
காதல், நட்பு, பகை, துரோகம் என, எத்தனையோ முகங்களுக்கு, மேடை தந்து வெளிச்சம் காட்டியிருக்கும் உலக சினிமா, கற்பனைக்கு எட்டாத கார்டூன் படங்களுக்கும், தனி ரசிகர் வட்டாரத்தை உருவாக்கி உள்ளது.
இதிலும், செல்லப்பிராணிகளின் உணர்வுகளை கடத்தும் கதைகள், சூப்பர் டூப்பர் ஹிட் அடித்துவிடுகின்றன. இந்த வரிசையில் புத்தாண்டில் வெளியாகவுள்ளது, 'டாக் மேன்'- கார்டூன் திரைப்படம்.
ஒரு போலீஸ் அதிகாரியும் அவரின் விசுவாசமான நாயும், ஒரு விபத்தில் சிக்கி கொள்வர். இருவரில் ஒருவரை மட்டுமே காப்பாற்ற முடியுமென்கிற சூழலில், மருத்துவர்கள், பப்பியின் தலையை, போலீஸ் அதிகாரியின் உடலில் பொருத்திவிடுவர். பப்பி பாதி, மனிதன் மீதி என்கிற கற்பனை உருவம் தான், டாக் மேன்.
ட்ரீம்ஸ் ஒர்க் அனிமேஷன் நிறுவனம் தயாரிப்பில், இயக்குனர் பீட்டர் ஹாஸ்ட்லிங் இயக்கத்தில், ஆங்கில மொழியில், டாக் மேன் திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இதன் டிரைலர், சமீபத்தில் வெளியான நிலையில், ஒரு கோடிக்கும் அதிகமான பார்வைகளை கடந்துள்ளது.
டாக்மேனுடன், வில்லன் பூனைகளான பீட்டே, லிட் பீட்டே செய்யும் குறும்புத்தனங்களை டிரைலரில் பார்த்து ரசிக்கலாம். விலங்குகளின் கற்பனை உலகத்திற்குள், நம்மையும் சேர்த்து பயணிக்க வைத்துள்ளாரா, இயக்குனர் என்பதை அறிய, புத்தாண்டு வரை காத்திருப்போம்.