ADDED : மார் 09, 2024 08:42 AM

ஒவ்வொரு ப்ரீடு நாய்க்கும் வெவ்வேறு குணம் இருந்தாலும், வளர்க்கற முறையில அதோட இயல்பை மாத்திட முடியும் என்கிறார் ப்ரீடர் பாலன். கோவை, பேரூரைச் சேர்ந்தவர் பாலன்,70. இவர், கோவை மாவட்ட, போலீஸ் மோப்பநாய் பிரிவில், 44 ஆண்டுகளாக நாய்களுக்கு பயிற்சி அளித்தவர். பணி ஓய்வுக்கு பின், 'பெட் ஷாப்' ஓனராகவும், ப்ரீடராகவும் இருப்பதால், நாய்களின் சைக்காலஜி பற்றி நம்மோடு பகிர்ந்து கொண்டார்.
நாய்களில் 150 வகை இருக்கு. இவை ஒவ்வொன்றுக்கும் வெவ்வேறு குணம் இருந்தாலும், வளர்க்கும் முறையில், நமக்கு ஏற்றாற்போல மாற்றி கொள்ளலாம். வீட்டில் வளர்க்கும் நாய்கள் கீழ்படிதலோடும், மோப்ப நாய்களை புத்திசாலித்தனம், சுறுசுறுப்பாக இருக்குமாறும் பயிற்சிகள் வழங்கலாம்.
பப்பிகளுக்கு மூன்று மாதங்களானால்தான் நாம் சொல்வதே புரியும். வீட்டிலுள்ளோரிடம் பேசுவது போலவே, நாம் அவைகளை பழக்கப்படுத்தலாம். ஓனர் என்ன சொன்னாலும் நாய்கள் கீழ்படியும். அடித்தால் கூட மறந்துவிட்டு பாசத்தோடு வாலை ஆட்டிக்கொண்டே சுற்றி வரும்.
ஆனால், ஒரு நாய் இருக்குமிடத்தில் வேறு செல்லப்பிராணியையோ அல்லது குழந்தையையோ கொஞ்சிவிட்டு, அதற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் புறக்கணித்தால், ஈகோ வந்துவிடும். அவை 'ஸ்ட்ரஸ்'ஆக இருக்கும் போது, ஆக்டிவிட்டியில் வித்தியாசம் தெரியும். யாரையாவது கடிப்பது, அமைதியாக மூலையில் இருப்பது, வாலை ஆட்டாமல் தலையை கீழே போட்டுக்கொள்வது என கோபத்தை வெளிப்படுத்தும்.
அப்போது, அவை ஓனரின் அரவணைப்பை எதிர்பார்க்கும். பப்பியை கொஞ்ச ஆரம்பித்துவிட்டால் அழுது கொண்டே, நாக்கால் முகத்தை நக்கி ஹக் கொடுத்துவிடும். ஒரு பப்பி வளர்த்தால் கிடைக்கும் அனுபவம் வித்தியாசமானது, என்றார்.
பொமேரியன்: அடிக்கடி மூட் மாறும். சில சமயங்களில் ஓனரையே கடித்துவிடும். வீட்டுக்கு யார் வந்தாலும், உடனே காட்டி கொடுத்துவிடும்.
டாபர்மேன்: இதோட ஆக்டிவிட்டி ரொம்ப ஸ்பீடா இருக்கும்.
ஜெர்மன் ஷெப்பர்டு: இந்த பிரீட்டோட அழகே முடிதான். குடும்ப சூழலில் வளர்க்க ஏற்ற பிரீட்.
சிட்சூ: பார்க்க பொம்மை மாதிரி அழகா இருக்கும். அமைதியா, என்ன சொன்னாலும் கீழ்படியும்.
ராட்வீலர், லேப்ரடர்: இவை உருவத்தில் பெரிதாக இருந்தாலும், குழந்தை குணம் கொண்டது.

