ADDED : ஜூலை 12, 2025 01:28 AM

அது ஒரு மழைக்காலம். இரவு ஒரு மணிக்கு ஒரு போன் அழைப்பு வருகிறது. உடனே வண்டியை முறுக்கி கொண்டு சென்றால், சாலை விபத்தில், ஒரு கால் துண்டிக்கப்பட்ட நிலையில் பப்பி குரைத்துக்கொண்டிருந்தது. அள்ளி கொண்டு மருத்துவமனை விரைந்தோம். அறுவை சிகிச்சை செய்ய முடியவில்லை. மூன்று கால்களுடன் அதை உயிர்பிழைக்க வைக்க படாதபாடுபட்டோம்.
இப்படி, நிறைய சம்பவங்களை அடுக்கி கொண்டே போகலாம். இதுபோன்ற தருணங்களில், எனக்குள் எழும் கேள்வி ஒன்று தான். ஒரு ஜீவன் வலியால் துடிப்பதை பார்த்தும் எப்படி கடந்து செல்ல முடிகிறது என்பதே... ஆரம்பத்தில் இதை ஜீரணிக்க முடியாமல், மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாகியிருக்கிறேன். இப்போது இதெல்லாம் பழகிவிட்டது என, ஆரம்பித்தார், விலங்கு நல ஆர்வலரும், பொறியியல் பட்டதாரியுமான ஓவியா.
அவருடன் ஒரு சந்திப்பு:
எனது சொந்த ஊர் வேலுார். அப்பா ராணுவத்தில் பணிபுரிகிறார். அம்மா இல்லத்தரசி. இருவருமே விலங்கு நல ஆர்வலர்கள். தெரு நாய்களுக்கு உணவளிப்பது வழக்கம். தெரு நாய்கள் அடிபட்டிருந்தால் மருத்துவமனைக்கு அழைத்து செல்வது முதல், குணமாகும் வரை கவனிப்போம்.
எங்கள் வீட்டில் இடமில்லாததால், வாடகை இடத்தில் தேவையான வசதிகளை ஏற்பாடு செய்தோம். தற்போது 150 நாய்கள் இருக்கின்றன. நான், இன்ஜினியரிங் படித்தும் இவற்றையெல்லாம் யார் கவனிப்பார் என்ற கேள்வி எழுந்ததால், நான் வேலைக்கு செல்லவில்லை.
எப்படி பராமரிக்கிறீர்கள்?
நானும், தம்பியும் தான். 150 நாய்களுக்கும், இருவேளை உணவு தயாரிக்க வேண்டும். தடுப்பூசி போடுவது, சிகிச்சைக்கு அழைத்து செல்வது, காப்பகத்தை சுத்தப்படுத்துவது என, எல்லா வேலைகளும் இருவர் மட்டுமே செய்கிறோம். நாங்கள் இல்லாத போது, முழு பொறுப்பும் அம்மாவே எடுத்து கொள்வார்.
இங்குள்ள பப்பிகளுக்கு, ஒருநாளைக்கு 50 கிலோ அரிசி, 15 கிலோ சிக்கன் தேவை. நாளொன்றுக்கு 3500 ரூபாய் செலவு. தன்னார்வலர்கள் உதவியுடன் சமாளிக்கிறோம். காப்பகத்தை பராமரிக்க வங்கியில் கடன் வாங்கியிருக்கிறோம். ஒரு உயிர் உணவில்லாமல், காயங்களுடன் வலியால் துடிப்பதை பார்க்க முடியவில்லை. இதுவரை, ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஜீவன்களுக்கு மறுவாழ்வு அளித்துள்ளோம். இதில் ஆத்ம திருப்தி.
உங்களின் எதிர்பார்ப்பு?
வேலுாரில், 'ப்ளூ கிராஸ்' போன்ற அமைப்பு இல்லை. அரசு கால்நடை மருத்துவமனையில் எக்ஸ்ரே, ரத்த பரிசோதனை செய்யும் வசதி இல்லை. அவசர சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைக்கே செல்ல வேண்டும். அடுத்த கட்ட சிகிச்சைக்கு சென்னை செல்ல வேண்டும். இக்குறைகளை போக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்களை 91596 62109 எண்ணில் தொடர்பு கொள்ளலாம், என்றார்.