ADDED : மார் 21, 2026 01:35 AM

செல்லப்பிராணிகளை மையப்படுத்தி எடுக்கும் படங்களுக்கு மக்கள் மனதில் தனியிடமுண்டு. வசூல் சாதனையை தாண்டி, உணர்வு பூர்வமான பந்தத்தை ஏற்படுத்தும். அப்படியான படங்களின் வரிசையில் விரைவில் இணைய காத்திருக்கிறது 'சுப்பிரமணி' என்ற ஆக் ஷன் த்ரில்லர் திரைப் படம்.
இதன் ஹீரோ, கோவையைச் சேர்ந்த 5 வயதான 'பெப்பர்' என்ற பெல்ஜியம் மலினோய்ஸ் இன நாய்.
இதன் உரிமையாளரும், நாய் பயிற்சியாளருமான பார்த்தசாரதி கூறியதாவது:
சில திரைப்படங்களுக்கு, என்னிடம் உள்ள பயிற்சி பெற்ற நாய்கள் நடித்துள்ளன. ஆனால் முக்கிய கதாபாத்திரத்தில் அதுவும் கதாநாயகன் என்ற அளவுக்கு முக்கியத்துவம் கிடைத்திருப்பது, 'சுப்பிரமணி' படத்தில் தான். இயக்குனர் வின்சென்ட் செல்வாவின் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில், நடிகர்கள் ரிச்சர்ட் ரிஷி, நட்டி, மிஷ்கின் ஆகியோர் நடித்துள்ளனர்.
கொடைக்கானலில் படத்திற்கான ஷூட்டிங் எடுத்தோம். 'பெப்பர்' வரும் காட்சிகளுக்கு, 25 நாட்கள் ஒதுக்கப்பட்டன. ஆனால், 15 நாட்களிலே எல்லா சீன்களும் முடிக்கப்பட்டன. ஒட்டுமொத்த படக்குழுவினரையும் ஆச்சர்யப்படுத்தும் அளவுக்கு, நிறைய சாகசங்களை நிகழ்த்தி காட்டியது. சில நீண்ட நேர சீன்களும் ஒரே டேக்கில் எடுக்கப்பட்டன.
படப்பிடிப்பு தவிர மற்ற நேரங்களில் பெப்பருக்கு தனி ரூம், தனி கார் வசதி ஏற்படுத்தி தந்தது படக்குழு. விலங்குகளை வைத்து படம் எடுப்பது மிக சிரமமாக இருக்கும் என நினைத்தோம். திட்டமிட்டதை விட வேகமாக பணிகள் முடிந்ததாக, இயக்குனர் நெகிழ்ந்தார். என் பெப்பரை பெரிய திரையில் காண காத்திருக்கிறேன், என்றார்.

