ADDED : செப் 27, 2025 01:19 AM

''சரிவிகித உணவு, உடற்பயிற்சி, பராமரிப்பு இம்மூன்றும் தான் பப்பியின் ஆரோக்கியத்தை தீர்மானிக்கும். சிலர், ஓட்டல் உணவு, பொட்டலங்களில் அடைத்து விற்கப்படும் நொறுக்கு தீனிகளை கொடுக்கின்றனர். இவை மெல்ல கொல்லும் விஷம் என்பதால், செல்ல பப்பியின் சராசரி ஆயுட்காலத்தை நாமே குறைத்துவிடுகிறோம்,'' என்கிறார், சென்னையை சேர்ந்த, செல்லப்பிராணிகளுக்கான ஊட்டச்சத்து நிபுணர் கார்த்திக்பிரியன்.
'பாஷ் நேச்சுரா' (Pawsh Natura) என்ற செல்லப்பிராணிகளுக்கான உணவு தயாரிக்கும் நிறுவனத்தின் உரிமையாளரான இவர், வீட்டிலேயே பப்பிக்கு எப்படி ஆரோக்கியமான உணவு தயாரித்து கொடுப்பது என்பது குறித்து நம்மிடம் பகிர்ந்தவை:
* பப்பியின் ஆரோக்கிய வளர்ச்சியை தீர்மானிக்கும் முதன்மை ஊட்டச்சத்தாக இருப்பது புரோட்டீன். இது, 20 - -25 சதவீதம், தினசரி உணவில் இருக்க வேண்டும். சிக்கன், மீன், முட்டை, யோகட் சாப்பிட கொடுக்கலாம். பப்பியின் தசை வளர்ச்சிக்கு உதவும். எப்போதும் சுறுசுறுப்பாக இயங்க வைக்கும்.
பப்பியின் தோல், முடி வளர்ச்சி, மூளை இயக்கத்திற்கு, கொழுப்பு சத்து தேவை. தினசரிஉணவில், 10-15 சதவீதம் இருக்க வேண்டும். மீன் எண்ணெய், சிக்கன் தோல், முட்டை மஞ்சள் கரு, சிறிது தேங்காய் எண்ணெய் உணவில் சேர்ப்பது அவசியம்; இது முக்கிய ஆற்றலாகவும் செயல்படுகிறது.
பப்பியின் செயல் இயக்கத்திற்கு கார்போ ஹைட்ரேட் உதவும். இதற்கு பச்சை அரிசி, ஓட்ஸ், சர்க்கரைவள்ளி கிழங்கு சமைத்து கொடுக்கலாம். சிலர் அரிசி உணவு மட்டுமே பப்பிக்கு கொடுப்பதால் தான் அவை எளிதில் பருமனாகி, சோர்வடைந்து விடுகிறது. இது, தினசரி உணவில், 30 சதவீதம் வரை இருப்பதே நல்லது.
கேரட், பீட்ரூட், மஞ்சள் பூசணி, குடைமிளகாய், பசலைக்கீரை, ப்ரொக்கோலி, பீன்ஸ் போன்றவற்றை அடிக்கடி பப்பியின் உணவில் சேர்க்க வேண்டும். இதிலுள்ள விட்டமின்கள், பப்பிக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து செரிமானத்திற்கும் உதவுகிறது.
பப்பியின் நரம்பு, எலும்பு, தசை வளர்ச்சிக்கு தாதுக்கள் அவசியம் சேர்க்க வேண்டும். தினசரி அரை வாழைப்பழம் பப்பிக்கு கொடுப்பதால், பொட்டாசியம் சத்து கிடைக்கும். மருத்துவரின் பரிந்துரைப்படி, சில தாதுக்களை, டானிக் வடிவில் கடைகளில் வாங்கி உணவில் சேர்க்கலாம்.
தயிரில் நிறைய நுண்ணுாட்ட சத்துகள் இருந்தாலும், சில பப்பிகளுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்துகிறது. எனவே எந்த புதிய உணவாக இருந்தாலும் சிறிது கொடுத்து, மூன்று நாட்கள் வரை அதன் உடல் இயக்கத்தில் எந்த மாறுதலும் இல்லாவிடில் மட்டுமே தொடர்ந்து கொடுக்க வேண்டும்.
பிறந்து ஆறு மாதம் வரை, பப்பிக்கு நுண்ணுாட்ட சத்துகள் மிகுந்த உணவு கொடுத்தால் மட்டுமே, அதன் உடல் வளர்ச்சி சீராக இருக்கும். இச்சமயத்தில், வீட்டில் சமைக்கும் உணவுகளை காட்டிலும், பப்பிக்கான பாக்கெட் உணவுகளை கொடுப்பதே சிறந்தது.
ஆறு மாதத்திற்கு பின், தினசரி ஒருவேளை வீட்டில் சமைத்து உணவு கொடுக்கலாம். தினசரி இறைச்சி உணவு கொடுக்க முடியாதவர்கள், ரசாயன பொருட்கள் சேர்க்காமல் அதை பதப்படுத்தி கொடுக்கலாம். இதற்கு மார்கெட்டில் 'டி ஹைட்ரேட்' (dehydrate) ட்ரீட்ஸ் உள்ளது. இதில், இறைச்சியில் உள்ள நீர் மட்டும் வெளியேற்றி, சத்துக்கள் மாறாமல் உலர வைத்து தருவதால், நீண்டநாட்களுக்கு கெடாது.
பப்பிக்கு எந்த புதிய உணவை கொடுப்பதாக இருந்தாலும், மருத்துவரின் ஆலோசனை பெறுவது அவசியம். உணவு விஷயத்தில் அக்கறை எடுத்து கொள்வதால், பப்பிக்கு மட்டுமல்ல, அதனிடம் இருந்து உங்களுக்கும் எந்த நோய் தொற்றும் பரவாது என்பதை மறந்துவிட வேண்டாம், என்றார்.