
''வானவில் வண்ணங்களை தன் சிறகுகளில் பூக்கொண்டு, காற்றில் மிதக்கும் ஒரு பறவையை பக்குவமாக பழக்கினால், அது தன் கூண்டு போல, உங்கள் வீட்டையே அடைகாக்கும்,'' என்கிறார், பறவை பழக்குனர் விக்னேஷ்.
கோவையை சேர்ந்த இவர், ஆப்பிரிக்கன் லவ் பேர்ட்ஸ், மக்காவ், கிரே பேரட், சன் கனுார், ஸ்மால் கனுார், சினகல், மாங்க், லாரிகேட்ஸ் என, பல்வேறு ரக பறவைகளை வளர்ப்பதோடு, இதன் வாரிசுகளை பழக்கி, வீட்டில் பறவைகளை வளர்க்க வழிகாட்டுகிறார்.
இவர் நம்மோடு பகிர்ந்தவை:பறவைகளை பொறுத்தவரை பிறந்து 30 நாட்கள் வரை, தாயின் அரவணைப்பில் இருப்பதே சிறந்தது. இதற்கு பின், பறவைகளுக்கான உணவு, தானியங்கள், விதைகள், முளைக்கட்டிய பயிறு, கீரைகள், பழங்கள், காய்கறிகள் என, ஒவ்வொன்றாக சாப்பிட கொடுக்க வேண்டும்.கையில் வைத்து, உணவு கொடுப்பது, கொஞ்சுவது, தோளில் அமர வைப்பது என வீட்டின் சூழலுக்கேற்ப, அதன் செயல்பாட்டை மாற்ற வேண்டும். இப்படி பழக்கப்படுத்திய பறவைகளை வாங்கும் போது, எளிதில் உரிமையாளரிடம் நெருங்கி பழகிவிடும்.
*புதிதாக பறவை வளர்ப்பவர்கள் அதன் கூண்டு இருக்குமிடத்தில், காற்றோட்டம், அதிக குளிர், வெயில் படாத வகையில் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். அதீத வெயிலால் 'ஹீட் ஸ்ட்ரோக்' வரலாம். கவனக்குறைவாக இருந்தால், மழைக்காலத்தில் சளி, காய்ச்சல் தொந்தரவு ஏற்படலாம்.
*பறவைகளுக்கான உணவு மட்டுமே கொடுக்க வேண்டும். சிலர், திண்பண்டங்கள், தோசை, இட்லி போன்றவற்றை சாப்பிட கொடுக்கின்றனர். இதனால், உணவு ஒவ்வாமை ஏற்படுவதோடு, நோய் எதிர்ப்பு சக்தி இன்றி, சீக்கிரம் இறக்கும் அபாயம் ஏற்படலாம்.
*குழந்தைகள், தனியாக இருக்கும் முதியோருக்காக பறவை வாங்குவதாக இருந்தால் சிறிய ரக பறவைகளை தேர்ந்தெடுக்கலாம். இதனிடம் சில அனுபவங்களை பெற்ற பிறகு, முறையான சான்றிதழுடன், எக்ஸாடிக் பறவைகள் வளர்க்கலாம்.
*பறவைகளை, நம் லைப் ஸ்டைலுக்கு ஏற்ப பழக்க முடியும். நாய், பூனைகளை, வெளியிடங்களுக்கு எடுத்து செல்வது போல, பறவைகளையும், டூ-வீலர், கார்களில் உடன் கொண்டு செல்லலாம். இதற்கு குட்டியாக இருக்கும் போதே பழக்க வேண்டும்.
*வெளியிடங்களுக்கு எடுத்து செல்லும் போது,'ஹார்னஸ்' என்ற பறவைகளுக்கான பெல்ட் அணிவிக்க வேண்டும். இதன் கயிறு உங்கள் கையில் இருக்கும் வரை, குறிப்பிட்ட துாரத்திற்கு மேல் பறக்க முடியாது. பெல்ட் இல்லாமல் கொண்டு சென்றால் பாதுகாப்பில்லை.
*பறவையின் கொஞ்சும் மொழி, கீச்சிடும் குரல், இறக்கை விரிக்கும் அழகை ரசித்து கொண்டே இருக்கலாம். இதோடு தினசரி சிறிது நேரம் செலவிட்டாலே, மன அழுத்தம், கவலை, எதிர்மறை எண்ணங்கள் பறந்துவிடும்.