ADDED : ஏப் 12, 2025 08:00 AM

இது, திடீர் சிறுநீரக செயலிழப்பின் (Acute Kidney Injury - AKI) அறிகுறியாக இருக்கலாம். உடனே கால்நடை மருத்துவரிடம் அழைத்து சென்று ரத்த, சிறுநீர் பரிசோதனை செய்வதன் வாயிலாக உறுதி செய்து கொள்ளலாம்.
பொதுவாக, ரத்தத்தில் இருந்து நச்சுப்பொருட்கள், அதிகப்படியான தண்ணீர் மற்றும் உப்பை, சிறுநீர் வழியாக வெளியேற்றி, உடலில் உள்ள கனிமங்களின் அளவை சீராக்கும் பணியை சிறுநீரகங்கள் செய்யும்.
இதை செய்ய முடியாமல் போகும் ஆபத்தான நிலையே, திடீர் சிறுநீரக செயலிழப்பு எனப்படுகிறது.
'ஆன்டிப்ரீஸ்' எனும் நச்சுப்பொருள் ரத்தத்தில் கலத்தல், சிறுநீரகத்தில் கற்கள் உருவாதல், சிறுநீர் குழாயில் அடைப்பு ஏற்படுதல், உடலில் நீர்ச்சத்து குறைதல், திராட்சை, உலர் திராட்சையை பப்பி சாப்பிடுதல் போன்றவையும் காரணமாக இருக்கலாம்.
'லெப்டோஸ்பிரோசிஸ்' எனும் பாக்டீரியா நோய் பப்பியை தாக்கினாலும் சிறுநீரகத்தில் பாதிப்பு ஏற்படும். இந்த பாக்டீரியாவுக்கு எதிரான தடுப்பூசியை செலுத்தினால் இப்பாதிப்பை தடுக்கலாம்.
திடீர் சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டால், பப்பி சோர்வாகவும், பலவீனமாகவும் இருக்கும். வாந்தி, வயிற்று போக்கு ஏற்படுதல், அதிகமாக அல்லது மிகவும் குறைவாக சிறுநீர் கழித்தல், சிறுநீர் கழிக்காமல் இருத்தல், அதிக தாகம், சாப்பிடாமல் இருத்தல் போன்ற அறிகுறிகள் ஏற்படும். இதுதவிர, மூச்சு இரைப்பு, வாயில் புண்கள் ஏற்படுதல், வலிப்பு ஏற்படலாம்.
இந்த அறிகுறிகள் இருந்தால், உடனே மருத்துவரை அணுகி, சிகிச்சை எடுக்க ஏற்பாடு செய்வது அவசியம்.
இதன் முற்றிய நிலையில், 'டயாலிசிஸ்' செய்து, ரத்தத்தில் உள்ள நச்சுப்பொருட்கள் வடிகட்டப்படும். ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை அளித்தால், நோயின் தீவிரத்தை கட்டுப்படுத்த முடியும். வெயில் காலம் துவங்கிவிட்ட நிலையில், பப்பியை அடிக்கடி தண்ணீர் குடிக்க வைத்து, நீரிழப்பு ஏற்படாமல் பார்த்து கொள்வது அவசியம்.
-- மூ.நவீனா, கால்நடை மருத்துவர், சென்னை.

