ADDED : பிப் 17, 2024 08:41 AM

இந்திய ராணுவத்திற்கு, கர்நாடகா மாநில பாரம்பரிய நாய், 'முதொல்' பங்களிப்பு குறித்து, 'மான் கி பாத்' நிகழ்ச்சியில், பாரத பிரதமர் மோடி பேசியபிறகு, நாட்டு இன நாய்கள் மீது, கவனம் திரும்பியுள்ளது என்கிறார் கோவை, சரவணம்பட்டி, 'டாக்பார்ம்' உரிமையாளர் அன்புதங்கம்.
இறக்குமதி நாய்களே அதிகளவில் ராணுவம், வனத்துறை, காவல்துறையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
தமிழக நாட்டு இன நாய்களுக்கும் அத்திறன் இருப்பதை உறுதி செய்ய, கன்னி கோம்பை இன ரத்தமாதிரிகளை சேகரித்து, ஆய்வுக்கு உட்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வரும் இவர், நம்மிடம் பகிர்ந்து கொண்டபோது: '' தமிழகத்தில், 50க்கும் மேற்பட்ட நாட்டு நாய் இனங்கள் இருந்தன. அதில், பெரும்பாலான நாய் இனங்கள் அழிந்து விட்டன. ஒரு சில அழிவின் விளிம்பில் உள்ளன. கன்னி, கோம்பை, சிப்பிப்பாறை, ராஜபாளையம் இனத்தை சேர்ந்த, 56 நாய்கள் வைத்துள்ளோம்.
பாரம்பரிய நாய்கள், எல்லா காலநிலைகளையும் தாங்கி, வளர்வதால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகம். இவற்றை பராமரிப்பது எளிது. இவை எளிதில் சோர்வடையாது''. கர்நாடகா, மகாராஷ்டிரா மாநிலங்களில், நாட்டு நாய்கள் வளர்த்தால், மானியம் கொடுப்பதோடு, தடுப்பூசி இலவசமாக போடுகிறார்கள். தமிழக பாரம்பரிய நாய்கள் வளர்ப்போரை ஊக்குவிக்க அரசு முன்வர
வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.