ADDED : டிச 07, 2024 09:17 AM

''அ ன்னார்ந்து பார்த்தால், ஆகாயத்துக்கு பந்தல் போட அசைந்தாடும் தென்னைங்கீற்று; தரையிறங்க தவம் கிடக்கும் நிலா; சிலிர்க்கும் மழைச்சாரல்; சில்லென்ற இளந்தென்றல், கானகத்து குருவியின் காதல் கீதம், பாய்ந்தோடும் ஆழியாறு, இத்தனைக்கு மேலாக, கொஞ்சி, கெஞ்சி, கதைபேசி கரைந்திட வைக்கும் செல்லப்பிராணிகள் என, ஏராளம் இங்குண்டு,'' என்கிறார் கோவை மாவட்டம், பொள்ளாச்சி, அம்பராம்பாளையம் அருகேயுள்ள, பி.என்., பார்ம் ஹவுஸ் உரிமையாளர் பிரகாஷ்.
'செல்லமே' பக்கத்திற்காக, இவர் நம்மிடம் பகிர்ந்தவை: கோவை, பொள்ளாச்சியில் இருந்து கிட்டத்தட்ட 7 கி.மீ., பயணத்தில் அம்பராம்பாளையம் அருகே, 10 ஏக்கரில், தென்னந்தோப்புக்கு நடுவே, பி.என்., பார்ம் ஹவுஸ் (PN Form House) அமைத்துள்ளோம். நகரத்து நெரிசலில் இருந்து இளைப்பாறி கொள்ள, இயற்கை மடி தேடி வருவோர், இங்குள்ள பண்ணை வீட்டில் தங்கலாம்.
தோட்டத்திற்குள் நுழைந்தவுடன், சிவப்பு, மஞ்சள், பச்சை, நீலம் என, வெவ்வேறு வண்ணங்களில் சிறகு கொண்ட பறவைகள், உங்களிடம் வந்து காதல் கீதம் இசைக்கும். பாம்பை கண்டால் படையே நடுங்கும் என்பர். ஆனால் இங்குள்ள பாம்புகள், செல்லப்பிராணியாக வளர்க்க தகுந்தவை என்பதால், நீங்கள் விரும்பினால் அதை கையில் எடுத்து கொஞ்சலாம்.
ஆடு, மாடு, கோழி, வாத்து, குதிரை, ஒட்டகம் மட்டுமல்லாமல், வெள்ளை காதுடன் கூடிய மர்மோசெட் குரங்கு, சிவப்பு கைகளை கொண்ட டேமரின் குரங்கு, வெள்ளை கழுதை, ஒய்யாரமாய் வலம் வரும் நெருப்பு கோழி, பறக்கும் அணில், முள்ளெலி, இக்வானா, ஆந்தைகளுடன், நேரம் செலவிடலாம். இங்கே, முயலும், ஆமையும் இருப்பதால், 'முயலாமை' கதை உண்மையின் ரகசியத்தை உங்கள் குழந்தைகளுக்கு சொல்லி கொடுக்கலாம். குட்டீஸ்களின் பேரவட் பப்பிகளான, டச் ஹவுண்ட், மின்பின் இருப்பதால், கையில் வைத்து கொஞ்சலாம். குட்டி குளத்தில் கை நீட்டி, கொய் இன மீன்களுக்கு ஹாய் சொல்லலாம். குதிரை வண்டியில் ஏறி சவாரி செய்யலாம்.
செல்லப்பிராணிகளுடன் நேரம் செலவிட்டபடி, காலார நடந்து இங்குள்ள மரங்களுடன் ரகசிய பேச்சு வார்த்தை நடத்தலாம். இவை ஒருபோதும் ஒற்றனாக மாறாது. மனம் விரும்பும் நேரத்தில், மழை துாறினால் எப்படி இருக்குமென்ற அனுபவத்தை, 'ரெயின் டான்ஸ்' அமைப்பு மூலம் ஏற்படுத்தி தருகிறோம்.
அருகிலே ஆழியாறு ஓடுகிறது. நீச்சல் குளத்துக்குள்ளே குட்டிக்கரணம் போட்டவர்கள், ஆற்றில் குதித்து இளைப்பாறலாம். பிரத்யேகமாக பம்பு செட் இருக்கிறது. கிணற்று நீரின் சுவை அறியலாம். மூன்று வேளையும், கொங்கு வாசம் வீசும் கிராமத்து சமையலை ருசிக்கலாம். குழந்தைகள், பெரியவர்களுக்கென, பிரத்யேக விளையாட்டுகளும் உள்ளன. குடும்பத்துடன், நண்பர்களுடன் வந்து, கட்டணம் செலுத்தி, இயற்கையின் வாசத்தில், செல்லபிராணிகளின் நேசத்தில், வித்தியாசமான அனுபவங்களுடன், நெகிழ்ச்சியான தருணங்களை, இதயத்தில் நிறைத்து, அடைத்து காத்து கொள்ள, வாசல் திறந்து வரவேற்கிறோம்.