ADDED : ஜன 10, 2026 08:26 AM

''பூட்டுக்கு மட்டுமல்ல, சேவல் கண்காட்சிக்கும் திண்டுக்கல் தான் பிரசித்தம். இங்கே 11 ஆண்டுகளாக, பாரம்பரிய சேவல் இனங்களை காட்சிப்படுத்தி, அதை வாங்க விரும்புவோருக்கு, நல்ல ப்ரீடர்களை அறிமுகம் செய்து வைக்கிறோம்,'' என்கிறார், திண்டுக்கல் அசில் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ரங்கராஜ்.
நாய், பூனை கண்காட்சி போலவே, சேவலுக்கும் அழகு கண்காட்சியை நடத்துகிறது திண்டுக்கல் 'அசில்'. சேவல் வளர்ப்பை அதிகமாக்கி, அழியும் நிலையில் உள்ள சேவல் இனங்களை மீட்டெடுக்க புதுமுயற்சியில் களமிறங்கியுள்ள, இந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர், ரங்கராஜிடம் பேசினோம்.
அவர் நம்மிடம் பகிர்ந்தவை:
தமிழகத்தில் அசில், வள்ளுவர், காகம், பேடு, சங்ககிரி கருஞ்சதை, கிளிமூக்கு விசிறி வால் என சில பாரம்பரிய சேவல் இனங்கள் உள்ளன. முன்பு விவசாயம், தோட்டம் வைத்திருப்போர், கால்நடை வளர்ப்போர், சேவல் வாங்கி வளர்ப்பது வழக்கம். பிராய்லர் கோழி வருகைக்கு பின், சேவல் இனங்களை தேடி வாங்கி வளர்ப்போர் எண்ணிக்கை குறைந்துவிட்டது. பாரம்பரிய சேவல் இனங்களில், கிளி மூக்கு விசிறி வால் சேவலில் உள்ள பல்வேறு வெரைட்டிகளை பிரபலமாக்கும் நோக்கில், சேவல் வளர்ப்பாளர்கள் இணைந்து, திண்டுக்கல் அசில் அமைப்பை உருவாக்கி, ஆண்டுதோறும், ஜனவரி மாதம் கண்காட்சி நடத்துகிறோம்.
வெளி மாநிலங்களில் இருந்தும் இங்கே வந்து, போட்டியில் பரிசு பெற்ற சேவலை வாங்கி செல்கின்றனர். இதனால், சிறந்த ப்ரீடர்களுக்கு அங்கீகாரம் கிடைக்கிறது. போட்டியில் வெற்றி பெற்ற சேவலுக்கு அதிக மவுசு உண்டு. என் சேவலுக்கு கடந்தாண்டு ரூ.7 லட்சம், இந்தாண்டு களத்தில் அசத்திய சேவலுக்கு ரூ. 3 லட்சத்திற்கு கேட்டனர். போட்டியில் பரிசு பெற்ற சேவல்களை இனப்பெருக்கத்திற்கு பயன்படுத்தினால் தான் தரமான வாரிசுகளை உருவாக்க முடியும். அதை வளர்த்து விற்கும் போது நெருடலாக இருப்பதால் கொடுக்கவில்லை. ஆனால், என்னை தேடி வருவோருக்கு, நிச்சயம் தந்துவிடுவேன். அப்போது தான் சிறந்த சேவல்களை நிறைய பேர் வளர்க்க முடியும்,'' என்றார்.
சிறந்த சேவலை எப்படி தேர்ந்தெடுப்பீர்கள் என்றதும்,'' சேவலுக்கு அழகே, அதன் கொண்டைப்பூ தான். உச்சி பூ, பந்து பூ, ராஜ பூ, சிட்டுக்குருவி பூ, தக்காளி பூ என அதன் வடிவதற்கு ஏற்ப, வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படும். மூக்கின் வடிவம், தோரணை, வால் நீளம், இறகுகளின் எண்ணிக்கை, களத்தில் அது நிற்கும் தோரணைக்கு ஏற்ப சேவலுக்கு மதிப்பெண்கள் இடப்படும். முதல் மூன்று பரிசுகளோடு, ஒய்யாரமாக களத்தில் நிற்கும் 100 சேவலுக்கு பரிசுகள் வழங்குகிறோம். தமிழகத்தில் மட்டுமல்ல, மற்ற மாநிலங்களை ஒப்பிட்டாலும், திண்டுக்கல் சேவல் கண்காட்சி தான் அதிக கவனம் பெற்று வருகிறது,'' என்றார்.

