அந்த ஏரியா இந்த ஏரியானு இல்ல... எல்லா ஏரியாவிலும் இவங்க கில்லி!
அந்த ஏரியா இந்த ஏரியானு இல்ல... எல்லா ஏரியாவிலும் இவங்க கில்லி!
ADDED : பிப் 15, 2025 07:51 AM

சென்னையில், சமீபத்தில் நடந்த நாய் கண்காட்சியில், பிரபலங்களின் நாய்களுடன் போட்டியிட்டு, முதல்பரிசு வென்றது, கோவை, கிணத்துக்கடவு பகுதியை சேர்ந்த, சால்ஸ் ஜெயன் என்பவரின், ஜெர்மன் ஷெப்பர்டு (வைக்கா வான் ஆர்லெட்) வகை நாய்.
இவர், போட்டிக்கு நாய்களை தயார்ப்படுத்துவது பற்றி, 'செல்லமே' பகுதிக்கு, நம்மிடம் பகிர்ந்தவை: சிறு வயதில் இருந்து செல்லபிராணிகள் வளர்க்க ஆசை. கடந்த, 25 ஆண்டுகளாக நாய் மற்றும் குட்டை ரக நாட்டு மாடு, சேவல், வாத்து போன்ற பிராணிகளை வளர்த்து வருகிறேன். இதில், ரொம்ப ஸ்பெஷலே நாய்கள் தான்.
என்னிடம், தற்போது, 7 ஜெர்மன் ஷெப்பர்டு உள்ளிட்ட, 9 நாய்கள் இருக்கின்றன. இதில், 3 ஜெர்மன் ஷெப்பர்டு நாய்களை, போட்டிக்கு அழைத்து செல்கிறோம். ஓராண்டுக்கு, 20 போட்டிகள் என, 25 ஆண்டுகளாக போட்டிக்கு சென்று வருகிறோம். இதுவரை, 400க்கும் அதிகமான பரிசுகளை எங்கள் நாய்கள் வென்றுள்ளன. கடைசியாக சென்னையில், 'மெட்ராஸ் கெனைன் கிளப்' நடத்திய நாய்கள் கண்காட்சியில், 'வைக்கா' தான், முதல்பரிசு வென்றது.
வளர்ப்பு முறை
நாய்கள் வளர்க்க ஏ.சி., வசதியுடன் கூடிய அறைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில், அதிகமாக கூச்சலிடும் நாய்களுக்கு தனி அறை உள்ளது. சரியான நேரத்துக்கு உணவு வழங்கப்படுகிறது. நாய்களை முறையாக பராமரித்து வைத்துள்ளோம். இவற்றுக்கு அசவுகரியம் ஏற்படாத வகையில் ரூமில் பெட் மற்றும் சோபா அமைத்துள்ளோம்.
மேலும், முடி முதல் நகம் வரை முழுமையாக சிறந்த முறையில் பராமரிக்கிறோம்.
பயிற்சி முறை
போட்டி என்று வந்துவிட்டால், சில தகுதிகள் இருக்க வேண்டும். இதை பூர்த்தி செய்ய, இங்கு ஒரு சில பயிற்சிகள் நாங்களே அளிக்கிறோம். குறிப்பாக, பிறந்து 12 மாதங்கள் முடியும் வரை எந்த வித பயிற்சியும் அளிக்க மாட்டோம். அதன் பின் ஒவ்வொன்றாக துவங்குவோம். இங்கு பயிற்சி அளிக்க நடை, ஓட்டம், வட்டம் அடிப்பது மற்றும் நீச்சல் என தனித்தனியாக பிரத்யேக இட வசதி உள்ளது. ஒரு சில பயிற்சிகளை நாங்களே வழங்குகிறோம். மீதம் உள்ள பயிற்சியை டிரைனர் வைத்து அளிக்கிறோம்.
கம்யூனிகேஷன்
நமக்கும், நாய்களுக்கும் இடையே இருக்கும் அணுகுமுறை ரொம்ப முக்கியம். அவற்றுக்கு வேண்டிய வசதிகளை ஏற்படுத்தி, அவற்றுடன் பேசி பழக வேண்டும். உதாரணமாக, ஜெர்மன் ஷெப்பர்டு வகை நாய்கள் குளிர்ந்த காலநிலையில் வளர்பவை. இவை நமது தட்பவெட்ப நிலைக்கு வர இரண்டு முதல் மூன்று மாதங்கள் ஆகும். அதுவரை அதற்கான வசதிகளை செய்ய வேண்டும். இவற்றை நாம் வழங்கினால், அவை நம்மை பாதுகாக்கும். இவ்வாறு, அவர் அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.

