ADDED : ஜூலை 04, 2025 11:45 PM

''காட்டுல இருக்கற சிங்கத்தோட மினியேச்சரை வீட்டுக்குள்ள வளர்க்கணும்னு ஆசைப்பட்டா, சவ்-சவ் பப்பி வாங்கிடுங்க,'' என்கிறார் திருப்பூரை சேர்ந்த லோகேஷ்.
வழக்கறிஞரான இவர், கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளாக, சிட்ஜூ, ரெட்ரீவர், சவ்-சவ் உள்ளிட்ட பல்வேறு இன பப்பிகளை இனப்பெருக்கம் செய்து விற்பனை செய்கிறார். பார்ப்பதற்கு சிங்கக்குட்டி போல காட்சியளிக்கும் சவ்-சவ் பப்பியின் தனித்துவம் குறித்து இவர் நம்மிடம் பகிர்ந்தவை:
இதன் பூர்வீகம், சீனா. இதன் முகத்தில், மூக்கு, வாயை சுற்றிலும் முடி இருப்பதால், சிங்கத்தின் முகத்தை போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும். இதன் ராஜகம்பீர நடை, சிங்கத்தை ஒத்ததாக இருப்பதால், பலரும் விரும்பி வாங்குகின்றனர்.
இதன் நாக்கு, அடர்நீலம், கருப்பு நிறத்தில் இருக்கும். கிட்டத்தட்ட இரண்டரை அடி உயரமும், 35 கிலோ வரை எடையுடன், உடல் முழுக்க முடி இருப்பதால், பராமரிப்பில் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
இது, அதிகம் குரைக்காது; ஆனால், வீட்டை எப்போதும் நோட்டமிட்டு கொண்டேஇருக்கும். சில நேரங்களில், புதிய ஆட்கள் வீட்டிற்குள் வந்தால், எளிதில் அனுமதிக்காது. புதிய ஆட்களிடம் எளிதில் நெருங்காது. பாதுகாவலுக்கு ஏற்றது.
உரிமையாளர் என்ன சொன்னாலும் கேட்கும். இதன் உருவம் தான் சற்று பயமுறுத்துமே தவிர, பப்பியாக இருக்கும் போதே பழகினால், உங்களையே சுற்றி சுற்றி வரும்.
அதிக வெப்பம் கொண்ட இடங்களில் இதை வளர்க்க கூடாது. இதன் உடல் முழுக்க நெருக்கமான முடிகள் இருப்பதால், வீட்டிற்குள்ளே வைத்து வளர்ப்பதே நல்லது. வெயில் நேரத்தில், ஏசி., மின்விசிறி வைக்க வேண்டும்.
அதிகபட்சம் 12 ஆண்டுகள் வரை உயிர்வாழும் இந்த சவ்-சவ் பப்பிக்கு அதிக பயிற்சி அளிக்க வேண்டியதில்லை. எதையும் எளிதில் புரிந்து கொள்ளும் திறன் கொண்டது.
கும்பகர்ணனுக்கே சவால் விடும் அளவுக்கு துாங்கும். ஆனால் விளையாட ஆரம்பித்தால் 'அணில்' போன்று சுறுசுறுப்பாகிவிடும். குழந்தைகள் இருக்கும் வீட்டில் இதை வளர்த்தால், எப்போதும் பிசியாக விளையாடி கொண்டே இருக்கும், என்றார்.