ஐ.டி., ஊழியரின் 'டப்பிங் டப்பா'; ரசிக்கும்போது ஒரே சிரிப்பப்பா!
ஐ.டி., ஊழியரின் 'டப்பிங் டப்பா'; ரசிக்கும்போது ஒரே சிரிப்பப்பா!
ADDED : ஏப் 26, 2025 07:34 AM

செல்லப்பிராணிகளின் வீடியோக்களில் அதன் உடல் மொழிக்கேற்ப, நகைச்சுவையாக பேசி, நம்மை வயிறு குலுங்க சிரிக்க வைத்ததில், 'டப்பிங் டப்பா' (DubbingDappa) சேனலுக்கு முக்கிய பங்கு இருக்கிறது.
இச்சேனலில் வரும் குரல் உங்களுக்கு பரீட்சயமாகி இருக்கும். அதற்கு சொந்தக்காரர், சென்னையை சேர்ந்த வருண்விக்னேஷ். இவரிடம், 'செல்லப்பிராணிகளின் மைண்டு வாய்ஸ், உங்களுக்கு மட்டும் எப்படி கேட்கிறது,' என்றதும், சிரித்தபடியே பேச ஆரம்பித்தார்.
அவர் நம்மிடம் பகிர்ந்தவை:
ஐ.டி., துறையில் பணியாற்றுகிறேன். மன அழுத்தம், பணிப்பளு என்ற மூட்டைகளை தோளில் சுமக்க வேண்டியதாயிற்று. அதிலிருந்து விடுபட எடுத்த முயற்சியாக தான் இச்சேனல் உருவானது. இதில் தனித்துவமாக தெரிய மக்களை ரசிக்க வைக்க, விலங்குகளின் முகபாவனைக்கேற்ப, டயலாக் எழுதி, பேசினால் எப்படி இருக்கும் என்ற எண்ணம் தோன்றியது. என் முதல் வீடியோவுக்கே, ஏகோபித்த ஆதரவு கிடைத்தது.
வெளிநாடுகளில், செல்லப்பிராணிகள் செய்யும் சேட்டை, வித்தியாசமான முகபாவனையை, சமூக வலைதளங்களில் வீடியோவாக பதிவிடுகின்றனர். அவற்றை டவுன்லோடு செய்து வீடியோவில் வரும் நாய், பூனை, குரங்கு, கொரில்லா, பறவைகளின் முகபாவனைக்கேற்ப, இப்படித்தான் யோசித்திருக்கும் என்ற கணிப்பில், காமெடியாக டயலாக் எழுதுவேன்.
சில வினாடிகள் ஓடும் ஒரு வீடியோவுக்கு, கிட்டத்தட்ட 2 மணி நேரம் வரை செலவிடுவேன். ஏற்கனவே பேசிய டயலாக்காக இல்லாமல், மக்களுக்கு பிடித்தமாதிரி, ரசிக்கும் வகையில், அதை மாற்றுவதால் தான், லட்சக்கணக்கான மக்களிடம் கொண்டு போய் சேர்க்க முடிகிறது.
கவலை, மன அழுத்தம், இறுக்கம் ஏற்படும் போது, என் காமெடி வீடியோக்களை பார்த்தால், அச்சூழலில் இருந்து உடனே விடுபட முடிவதாக, பலரும் குறிப்பிடுவர். அதுதான் எனக்கான எனர்ஜி டானிக். இன்னும் பலரை, சிரிக்க வைக்க வேண்டிய பொறுப்பு இருப்பதாக, ஒவ்வொரு நாளும் உணர்கிறேன், என்றார்.