பப்பியின் மனநலம் பேண உரிமையாளர்களுக்கு 'கவுன்சிலிங்' சொல்கிறார் 'ஸ்ரீதேவி'
பப்பியின் மனநலம் பேண உரிமையாளர்களுக்கு 'கவுன்சிலிங்' சொல்கிறார் 'ஸ்ரீதேவி'
ADDED : ஜன 26, 2025 07:39 AM

''பப்பிக்கு ஏற்படும் நோய்களுக்கும், அதன் மனநலனுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது,'' என்கிறார், கோவையை சேர்ந்த, 'டாக் பிகேவியரிஸ்ட்' (dog behaviourist) ஸ்ரீதேவி.
கோவையைச் சேர்ந்த ஸ்ரீதேவி, கேரளா, கண்ணுாரில் உள்ள தேசிய ஆடை வடிவமைப்பு தொழில்நுட்ப நிறுவனத்தில் (என்.ஐ.எப்.டி.,) முதுகலைப் படிப்பு முடித்துள்ளார். லண்டனில், 'கெனைன் சைக்காலஜி' சான்றிதழ் படிப்பை முடித்ததோடு, அதுசார்ந்த ஆய்வில் ஈடுபட்டு வருகிறார். கடந்த 2015 ல் இருந்து, பப்பியின் சைக்காலஜி குறித்துக வுன்சிலிங் அளித்து வருகிறார். இவர் நம்மிடம் பகிர்ந்தவை:
பப்பிக்கும் ஸ்ட்ரெஸ் வருமா?
அடிப்படையில், நாய் ஒரு வேட்டை விலங்கு. இதனிடம் மோப்ப சக்தி, பாதுகாவல் திறன் கூடுதலாக இருப்பதால், சில பயிற்சிகள் அளித்து, நமக்கேற்ற வகையில், அதன் செயல்பாட்டை மாற்றிவிட்டோம். இருப்பினும், கட்டளைக்கு கீழ்படிவதால் மட்டுமே, அது மகிழ்ச்சியாக இருப்பதாக முடிவு செய்யக்கூடாது. நமக்கான அடிப்படை தேவைகள் கிடைக்காத போது, எப்படி மன அழுத்தம், கோபம், பயம் போன்ற உணர்வுகள் ஏற்படுகிறதோ, அப்படியே செல்லப்பிராணிகளுக்கும் நடக்கும்.
பப்பியின் அடிப்படை தேவை என்ன?
உணவு தவிர, அதற்கு மூன்று அடிப்படை தேவைகள் இருக்கின்றன.
உடற்பயிற்சி: பப்பியை ஓரிடத்தில் கட்டி வைக்கவே கூடாது. அது தன் திறனை வெளிப்படுத்தி கொண்டே இருக்க விரும்பும். வெளி சூழலை அறிமுகப்படுத்துவது, புதிய மனிதர்கள், பொருட்களை வேடிக்கை பார்ப்பது, பிற நாய்களுடன் பழகுவது போன்ற செயல்பாடுகளில் ஈடுபடும் போது மட்டுமே பப்பி, மகிழ்ச்சியாக இருக்கும்.
வழிகாட்டுதல்: இது பப்பிக்கான பயிற்சியில் அடங்கும். ஒரு பப்பியிடம் இருக்கும் திறனை முழுமையாக வெளிப்படுத்த பயிற்றுவிக்க வேண்டும். வார்த்தைகளை கூறி அதை பின்பற்ற மட்டுமே பழக்காமல், அச்சூழலை புரிந்து கொண்டு செயல்பட பழக்குவதே, சிறந்த பயிற்சி முறை.
ஆரோக்கியமான சூழல்: பப்பியின் ஆரோக்கியத்தில் அக்கறை கொள்வது, அதற்கு பிடித்த, தேவையான சூழலை அமைத்து தருவது, விளையாட அழைக்கும் போது, அதோடு நேரம் செலவிடுவது அவசியம். இதற்கு, இதய நோய்கள், பக்கவாதம், தோல் நோய்கள் வருவதற்கும், மனநல பாதிப்புக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது.
இதில் எங்கே சிக்கல் துவங்குகிறது?
அடிப்படை தேவைகளில் ஏதேனும் ஒன்று கூடுதலாகவோ, குறைவாகவோ இருந்தால், அங்கே தான் மனநல பாதிப்பு தொடங்கும்.
பயம், எதற்கெடுத்தாலும் குரைத்தல், கடித்தல்,வழக்கமான செயல்பாட்டில் இருந்து மாறுபடுதல் போன்ற அறிகுறிகள் இருந்தால், அதற்கு மனநல வழிகாட்டுதல் அவசியம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
இந்த புரிதல், வெளிநாடுகளில் அதிகம் இருக்கிறது. அங்கே, உரிமையாளர்களுக்கு கவுன்சிலிங் அளிக்கப்படுகிறது. பப்பிக்கான பள்ளிகள், பார்க் இருப்பதால், பிற பப்பிகளை சந்திக்கும் வாய்ப்பு அதிகம். அதன் உரிமையாளர்களும், அடிக்கடி சந்தித்து, அனுபவங்களை பகிர்ந்து கொள்கின்றனர்.
இங்கே, பப்பியின் மீது அதிக அன்பு செலுத்துகின்றனர். ஆனால், அதன் தேவை என்ன என்பது குறித்தபுரிதல் மிகக்குறைவாக இருக்கிறது. பப்பியை விட, அதன் உரிமையாளருக்கு தான், கவுன்சிலிங் அதிகம் தேவைப்படுகிறது.