ADDED : அக் 10, 2025 11:25 PM

மகாராஷ்டிரா மாநிலம், ராய்காட் பகுதியில் இயங்கும், 'பர்லி கேட்ஸ்' (Purrly Cats) என்ற பூனைகளுக்கான இன்டீரியர் பர்னிச்சர் தயாரிக்கும் நிறுவனத்தின் தலைவர் ஸ்ருதி. எம்.பி.ஏ., பட்டதாரியான இவர், 'செல்லமே' பக்கத்திற்காக நம்மிடம் பகிர்ந்தவை:
பூனைகளுக்கு பர்னிச்சர்... இந்த ஐடியா எப்படி?
செல்லப்பிராணிகளுக்கான சந்தைத்தளத்தில் இயங்க வேண்டுமென முடிவெடுத்து, 2018 ல், பப்பி, பூனைகளுக்கான பொருட்களை தயாரிக்க முடிவெடுத்தேன். 'சோட்டா பக்கோடா' என்ற பெயரில் தான் துவக்கத்தில் தயாரிப்புகளை அறிமுகப்படுத்தினேன். பூனைகளுக்கான எங்களின் தயாரிப்புகள், வாடிக்கையாளர்களிடம் ஏகோபித்த வரவேற்பை பெற்றன. மார்கெட்டிலும் இதற்கு போட்டி குறைவாகவே இருந்ததால், 'பர்ரி கேட்ஸ்' என்ற பெயரில் பூனைகளுக்கான பர்னிச்சர்கள் தயாரிப்பதில் மட்டும் கவனம் செலுத்த துவங்கினேன்.
இதை எப்படி தயாரிக்கிறீர்கள்?
எளிதில் உடையாத கடினமான பிளைவுட், சணல் கயிறு, மிருதுவான குஷன் மெத்தைகள் கொண்டு, பர்னிச்சர்கள் உருவாக்குகிறோம். இதற்கான டிசைன்களை நாங்களே உருவாக்கி, சொந்த மரப்பட்டறையில் தயாரிப்பதால், வாடிக்கையாளர்கள் விரும்பும் வடிவத்தை செய்து தர முடிகிறது. இவற்றை 1,800 ரூபாய் முதல், 20 ஆயிரம் ரூபாய் வரை விற்கிறோம். நிறைய டிசைன்கள் உருவாக்கியிருக்கிறோம். இதில் பூனைகளின் உயரத்திற்கு ஏற்ப, அதிலே அளவுகளை மாற்றி கொள்ள வசதி இருக்கிறது. சுவரில் பொருத்துதல், பால்கனியில் வைப்பது போன்ற மாடல்களில், பர்னிச்சர்கள் தயாரிக்கிறோம். சிலர் தாங்கள் விரும்பும் மாடல்களில் செய்து தருமாறு கேட்பதுண்டு.
பூனைகள் இவற்றை விரும்புகின்றனவா?
பொதுவாக பூனைகள், 'பெலிடே' குடும்பத்தை சேர்ந்தவை. இதில், புலி, சிங்கம், வேங்கை போன்ற விலங்குகள் இருப்பதால், அவற்றின் சில குணாதிசயம் பூனைக்கும் இருக்கும். இதனாலே, பூனைகளின் இயல்பு சற்று வித்தியாசமாக இருக்கும். அவை தனக்கும், உரிமையாளருக்குமான எல்லையை வகுத்து வைத்திருக்கும். வெளியாட்கள் தன்னை தொடுவதை, சில நேரங்களில் அனுமதிக்காது.
தனிமையை விரும்புபவை. அதேசமயம் தாவி குதித்து விளையாடுவதில் அதிக ஆர்வம் காட்டும். அவை தன்னை எஜமான் போலவே பாவித்து கொண்டிருக்கும் என்பது பூனை வளர்ப்பவர்களுக்கு நன்கு தெரியும். இந்த இயல்பு கொண்ட பூனைகளை, நீங்கள் சுதந்திரமாக விளையாட அனுமதிக்க வேண்டும். இல்லாவிடில் அவை மன அழுத்தத்திற்கு ஆளாகிவிடும். இவை குதித்து விளையாடினாலும், எங்கேயும் விழுந்துவிடாமல் இருக்கவும், சோர்வாக இருந்தால் அதிலே படுத்து உறங்கி கொள்ளவும், சில நேரங்களில் ஒளிந்து விளையாடவும் ஏற்ற வகையில் பர்னிச்சர்கள் தயாரித்துள்ளோம்.
வீட்டிற்கு புதிய ஆட்கள் வந்தால், பூனை இதில் ஒளிந்துகொள்வது போன்ற வீடியோக்களை பல வாடிக்கையாளர்கள் எனக்கு அனுப்பியுள்ளனர். எங்களின் தயாரிப்புகளை பூனைகள் விரும்புவதால் தான், இத்தொழிலில் நிலைத்திருக்க முடிகிறது. இதெல்லாம்அத்தியாவசியமா அல்லது ஆடம்பரமா என்பதை தாண்டி, அன்பை வெளிப்படுத்துவதற்கான நடைமுறை. குழந்தைகளுக்கு பொம்மை வாங்கி தருவது போலத்தான் இதுவும், என்றார்.