ADDED : அக் 19, 2024 06:21 AM

''அணிலே அணிலே ஓடி வா... அழகு அணிலே ஓடி வா என, மரத்தை சுற்றி சுற்றி, மழலைப்பருவத்தில் பாடிய காலம் மாறி, வீட்டிற்குள் உங்களின் தோளில் சாய்ந்து கொண்டு, குறும்பு கண்களுடன் கொஞ்சும் இந்த பறக்கும் அணிலை (சுகர் கிளேடர்) தேடி வந்து பலரும் வாங்குகின்றனர்,'' என்கிறார், கோவை, கோவைபுதுாரில் உள்ள, 'டைக்கி டெய்ஸ் பெட் ஷாப்' உரிமையாளர் பெஞ்சமின்.
பப்பி, மியாவ், பேர்ட்ஸ் அடுத்தபடியாக, பறக்கும் அணில், முயல் என, வித்தியாசமான செல்லப்பிராணிகளோடு பிசியாக இருந்த இவர் நம்மிடம் பகிர்ந்தவை:
பறக்கும் அணில் (சுகர் கிளேடர்)
ஆஸ்திரேலியாவை சேர்ந்த இந்த சுகர் கிளேடர், வெள்ளை, மஞ்சள் கலந்த வெள்ளை என, 10க்கும் மேற்பட்ட நிறங்களுடன் காணப்படும். இவை, வீட்டில் செல்லப்பிராணியாக வளரும் வகையில், பிறந்து இரண்டு மாதத்தில் இருந்தே கையில் வைத்து, உணவு கொடுத்து பழக்கி, பின் விற்கப்படுகிறது.
மூன்று மாத சுகர்கிளேடர் வாங்கினால், உங்களையே சுற்றி சுற்றி விளையாடும். விதை நீக்கப்பட்ட பழங்களை, விரும்பி சாப்பிடுவதோடு, கிட்டத்தட்ட 10--- 12 ஆண்டுகள் வரை உயிர்வாழும். மாலை, இரவு நேரங்களில் அதிக சுறுசுறுப்புடன் இருப்பதால், வேலைக்கு செல்வோர், கொஞ்சுவதற்கு ஏற்ற செல்லப்பிராணி.
இதன் கூண்டில், துாங்குவதற்கு மறைவான இடம் ஒதுக்கி, உணவு, தண்ணீர் வைத்தால் போதுமானது. அதிக காற்று, குளிர் தாங்காது என்பதால், அச்சமயத்தில் மட்டும், சற்று கதகதப்பான சூழலை அமைத்து தர வேண்டும்.
உரிமையாளருடன் எளிதில் நெருங்கிவிடுவதால், இந்த அணிலை கையில் வைத்து தடவி கொடுத்து கொஞ்சியபடியே, ஒவ்வொரு நாளையும் கழிக்கலாம்.
முயல்
வெள்ளை, மஞ்சள், கருப்பு என, 10க்கும் மேற்பட்ட நிறங்களில் இருக்கும் முயல்களை, செல்லப்பிராணியாக வளர்க்க பலரும் ஆசைப்படுகின்றனர். இது, புற்கள், காய்கறிகளை மட்டுமே சாப்பிடும் வெஜிட்டேரியன் விரும்பி. வீட்டை சுற்றி தோட்டம் வைத்திருப்போர், முயல் வளர்க்க விரும்புகின்றனர். மண் தோண்டி, அதனுள் போய் உறங்கும் பழக்கம் கொண்ட முயல்களை, வீட்டிற்குள் பிரத்யேக கூண்டில் வைத்தும் வளர்க்கலாம்.
இதற்கு, சொட்டு சொட்டாக வடியும் அமைப்பில் தான், தண்ணீர் குடிக்க தெரியும். எந்நேரமும் சாப்பிட்டு கொண்டே இருக்கும். இதன் கூண்டை அவ்வப்போது சுத்தம் செய்வது அவசியம். மற்றபடி பராமரிப்பு விஷயத்தில் மெனக்கெட வேண்டியதில்லை.
பிறந்து மூன்று மாதத்திலே வாங்கி, கையில் எடுத்து பழக்கினால், உரிமையாளரை கடிக்காது. சற்று வளர்ந்த முயல்களை வாங்கும் போது, கவனமாக கையாள வேண்டும். இல்லாவிடில், கடிக்கவும் வாய்ப்புள்ளது. தனிமையில் இருப்போருக்கு ஏற்ற துணையாக இது இருப்பதாக, வாடிக்கையாளர்கள் தெரிவிக்கின்றனர்.