ADDED : ஜன 26, 2025 07:33 AM

பப்பி, மியாவ் மட்டுமல்ல, ஆடு, மாடு, குதிரை போன்ற விலங்குகளுக்கும் செல்லப்பெயர் வைத்து, வீட்டில் ஒருவராக பாவித்து பலரும் வளர்க்கின்றனர்.
கிராமத்தில் இவைகளுக்கான மருத்துவ உதவிக்கு, மத்திய அரசின் 'ராஷ்டிரிய கோகுல் மிஷன்' திட்டத்தின் கீழ், தமிழக கிராமங்களில், 245 நடமாடும் கால்நடை மருத்துவமனை, ஆம்புலன்ஸ் சேவை வழங்கப்படுகிறது. மாவட்டந்தோறும், ஊராட்சி ஒன்றியங்களில் இருக்கும், இரு கிராமங்களுக்கு, தினசரி ஒரு நடமாடும் மருத்துவ வாகனத்தில், கால்நடை மருத்துவர்கள் சென்று, அங்குள்ள விலங்குகள், செல்லப்பிராணிகளுக்கு, மருத்துவ சிகிச்சை அளிக்கின்றனர்.
இதோடு, விபத்து போன்ற அவசரக்கால சிகிச்சைக்கு, பொதுமக்கள் அழைத்தால், உடனே ஆம்புலன்ஸில் கால்நடை மருத்துவக்குழு சென்று, சிகிச்சை அளிக்கிறது. மத்திய அரசின் இத்திட்டத்தால், விலங்குகள், செல்லப்பிராணிகளுக்கான, மருத்துவ சேவை, கிராமப்புறங்களிலும் சாத்தியமாகியிருக்கிறது. நீங்கள் பயணிக்கும் சாலையில், வெளியிடங்களில் ஏதேனும் செல்லப்பிராணியோ, விலங்குகளோ அடிப்பட்டு உயிருக்கு போராடிய நிலையில், வலியால் துடித்து கொண்டிருப்பதை கண்டால், அருகிலுள்ள மருத்துவமனைக்கு உடனே கொண்டு செல்லுங்கள். அதற்கு சாத்தியமில்லாத சூழலில், உடனே '1962' என்ற எண்ணிற்கு அழைத்து, தகவல் கொடுத்தாலே போதும். வாயில்லா ஜீவன்களின் வலிக்கு, ஒரு போன் அழைப்பு மூலமாகவும், தீர்வு தேடி தர முடியும்.
தகவல்: திருக்குமரன், மண்டல இணை இயக்குனர், கால்நடை பராமரிப்பு துறை, கோவை.