தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/செல்லமே/ உணர்ச்சி பிரவாகத்தில்... உயிர்களின் காதல் மொழி

 உணர்ச்சி பிரவாகத்தில்... உயிர்களின் காதல் மொழி

 உணர்ச்சி பிரவாகத்தில்... உயிர்களின் காதல் மொழி


ADDED : பிப் 14, 2026 05:47 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 14, 2026 05:47 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இந்த காந்தத்தால் ஈர்க்கப்படாத இதயங்கள் இப்பூமியில் இல்லவே இல்லை. உணர்ச்சி கொள்ள செய்கிற நரம்பு மண்டலம் கொண்ட, எந்த உயிரினத்தின் உடலிலும் காதல் வீணை மீட்டப்படுகிறது. உணவு போல, காதல் கொள்வதும் உயிரினங்களின் இயக்கத்திற்கு அவசியமாகிறது. நம்மை போலவே, மற்ற ஜீவன்களின் காதல் மொழியும், அவை வெளிப்படுத்தும் சமிக்ஞையும் சுவாரஸ்யமானவை.

அவற்றில் சில…

காதல் அம்புவிடும் நத்தை

* மேகம் கருக்கி மின்னலடிக்கும் நேரத்தில், குதுாகலமாகும் ஆண் மயில்கள், தன் தோகையை விரித்தாடி நடனமாடுவது, பெண் மயில்களை கவர்ந்திழுப்பதற்கும் தான்.

* 'கொக்கரக்கோ' என சிலிர்த்தபடியே, கோழியின் அருகே சென்று கூவும் சேவலின் காதல் கீதத்தில், ராகத்தோடு தாளமும் சேர்ந்திருக்கும்.

* பசி, தாகம் மறந்து ஜோடி தேடி சென்று தவம் கிடக்கும் ஆண் நாய்களை நீங்கள் அடிக்கடி பார்த்திருப்பீர்கள்.

* கடலில் வாழும் பல்சுணை புழுக்கள், தன் இணையிடம் காதலை வெளிப்படுத்த, கடல்பரப்புக்கு மேலே வந்து குப்புற கவிழ்ந்தபடியே நீச்சலடித்து சாகசம் செய்யும்.

* சினிமாக்களில் ஹீரோயினை பார்த்ததும், காதல் அம்பு தைத்துவிட்டதாக ஹீரோ பிதற்றுவார். ஆனால் உண்மையிலே நத்தையின் உடலில் அம்புப்பை என்ற ஓர் உறுப்பு உள்ளது. இதில், அம்பு போன்ற நீண்ட மெல்லிய சற்று கடினமான அமைப்பை, ஆண் நத்தையானது இனப்பெருக்க காலத்தில், பெண் நத்தையை நோக்கி வீசும். அந்த அம்பால் தாக்கப்பட்டதும், பெண் காதலுக்கு பச்சை கொடி காட்டிவிடும்.

'டூயட்' பாடும் தவளை

* மழைக்காலங்களில் தவளை சத்தமிட்டு டூயட் பாடுவது, தன் இணையை அழைக்கும் ரகசிய மொழி. இதற்காக பிரத்யேக குரல் பைகள் அதற்குண்டு.

* வலையின் நடுவே இருக்கும் பெண் சிலந்தியை தேடி செல்லும் ஆண், 'காபரே' நடனத்தை போலவே உடலை வளைத்து, கால்களை அசைத்து, தன் திறனை வெளிப்படுத்தி, காதல் நடனமாடும்.

* நமக்கு குறி சொல்வதாக நம்ப வைக்கப்பட்ட, ஆண் பல்லியின் 'கெவிலி' சத்தம், எதிர்பாலினத்தை கவர்வதற்கான குறிப்பு மொழி. இனி பல்லி சத்தமிட்டால், அதை தொந்தரவு செய்துவிடாதீர்கள்.

மின்மினியின் சிக்னல்

பூச்சிகளின் காதல் மொழி சற்று வித்தியாசமானது. இரையை தேடி பிடித்து, தன் இணைக்கு கொடுத்து, காதலை வெளிப்படுத்துவதில் அவை கில்லாடி.

வண்ணத்துப்பூச்சியின் உடலில் ஒருவகையான வாசனை செதில்கள் உள்ளன. தன் இணையின் அருகில் செல்லும் போது, தன் உடலிலுள்ள வண்ணங்கள் தெரியும் வகையில் சிறகை விரித்து, வாசனையை வெளிப்படுத்தி கவர்ந்திழுக்கும்.

ஆண் ஈக்கள் சிறகுகளை ஒருவிதமாக அதிர்வித்து கொண்டு பறந்தபடியே, பெண் ஈக்களை கவர்ந்திழுக்கும். மின்மினி பூச்சிகள், தம் ஒளிவீசும் அமைப்பினால், ஒன்றுகொன்று சிக்னல் கொடுத்து கொள்ளும்.

காதல் கடவுச்சொல்

இப்படியாக, இப்பூமியில் பிறக்கும் ஒவ்வொரு உயிரினமும், அன்பை வெளிப்படுத்தவும், அதை பகிரவும், தனக்கென்ற தனித்துவ காதல் கடவு சொல்லை வைத்துள்ளன. அவற்றுக்குள் பகை, வன்மம், துரோகம், பழிவாங்கும் உணர்வில்லை. அவற்றின் உலகம் அன்பால் கட்டமைக்கப்பட்டது. அதற்குள் நாம் நுழைய வேண்டுமெனில், விலங்குகள் மீது கொஞ்சம் கருணையும், இரக்கமும் இருந்தாலே போதும்.

அன்பின் வழியது உயிர்நிலை!

- எல். பிரைட்,

அறிவியல் ஆசிரியர் (ஓய்வு), தேவக்கோட்டை.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us