
மழைக்கு எதையாவது சூடாக செய்து தரும்படி, உங்கள் பப்பி அடம்பிடிக்கிறதா. எதை சாப்பிட கொடுத்தாலும் மறுத்தால், இந்த சூப் செய்து கொடுங்கள். நொடியில் காலி செய்துவிடும். காய்கறிகள், முட்டை அல்லது இறைச்சி என, எதில் வேண்டுமானாலும் சூப் தயாரிக்கலாம். உங்கள் பப்பிக்கு பிடித்த காய்கறி அல்லது இறைச்சியை முதலில் வேகவைத்து தனியாக வைத்து கொள்ளுங்கள். ஒரு பாத்திரத்தில் சூப் செய்ய தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, அடுப்பில் வைத்து நன்கு கொதிக்கவிடவும்.
இதில், இரு முட்டைகளை ஊற்றி, நன்கு கிளறி விடவும். சிறிது மஞ்சள் துாள், உப்பு, மிளகு பொடி சேர்த்து, பின்பு வேகவைத்து தனியாக வைத்துள்ள காய்கறி அல்லது இறைச்சியை இக்கலவையில் சேர்க்கவும். சிறிது கொத்தமல்லி இலைகளை போட்டு, ஓரிரு நிமிடங்களில் இறக்கிவிடவும். இளஞ்சூட்டில் இதை குடிக்க கொடுத்தால், பப்பி ருசித்து ரசித்து சாப்பிட்டு, வாலை ஆட்டி நன்றி சொல்லும்.

