காணாமல் போன செல்லக்கிளி.. விமானத்தில் பறந்துவந்த தொழிலதிபர்!
காணாமல் போன செல்லக்கிளி.. விமானத்தில் பறந்துவந்த தொழிலதிபர்!
ADDED : ஏப் 26, 2025 07:44 AM

ஈரோட்டில் உள்ள 'மில்கி மிஸ்ட்' நிறுவனர் சதீஷ்குமார். இவர் வீட்டில் ஆசை ஆசையாய் வளர்த்து வந்த 'ஆப்ரிக்கன் கிரே பேரட்' (நெல்சன்) சமீபத்தில் காணாமல் போனது. அதிர்ச்சியுடன் வீடெங்கும் தேடித்திரிந்த சதீஷ்குமாருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. 'எங்கே போயிருக்குமோ... என்னவாகியிருக்குமோ...? என்ற ஒரு வித பதற்றத்துடன் ஊர் முழுக்க அலைந்து திரிந்து தேடினார். தான் அலுவலகத்திற்கு போகும் வழி, வரும் வழியிலுள்ள மரங்களில் எல்லாம் நெல்சனை பார்வையால் துழாவினார். எங்கேயும் இல்லை. ஊரெங்கும் 'நெல்சன்' போட்டோ மற்றும் தனது தொலைபேசி எண்ணுடன் போஸ்டர் ஒட்டினார்....
அப்புறம் என்ன ஆனது?
அவரே 'செல்லமே' பக்கத்திற்கு நம்மிடம் பகிர்ந்தவை...
என் மகன் சஞ்சய் தான், நீண்ட தேடலுக்கு பின், ஆப்ரிக்கன் கிரே பேரட் (நெல்சன்) வாங்கினான். அதற்கு தற்போது ஆறு மாதங்களாகின்றன. கையில் உணவளித்து பழக்கப்படுத்தியதால், என்னுடன் எளிதில் நெருங்கிவிட்டது. தினசரி காலையில், என் குரல் கேட்டதும் வந்து தோளில் அமர்ந்து கொள்வான். தண்ணீர் குடிக்க வேண்டுமென கேட்பான். சிறிது நேரம் அவனுடன் விளையாடிவிட்டு தான் வாக்கிங் செல்வேன். அலுவலகம் செல்லும் வரை நெல்சன் என்னையே சுற்றி சுற்றி வருவான். இரவில் மட்டுமே கூண்டில் அடைத்து வைத்திருப்போம். மற்ற நேரங்களில், வீட்டின் எல்லா அறைகளிலும் அவன் பறந்து விளையாடி கொண்டிருப்பான்.
கடந்த 16ம் தேதி, வீட்டில் பெயின்டிங் வேலை நடந்த போது கதவை திறந்து வைத்திருந்ததால், ஒவ்வொரு அறையாக சுற்றி கொண்டிருந்த நெல்சன், திடீரென வெளியில் பறந்துவிட்டான். அப்போது வேலை நிமித்தமாக சென்னை சென்றிருந்தேன். சிறிது நேரம் நெல்சனை காணவில்லை என்றதும், அனைத்து அறைகளிலும் தேடி கிடைக்காததால் எனக்கு தகவல் அளித்தனர். என்னால் எந்த வேலையிலும் ஈடுபட முடியவில்லை. உடனே சென்னையில் இருந்து விமானத்தில் கிளம்பி, வீடு வந்து சேர்ந்தேன்.
பறவையை எப்படி கண்டுபிடிப்பது என்பது குறித்து, வனத்துறை அலுவலர்கள், பறவை ஆர்வலர்கள் என பலரிடம் பேசினேன். நிறைய தன்னார்வலர்களின் தொடர்பு இருந்ததால், நெல்சனின் புகைப்படம், சில அடையாளங்களை தெரிவித்து தேடுமாறு கூறினேன். இச்செய்தி, சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டது. விளம்பர நோட்டீஸ் அச்சடித்து, வீட்டை சுற்றியுள்ள பொது இடங்கள், விநியோகிக்க ஆரம்பித்தோம். ஒருநாள் முழுக்க தேடியும், எந்த தகவலும் கிடைக்காததால் மிகுந்த சோர்வுக்குள்ளாகினோம்.
எனக்கு, டைரி எழுதும் பழக்கமுண்டு. வேலை நிமித்தமாக, ஒருநாள் நெல்சனை பார்க்கவில்லை என்றாலும், என் டைரியில் குறிப்பிட்டு மன்னிப்பு கடிதம் எழுதுவேன். அந்தளவுக்கு, அவன் மீது பாசம் வைத்திருக்கிறேன். நெல்சன் காணாமல் போன அன்றைய இரவு மிக நீண்டதாக இருந்தது. அடுத்தநாள் எழுந்து என்ன செய்வதென்றே தெரியவில்லை. சீக்கிரமாக அலுவலகம் சென்று, வேலையில் கவனத்தை திசைதிருப்பினேன். மதியம் 2:00 மணிக்கு மேல் ஒரு போன் அழைப்பு வந்தது. உங்கள் நெல்சன் போல ஒரு பறவை இருக்கிறது. நேரில் வந்து அடையாளம் காணுமாறு தெரிவித்தனர்.
வீட்டிலிருந்து 3 கிலோ மீட்டருக்கு அப்பால், ஒரு கோவில் மரத்தின் கிளையில் அமர்ந்திருந்தது. அது நெல்சன் தான் என்பதை உறுதி செய்துவிட்டோம். என்னை விட்டு பிரிந்ததை எப்படி உணர்கிறது என அறிவதற்காக, என் டிரைவரை வீடியோ எடுக்க சொன்னேன். என் மகன் சஞ்சய் விசில் அடித்ததும், அது அடையாளம் கண்டு கொண்டது. நான் 'நெல்சன்' என்றதும் மறுவினாடியே, சிறகடித்து பறந்து வந்து தோளில் அமர்ந்துவிட்டது. அக்காட்சியை தான், சமூக வலைதளங்களில் பலரும் பகிர்ந்தனர்.
வீட்டிற்கு வந்து இருநாட்கள் வரை அவனிடம் ஒருவித பயம் கலந்த நடுக்கம் இருந்தது. என்னை பார்க்காமல், மிகுந்த சிரமத்திற்கு ஆளானதை உணர முடிந்தது. தற்போது மீண்டும் இயல்பாக, வீட்டின் எல்லா அறைகளிலும், சிறகடித்து பறக்கிறான். இந்த ஒன்றரை நாளில், ஏற்பட்ட உணர்வு போராட்டத்தை வார்த்தைகளால் விளக்கவே முடியாது. இனி இவனை தொலைத்துவிடவே கூடாதென்ற எண்ணம் மட்டுமே மேலோங்கி இருக்கிறது, என்றார்.
அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்?

