் விருப்பத்தை மீறி காதலியை கூட தேர்வு செய்யாதவன் கார்த்திக். பெற்றோரைவிட கார்த்திக்கை அதிகம் நம்புபவள் மோனிகா. திருமணம் என்றொரு விஷயம் வரும்போது இவர்களின் நட்பு என்ன ஆகிறது?
முதல் பாதிக்கும், இரண்டாம் பாதிக்கும் மாறுபட்ட திரைக்கதை; '2கே' கதை என்றால் 'அடல்ட் ஒன்லி' ஆகத்தான் இருக்கும் என்றில்லாதது; மது, புகை, தொழில்நுட்ப மோகம் என்றில்லாமல் சுய சம்பாத்தியத்தில் வாழ்வை கட்டமைத்துக் கொள்ளும் பொறுப்புள்ள இளம் கதாபாத்திரங்கள்; சென்னையை தவிர்த்துவிட்டு கோவையை கதைக்களமாக தேர்ந்தெடுத்தது உள்ளிட்ட அணுகுமுறைகள் வரவேற்கத்தக்கவை!
தங்களுக்கு தாங்களே வரன்கள் பார்த்துக் கொள்ளும் கார்த்திக் - மோனிகா இருவரும், தத்தமது இணையருடன் கலந்து பேசாமலே திருமணத்திற்கு தயாராகின்றனர். திருமணம் பற்றிய இவர்களின் எண்ணம் கதையில் சொல்லப்படவே இல்லை!
காதலியுடன் கார்த்திக் செலவிடும் நேரத்தை மோனிகா தீர்மானிப்பதையும், திருமண முடிவில் தடுமாறும் மோனிகாவுக்கு குருட்டு நம்பிக்கை அளித்து கார்த்திக் சம்மதிக்க வைப்பதையும் நியாயப்படுத்துவது கதையை பலவீனப்படுத்துகிறது!
நான் மகான் அல்ல கதையின் நாயகனுக்கும், '2கே' காலத்து பெண்ணுக்கும் ஜெயப்பிரகாஷ் தான் தந்தை என்றால் இதில் எங்கே தலைமுறை இடைவெளி வருகிறது; பிள்ளைகள் தரப்பில் இருக்கும் தலைமுறை அப்டேட் பெற்றோர் தரப்பில் இல்லை.
ஆண் - பெண் நட்பை முன்னிறுத்தி இயக்குனர்கள் விக்ரமன், சேரன் முயற்சித்த 1980, 90களின் கதையை, சுசீந்திரன் '2கே' வடிவில் முயற்சித்திருக்கிறார்; அவ்வளவுதான்.
ஆக...
தலைப்பை நம்பி 'கார்னர் சீட்' புக் பண்ணி ஏமாந்துடாதீங்க பாஸ்!