ADDED : ஜூலை 25, 2025 10:02 PM

'டிஸ்னி... எங்கள் வீட்டின் செல்லக்குழந்தை' என்கிறார், மதுரையைச் சேர்ந்த ரோஜா தர்ஷினி.
இவர் நம்மிடம் பகிர்த்தவை:
எங்கள் வீட்டில் 'பெட்ஸ்' வளர்த்ததில்லை. என் கணவர் டேனிஷ் வீட்டில் நாய், பூனை வளர்க்கின்றனர். திருமணமான பின் ஒரு மாத குட்டி சிட்சூ வாங்கி 'டிஸ்னி' என பெயரிட்டோம். குட்டியாக வாங்கி வந்து வீட்டில் தரையில் விட்ட போது டைல்ஸ்சில் வழுக்கி வழுக்கி குழந்தை போல நடந்தான். எங்கள் வீட்டின் முதல் குழந்தை இவன் தான் என்ற எண்ணம் இருவருக்கும் ஏற்பட்டது.
குரைக்கவும் மாட்டான். ஆனால், மனிதர்களின் பெஸ்ட் கம்பானியன். புதியவர்களிடமும் நன்றாக விளையாடுவான். நாம் சோர்ந்திருக்கும்போது 'எமோஷனல் சப்போர்ட்' தருவான். அவனுக்கென்று குட்டி டெடி பியர், மங்கி பொம்மைகள், பந்துகள், 'ஸ்குவிட் கேம்', சூப்பர் மரியோ குட்டி பொம்மைகள் வாங்கி வைத்துள்ளோம்.
காலை 5:00 மணிக்கே எங்களை எழுப்பி வாக்கிங் போகச்சொல்லி கொஞ்சுவான். பந்து முன்நின்று விளையாடச் சொல்லி குரைப்பான். தனியாக நீண்ட நேரம் இருந்தால் இவனுக்கு மன அழுத்தம் வந்து விடும். குளிர்தான் பிடிக்கும். ஏசி அறையில் தான் துாங்குவான். இரண்டு, மூன்று மாதத்திற்கு ஒருமுறை 'ஹேர்கட்' பண்ணாவிட்டால் கண்களுக்கு முன்னால் முடி தொங்கி பார்வை மறைக்கும்; தலைவலி ஏற்படும். கண்ணில் தொற்று வரும். ஒருமுறை 'ஹேர்கட்டுக்கு' ரூ.1800 செலவாகும்.
'பெட் பேரண்டிங்' கஷ்டம் புதிதாக வளர்க்க ஆரம்பித்ததால் உணவுமுறை பற்றி முழுமையாக எனக்கு தெரியவில்லை. கால்நடை டாக்டர்கள் உணவு முறையை கற்றுத் தந்தனர். ஆன்லைனிலும் தெரிந்து கொண்டேன். சிக்கன், சால்மன்ட் பிஷ், முட்டை, ஈரல், பூசணிக்காய், கேரட், மாதுளை, ஆப்பிள், வாழைப்பழம், கொய்யா, ப்ளூபெரி விரும்பி சாப்பிடுவான். இவனுக்கு சிக்கனில் எலும்பு இருக்கக்கூடாது. இறைச்சியை உப்பு, மஞ்சள் சேர்த்து வேக வைத்து தருவோம். பழங்களில் திராட்சை, ஆரஞ்ச், சாக்லேட், இனிப்பு, உப்பு தரக்கூடாது. தினமும் சாதம் தர மாட்டோம். சரியான ஊட்டச்சத்துடன் குறைந்தளவு உணவு கொடுத்தால் முடி உதிராது.
இதுவரை டிஸ்னியின் முடி தரையில் அதிகமாக உதிர்ந்ததில்லை. குழந்தை உள்ள வீட்டில் தைரியமாக வளர்க்கலாம்; கடிக்காது. உயரமாகவும் வளராது. பற்கள் பெரிதாக இருக்காது. முதல் பிறந்தநாளுக்கு சர்க்கரையில்லா கேக் தந்தோம்; ஆனால், அவனுக்கு பிடிக்கவில்லை. நான்கு ஷூக்கள், டை, தொப்பி அணிவித்து போட்டோ எடுத்து கொண்டாடினோம்.
உடல் நலமில்லாமல் இருந்தால் இரண்டு நாட்கள் வரை பட்டினி கிடப்பான். கட்டி போட்டு வளர்க்க வேண்டியதில்லை. வெளியே போய் வந்தால் சந்தோஷத்தை வெளிப்படுத்துவான். ஆக்டிவ் ஆக இல்லாவிட்டால் சந்தேகம் வந்து கால்நடை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வோம். இவனுக்கு தினமும் ஒருவேளை மட்டன், சிக்கன், மீன் உணவு தருகிறோம். எங்கள் வீட்டருகே வளரும் தெருநாய்களுக்கு ஜிம்மி, டா மி, பிளாக்கி என பெயர் வைத்துள்ளோம். அவற்றுக்கும் இரவு ஒரு வேளை உணவாக இறைச்சி உணவு கொடுக்கிறோம். எங்கள் மனம் ஆனந்தத்தில் திளைக்கிறது; வேறென்ன வேண்டும் .