'முட்டையை வாயில் வைத்துவிட்டு சிறிதுநேரம் கழித்து பார்த்தால்...'
'முட்டையை வாயில் வைத்துவிட்டு சிறிதுநேரம் கழித்து பார்த்தால்...'
ADDED : செப் 27, 2025 01:21 AM

''விபத்து, வேட்டையாடுதல், மீட்பு பணிகளின் போது அடிபட்டு கிடக்கும் சிறிய வகை விலங்குகளுக்கு, காயம் ஏற்படாமல், வாயில் கவ்வி கொண்டு வந்து உரிமையாளரிடம் ஒப்படைக்கும் திறன், கோல்டன் ரெட்ரீவருக்கு மட்டுமே இருக்கிறது,'' என்கிறார், 'ப்ரீடர்' ஷில்பா.
சென்னையில், 'ஷில்ப்ஸ் பா லைப்ஸ்' (Shilps paw lifes) என்ற பெயரில், பிரத்யேக கென்னல் வைத்திருக்கும் இவர், எம்.பி.ஏ., பட்டதாரி. கோல்டன் ரெட்ரீவர் பப்பியின் தனித்துவம் குறித்து இவர் நம்மிடம் பகிர்ந்தவை:
வேட்டையாட துப்பாக்கியுடன் காட்டிற்குள் செல்லும் போது உரிமையாளருக்கு உதவ, ரெட்ரீவர், பிளஷிங் ஸ்பானியல்ஸ் மற்றும் பாயிண்டிங் இன பப்பிகளை பயன்படுத்துவர். இதில், பிளஷிங் ஸ்பானியல், புதர், மறைவிடங்களில் ஒளிந்திருக்கும் பறவைகளை இனம் காண உதவும். பாயிண்டிங் இன பப்பிகள், வித்தியாசமான உடல்மொழி, ஒலி எழுப்புதல் வாயிலாக, விலங்குகள் பதுங்கியிருப்பதை காட்டி கொடுக்கும். ஆனால் இந்த ரெட்ரீவர் இன பப்பி, துப்பாக்கியால் வீழ்த்தப்பட்ட பறவையை அப்படியே வாயால் கவ்விக் கொண்டு வந்து, உரிமையாளரிடம் ஒப்படைக்கும்.
ரெட்ரீவர் இன பப்பியின் பற்கள், எதையும் காயம் ஏற்படுத்தாமல் கவ்வி பிடிக்கும் வகையில் தான் இருக்கும். வெளிநாடுகளில், மீன்பிடிக்க இப்பப்பியை பயன்படுத்துவர். அதன்வாயில் இருக்கும் மீனை, எவ்வித காயங்களும் இன்றி, உயிருடன் அப்படியே உரிமையாளரிடம் ஒப்படைத்துவிடும்.
இது, மனிதர்களையும் கடிக்காது. அது கவ்வி பிடிப்பதை விரும்பாமல் பயத்தால் நீங்கள் வேகமாக இழுத்ததால், கீறல்கள் ஏற்படலாம். நீங்கள் ஒரு முட்டையை இதன் வாயில் வைத்துவிட்டு சிறிதுநேரம் கழித்து பார்த்தால், அதை அப்படியே வைத்திருக்கும். உரிமையாளர் உத்தரவிடாமல், வாயில் உள்ளதை, அப்படியே வைத்திருக்கும்.
இந்த இன பப்பியை, யார் வேண்டுமானாலும், எந்த சூழலிலும், எந்த வகையான வீட்டிலும் வளர்க்கலாம். உரிமையாளரிடம் மிக பணிவாக நடந்து கொள்ளும். குடும்பத்தில் உள்ளோரிடம் எளிதில் நெருங்கிவிடும். தேவையில்லாமல் குரைப்பது, தாவுவது போன்ற செயல்களில் ஈடுபடாது. தனியாக வசிக்கும் வயதானவர்கள் செல்லப்பிராணி வளர்க்க ஆசைப்பட்டால், கோல்டன் ரெட்ரீவர் சிறந்த தேர்வாக இருக்கும்.
இது கிட்டத்தட்ட 25 இன்ஞ் வரை வளரும். 30-70 கிலோ வரை உடல் எடை கொண்டிருக்கும். உடல் முழுக்க மென்மையான முடியுடன், சற்று எடையுடன் இருப்பதால், பார்க்கவே அழகாக இருக்கும். அதீத புத்திசாலி என்பதால், எதை சொல்லி கொடுத்தாலும் உடனே பின்பற்றும். உரிமையாளருக்கு எந்த தொந்தரவும் தராமல், அன்பை மட்டுமே அள்ளி கொடுப்பதால், குணத்தில் சொக்கத்தங்கம் என்பதால் தான், பெயரும் 'கோல்டன் ரெட்ரீவர்' என வைக்கப்பட்டது என்றார்.