ADDED : ஆக 17, 2024 11:51 AM

'என் மனநிலையை அப்படியே பிரதிபலிக்கும் கண்ணாடியாக இருக்கிறான் இந்த கேரமில். இவனும், சாக்லெட்டும் வந்தபிறகு, வீட்டில் சண்டை போடுவதே குறைந்துவிட்டது' என, சொல்லிக்கொண்டே, கையில் 'கினிபிக்ஸ்' வைத்து கொஞ்சுகிறார் அந்த இளம்பெண்.
அவர் பெயர் காவ்யா. ஈரோடு மாவட்டம், வேப்பம்பாளையத்தை சேர்ந்தவர். தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். கடந்த ஓராண்டாக, கினிபிக் (கினிபன்றி) வளர்க்கும் இவர், நம்மிடம் பகிர்ந்தவை:
நாங்கள் குடியிருக்கும் பகுதியில், மற்றவர்களை தொந்தரவு செய்யாத, அதிக சத்தம் எழுப்பாத ஒரு செல்லப்பிராணியை வளர்க்க விரும்பினோம். பலரும் கினிபிக்ஸ் வாங்கலாம் என பரிந்துரைத்தனர். இதனால், ஒரு ஆண் (கேரமில்), பெண் (சாக்லெட்) கினிபிக் வாங்கினோம். இது வீட்டிற்கு வந்த சில நாட்களிலே எல்லாரிடமும் நெருங்கி பழகிவிட்டது. வேலை முடிந்து வீட்டிற்குள் நுழைந்ததும், கூண்டின் முனையில், இரு கால்களை துாக்கியபடி, கொஞ்ச வேண்டுமென கெஞ்சும்.
நாம் சோகமாக இருந்தால் கையில் எடுத்ததும், தலையை துாக்கியபடி நம் கண்களை பார்த்து கொண்டே இருக்கும். சந்தோஷமாக இருந்தால், கையில் வைத்ததும் விளையாட ஆரம்பிக்கும். வீட்டில் சண்டை போட்டு கத்தினால், கை நீட்டி பேசினால், சூழலை புரிந்து கொண்டு, அதுவும் சோகமாகிவிடும். இதனால், தற்போது வீட்டில் சண்டை போடுவதே குறைந்துவிட்டது,'' என்றார் சிரித்து கொண்டே.
இதன் பராமரிப்பு பற்றி?
*மாதத்திற்கு இருமுறை குளிப்பாட்டினால் போதும். அதிக வெயில், குளிர் தாங்காது. கூண்டு போன்ற அமைப்பில் வளர்த்தால், விளையாடிக்கொண்டே இருக்கும்.
*எப்போதும் சாப்பிட்டு கொண்டே இருக்கும்.சோளம், முட்டைக்கோஸ், கேரட், பப்பாளி, ஆரஞ்ச், பாலக்கீரை விரும்பி சாப்பிடும். உணவு இல்லாத போது, வித்தியாசமாக சத்தம் எழுப்பும்.
*இரு மாதங்களுக்கு ஒருமுறை குட்டிப்போடும். இதற்கு பிறக்கும் போதே பல் முளைத்திருக்கும். பிறந்து 2 மணிநேரத்திலே எழுந்து நடக்க ஆரம்பிக்கும். அடுத்த மூன்று மணி நேரத்திற்குள் சாப்பிட தொடங்கிவிடும்.
*புது ஆட்கள் வீட்டிற்குள் வந்தால், அவர்களின் உடலில் இருந்து வரும் வாசனை பொறுத்து தான், அட்டாச் ஆகும். வீட்டின் சூழலை அறிந்து கொண்ட பிறகு, கூண்டை திறந்து விட்டாலும், கதவை தாண்டி வெளியே போகாது.

