PUBLISHED ON : ஏப் 13, 2025

அந்த நாலே நாலு வகையறாவுக்கான படம்!
'நான் பார்த்து ரசித்த பழசுகளால் படம் நிரம்பி இருப்பினும், கை தட்டுவேன்... விசில் அடிப்பேன்' என்பவர்கள், அஜித்தின் கோட் சூட்டையும், கூலிங் கிளாஸ்களையும், கிலோ மீட்டர் கணக்கில் நீளும் அவரது நடையையும், பழசுகளில் இருந்து உருவப்பட்ட பாடல்களையும் வசனங்களையும் ரசிக்கலாம்... ஊளையிடலாம்!
'இப்படி ஒரு காட்சியை எந்த படத்திலும் பார்த்ததில்லை' என எந்த காட்சியைப் பார்த்தாலும் கண்ணீர் வடிக்கும் உணர்ச்சி அடிமைகளுக்காக, போலீஸ் வேனில் கைதியாக கொண்டு செல்லப்படும் மகனை அஜித் மீட்கும் காட்சி செதுக்கப்பட்டிருக்கிறது. உணர்ச்சி அடிமைகள் இந்த காட்சியில் நெஞ்சில் அடித்து கதறி அழலாம்!
அஜித்தை அடிக்க வரும் பெரும் ரவுடிக் கூட்டம், அஜித் ஒவ்வொரு ஆளாய் அடித்து முடிக்கும் வரை தங்களுக்குள் சண்டையிட்டு பின் அஜித்திடம் அடி வாங்கி விழும் அறிவுப்பூர்வ காட்சி, 'தல போடுற சண்டையெல்லாம் வேற லெவல்' என கிறுக்குப் பிடித்து அலைபவர்களுக்கான தீனி!
'த்ரிஷா எப்போதும் அழகு; சிம்ரன்... த்ரிஷாவை விட அழகு' என பேரன் பேத்தி எடுத்த பின்பும் கொண்டாடிக் கொண்டிருக்கும் மதிப்புமிக்க பெரியவர்களை குஷிப்படுத்த... த்ரிஷா, சிம்ரனை இயன்ற மட்டும் இளசாக காட்ட பெரும் முயற்சி எடுத்திருக்கிறது திரைக்கதை!
இந்த நாலு வகையறாவுக்காக எடுக்கப் பட்டிருக்கும் இப்படைப்பின் கதை என்ன என்று அறிந்து கொள்ள முயல்வதும், அறிந்தது போல் அதை விளக்கிச் சொல்ல முயல்வதும் மூக்கு மூடாமல் குப்பை கிடங்கை கிளறுவதற்கு சமம்.
ஆக...
நிமிர்ந்து நிற்கும் துருப்பிடித்த கத்தியில் அமர்ந்து எழுந்த 'அடி ஆத்தேய்...' அனுபவம்!