ADDED : ஆக 17, 2024 11:50 AM

''எங்க வீட்டோட எஜமானி, குட்டி தேவதை, கொஞ்ச நேரம் கண்ணுல படலைன்னாலும் தேடிட்டு ஓடி வந்துடும், சுத்தி சுத்தி வந்து எங்க மனசை கொள்ளையடிச்ச மகாராணி,'' என மூச்சுவிடாமல் பேசிவிட்டு, தாவி குதித்த 'பெர்ஷியன் எக்ஸ்ட்ரீம் பஞ்ச்' மியாவை கொஞ்சினார் கோவை, மசக்காளிபாளையத்தை சேர்ந்த ஷிபா.
இந்த ப்ரீடோட தனித்துவம் பற்றி ஷிபா பகிர்ந்தவை:
*பெர்ஷியன் வெரைட்டியில், 'எக்ஸ்ட்ரீம் பஞ்ச்' மியாவோட முகமே வித்தியாசமாக இருக்கும். உருண்டையான முகம், குட்டியான காது, மூக்கு என, பார்க்கவே அழகாக இருப்பதோடு, மற்ற பூனைகளை காட்டிலும், உரிமையாளர் மீது அதிக பாசம் காட்டும்.
*இந்த குணாதிசயத்திற்காகவே, பின்லாந்து நாட்டிலிருந்து, ஒரு 'பீமேல் மியாவ்' இறக்குமதி செய்தேன். பிரவுன், பிளாக், ஒயிட் கலர்ல இருந்ததால், 'பூப்பி' என பெயரிட்டோம். இதற்கு ஜோடி சேர்க்க, ஒரு 'மேல் மியாவ்' (ஸ்னோபெல்) வாங்கினோம். இந்த இரு பூனைகளும் வந்த பிறகு, அதோட குட்டிகள் என, வீடு முழுக்க பூனைகளின் கால்தடமாகிவிட்டது.
* ஒரிஜினல் ப்ரீட் என்பதால், நெருங்கிய நண்பர்கள், உறவினர்களுக்கு மட்டும், பூனைக்குட்டிகள் கொடுக்கிறோம். உணவு, பராமரிப்பு என அக்கறை எடுத்து கொண்டால், உரிமையாளர் மீது அன்பை பொழியும்.
*வீட்டிலுள்ளோரிடம் எளிதில் நெருங்கி பழகுவதோடு, குழந்தைகள் இருந்தால், கொள்ளை பிரியம் காட்டும். என் ஐந்து வயது மகன் அப்ராஷ், பள்ளியில் இருந்து எப்போது வீடு திரும்புவான் என, 'கேட்' அருகிலே நின்று எட்டிப்பார்க்கும். வீட்டிற்குள் நுழைந்ததும், அவனோடு சேர்ந்து ஷோபா, கட்டில் என குதித்து விளையாடும்.
*வீட்டில் தனியாக இருப்பவர்கள், பூனை வளர்க்க ஆசைப்பட்டால், இந்த ப்ரீட் பெஸ்ட் சாய்ஸ். என்னதான் வீட்டிற்கே ராஜா, மகாராணி போல நடந்து கொண்டாலும், உரிமையாளரையே சுற்றி சுற்றி வரும். பராமரிப்புக்கும் பெரிதளவில் மெனக்கெட வேண்டியதில்லை.

