ADDED : நவ 09, 2024 09:18 AM

ஐ ந்து வருடங்களுக்கு முன், ஒரு மாலை வேளையில், இருசக்கர வாகனத்தில் சென்ற போது துாரத்தில் ஒரு குட்டி பப்பி துள்ளி குதிப்பது போல தெரிந்தது. அருகில் சென்று பார்த்த போது தான், அது வலியால் துடித்ததை காண முடிந்தது. அதை அள்ளி அரவணைத்துக்கு கொண்டு அருகிலுள்ள மருத்துவமனை நோக்கி ஓடினேன். தீவிர சிகிச்சைக்கு பின் உயிர் பிழைத்தது. ஒருமாத கால பராமரிப்புக்கு பின், பழைய நிலைக்கு திரும்பியது. விபத்தில் இருந்து மீண்டதால், 'வெற்றி' என பெயரிட்டேன். இப்போதும் என்னை பார்த்தால், வாலை ஆட்டிக் கொண்டு வாஞ்சையாக அருகில் வரும். இந்த அன்புக்கு ஈடு இணையில்லை என மலர்ச்சியுடன் மனம் திறந்தார், சென்னை, சைத்தாப்பேட்டையை சேர்ந்த விலங்குகள் நல ஆர்வலர் அருண்.
சென்னையில், 'வாய்ஸ் ஆப் ஸ்டிரீட் டாக்ஸ்' (Voice Of Street Dogs) என்ற தன்னார்வ அமைப்பை துவங்கி, தெருநாய்களுக்கு உணவளித்தல், கருத்தடை அறுவை சிகிச்சை, அடிப்பட்ட நாய்களை மீட்டு சிகிச்சை அளித்தல் என பரபரப்பாய் இயங்கி கொண்டிருக்கும் இவரிடம் பேசினோம்.
நம்மிடம் பகிர்ந்தவை:
தெருநாய்கள், பூனைகள், பறவைகள் உட்பட, நம்மை சுற்றி வாழும் விலங்குகளுக்கு, உணவளிக்க வேண்டியது, நம் பொறுப்பு என, அம்மா ராஜேஸ்வரி அடிக்கடி கூறுவார். இந்த உந்துதலில் தானோ என்னவோ, ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, தன்னார்வ அமைப்பை துவங்கினேன்.
நண்பர்கள், தன்னார்வலர்கள், நன்கொடையாளர்கள் உதவியோடு, அசோக்நகர், கே.கே., நகர், ஈக்காட்டுதாங்கல், சைதாப்பேட்டையை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள தெருநாய்களுக்கு உணவளித்து வருகிறோம். உணவுக்கான பொருட்செலவுக்கு, உதவ யாருமில்லாத சமயங்களில், என் வீட்டை சுற்றியுள்ள, 50 தெருநாய்களுக்கு மட்டும், என் சொந்த செலவில் பசியாற்றுகிறேன். உணவு தயாரிப்பு பணிகளை அம்மா தான் மேற்கொள்வார்.
இதுதவிர, இன்ஸ்டா (Buchcha Arun) பக்கத்தில், தன்னார்வ அமைப்பின் பணிகளை பதிவேற்றுவதால், விலங்குகள் நல ஆர்வலர்கள் பலர், எங்களோடு கைக்கோர்க்கின்றனர். இப்பக்கத்தில் தொடர்பு எண் இருப்பதால், அடிபட்ட தெருநாய்களை மீட்க, மக்கள் தொடர்பு கொள்வர்.
நீண்ட துாரமாக இருந்தால், அப்பகுதியில் உள்ள வேறு தன்னார்வ அமைப்புகளுக்கு தகவல் தெரிவிப்பேன். எந்நேரம் அழைப்பு வந்தாலும், உயிருக்கு போராடும் அந்த ஜீவனை காப்பாற்றியே தீர வேண்டுமென்ற முனைப்பில் தான் ஓடுவோம். சில சமயங்களில், மருத்துவமனை வாசலிலே உயிர்பிரிந்துவிடும்.
ஆரம்ப காலக்கட்டங்களில், இதுபோன்ற சம்பவங்கள் அரங்கேறும் போது அதை கடந்து, இயல்பு நிலைக்கு திரும்புவது பெரும் போராட்டமாக இருந்தது. இப்போது வரை, ஒரு உயிரை காப்பாற்றும் போது ஏற்படும் மனநிம்மதிக்கு ஈடு இணையே இல்லை.
உங்களின் எதிர்பார்ப்பு?
தெருநாய்களுக்கு உணவு கொடுப்பதால் தான் அவை பெருகிவிட்டதாக, ஒரு பொது கருத்து நிலவுகிறது. பட்டினியால் ஒரு ஜீவன் வாடினால், அது தன் உணவுக்காகவே வேட்டையாட ஆரம்பிக்கும். இதனால், நாய்கடி சம்பவங்கள் அதிகரிக்குமே தவிர குறையாது. கருத்தடை அறுவை சிகிச்சை செய்து, அதன் வாழ்விடத்தில் விடும்போது கூட, சிலர் மனிதாபிமானத்துடன் நடந்து கொள்வதில்லை.
அந்தந்த வீதிகளில் சுற்றித்திரியும் நாய்களுக்கு, மாநகராட்சி உதவியோடு கருத்தடை அறுவை சிகிச்சை செய்து, ஒருவேளை உணவளித்தால் போதும். அது அந்த தெருவுக்கே காவலாய் துணை நிற்கும். செல்லப்பிராணிகளின் அன்பு, தன் எஜமானுக்கு உயிரையே தர துணியும் அளவுக்கு புனிதமானது. ஒருவேளையாவது உணவளித்து, ஒருமுறையாவது அதன் விசுவாசத்தின் வெளிச்சத்தை, உணர்ந்து பாருங்கள்.... பின்பு, நம் ஜீவனை, சுற்றியுள்ள விலங்குகளின் கண்களிலும் காணலாம்.
தொடர்புக்கு: 87544 94432