/
வாராவாரம்
/
சித்ரா... மித்ரா ( கோவை)
/
கான்ட்ராக்ட் வேலைக்கு கமிஷனாக 20 சதவீத 'துட்டு'; கட்டப்பஞ்சாயத்து போலீசுக்கு லஞ்சமாக 2 'பெட்டு!'
/
கான்ட்ராக்ட் வேலைக்கு கமிஷனாக 20 சதவீத 'துட்டு'; கட்டப்பஞ்சாயத்து போலீசுக்கு லஞ்சமாக 2 'பெட்டு!'
கான்ட்ராக்ட் வேலைக்கு கமிஷனாக 20 சதவீத 'துட்டு'; கட்டப்பஞ்சாயத்து போலீசுக்கு லஞ்சமாக 2 'பெட்டு!'
கான்ட்ராக்ட் வேலைக்கு கமிஷனாக 20 சதவீத 'துட்டு'; கட்டப்பஞ்சாயத்து போலீசுக்கு லஞ்சமாக 2 'பெட்டு!'
UPDATED : ஏப் 21, 2025 10:25 PM
ADDED : ஏப் 21, 2025 10:10 PM

'கொடிசியா'வில் நடந்து வரும் 'பில்ட் இன்டெக்' கண்காட்சிக்கு சித்ராவும், மித்ராவும் சென்றிருந்தனர்.
ஒவ்வொரு அரங்கிற்கும் சென்று விபரங்களை சேகரித்த சித்ரா, 'கட்டுமானத்துறையில் இவ்ளோ நவீனத்துவம் இருக்கிறதா' என ஆச்சரியப்பட்டாள். ஒரு அரங்கு கூட விடாமல், தகவல்களை சேகரித்தாள் மித்ரா.
தலைக்குனிவு
ஒரு ரவுண்டு சுற்றி விட்டு வெளியே வந்த சித்ரா, ''கூலி உயர்வு கேட்டு விசைத்தறியாளர்கள் நடத்துன தொடர் போராட்டம், தமிழக அரசுக்கு தலைக்குனிவை ஏற்படுத்திருச்சாமே,'' என, ஆரம்பித்தாள்.
''ஆமாக்கா... மார்ச் மாசத்துல இருந்து போராடிட்டு இருக்காங்க; கவர்மென்ட் தரப்பு கண்டுக்கவே இல்லை; அதிகாரிகள் கூட பேச்சு நடத்தலை. கடையடைப்பு, உண்ணாவிரத போராட்டம் நடத்த ஆரம்பிச்சதும், 'பப்ளிக்' சைடுல ஆதரவு அதிகமாயிடுச்சு. இந்த பிரச்னை சட்டசபையிலும் எதிரொலிச்சதும், மினிஸ்டர்கள் ஆளாளுக்கு பதில் சொன்னாங்க,''
''இதுக்கு இடையே, நம்மூருக்கு வந்திருந்த பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், உண்ணாவிரத பந்தலுக்கு நேர்ல போயி, ஆதரவு தெரிவிச்சாரு. அதே மாதிரி, அ.தி.மு.க., தரப்புல முன்னாள் அமைச்சர் வேலுமணியும் போயி, ஆதரவு தெரிவிச்சாரு. இதெல்லாம் உளவுத்துறை மூலமா கவர்மென்ட் கவனத்துக்கு போயிருக்கு...''
''எலக்சனுக்கு தயாராகிட்டு இருக்கற நேரத்துல, பிரச்னையை ஏன் பெரிசாக்கி வச்சிருக்கீங்கன்னு ஆபீசர்ஸ்களுக்கு மேலிடத்துல இருந்து, 'டோஸ்' விழுந்திருக்கு. இந்த விவகாரத்துனால, மாவட்ட நிர்வாகத்துக்கு பின்னடைவு ஏற்பட்டிருக்கு; நம்மூர்ல சிஸ்டம் சரியில்லைன்னு இப்போ கவர்மென்ட் உணர்ந்திருக்கு.
மூன்று மினிஸ்டர்கள் ஓடோடி வந்து, பேச்சு நடத்தி, போராட்டத்தை வாபஸ் பெற வச்சிருக்காங்க... இதை மாவட்ட நிர்வாகம் முன்னரே செஞ்சிருக்கலாம்; தேவையில்லாம கவர்மென்ட்டுக்கு நெருக்கடி வந்துருக்குன்னு, உடன்பிறப்புகள் பேசிக்கிறாங்க...''
இலையோடு தாமரை
''அதெல்லாம் இருக்கட்டும். நயினார் நாகேந்திரன் 'விசிட்' எப்படி இருந்துச்சு...''
''மாநில தலைவராச்சே... தாமரை கட்சிக்காரங்க தடபுடலா வரவேற்பு கொடுத்தாங்க. ஒவ்வொரு நிர்வாகி பெயரை சொன்ன போதும், அரங்கு அதிரும் அளவுக்கு தொண்டர்கள்கிட்ட கோஷம் வந்துச்சு. அதை கவனிச்ச நயினார், 'ஒவ்வொருத்தரும் ஆளாளுக்கு ஒரு குரூப் வச்சிருப்பீங்க போலிருக்கு... எல்லா குரூப்பும் அண்ணாமலைக்கு கீழே செயல்படுது போலிருக்குன்னு சொன்னதும் கோஷம் இன்னும் பலமாச்சு...''
''பூத் கமிட்டியை பலப்படுத்த வேண்டிய அவசியத்தை, கட்சிக்காரங்களுக்கு சின்னப் பிள்ளைக்கு சொல்லிக் கொடுக்கற மாதிரி சொல்லிக் கொடுத்தாரு. அ.தி.மு.க., நிர்வாகிங்க, தொண்டர்களோட இணைஞ்சு எலக்சன் ஒர்க் இப்ப இருந்தே ஆரம்பிக்கணும்னு, 'அட்வைஸ்' பண்ணியிருக்காரு. இரட்டை இலக்கத்துல சட்டசபைக்குள் நுழைவோம்னு வானதி பேசுனாங்க. அதை திருத்தம் செய்வதாக சொன்ன நயினார், இரட்டை இலையோடு தாமரை மலரும்னு, 'டச்சிங்'கா பேசுனது, தொண்டர்களை வெகுவா கவர்ந்துச்சு...''
களமிறங்கிய அ.தி.மு.க.,
''அ.தி.மு.க.,வும் போராட்ட களத்துல இறங்கிடுச்சாமே...'' என்றபடி, ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்தாள் சித்ரா.
பின்இருக்கையில் அமர்ந்த மித்ரா, ''அசெம்ப்ளி எலக்சனுக்கு இன்னும் ஒரு வருஷமே இருக்கு. தி.மு.க., கவர்மென்ட் செஞ்ச ஊழல், முறைகேடுகளை ஜனங்ககிட்ட ஞாபகப்படுத்துற வேலையை ஆரம்பிக்கணும்னு, கட்சி தலைமையில இருந்து உத்தரவாம். 'நீட்' தேர்வு விவகாரத்துல தி.மு.க.,வை குற்றம் சுமத்தி, உயிரிழந்த மாணவ - மாணவியருக்கு அஞ்சலி செலுத்துற நிகழ்ச்சி நடத்துனாங்க...''
''இதே மாதிரி... ஒவ்வொரு ஊர்லயும் என்னென்ன பிரச்னை இருக்கு, உள்ளாட்சி அமைப்புகள்ல நடந்திருக்கிற ஊழல்களுக்கான ஆதாரங்கள் எல்லாத்தையும் திரட்டச் சொல்லியிருக்காராம் முன்னாள் அமைச்சர் வேலுமணி. அதனால, ரத்தத்தின் ரத்தங்கள் உற்சாகமாயிட்டாங்க,''
''இனி, கார்ப்பரேஷன் நிர்வாகத்துக்கு குடைச்சல் அதிகமாகும்னு இலைக்கட்சிக்காரங்க பேசிக்கிறாங்க. தாமரைக்கட்சியும், இலைக்கட்சியும் கூட்டணி சேர்ந்ததே உடன்பிறப்புகளுக்கு பிடிக்கலை. போராட்ட களத்துல இறங்குனா சிக்கலாகிடுமேன்னு, உடன்பிறப்புகள் அதிர்ச்சியில இருக்காங்க,'' என்றாள்.
இதுக்கு இவ்ளோவா...
''கவர்மென்ட் ஹாஸ்பிட்டல்ல கட்டியிருக்கிற 'வெயிட்டிங் ரூம்' தொகையை கேள்விப்பட்டதும் டாக்டர்ஸ் வாயடைச்சுப் போயிட்டாங்களாமே,''
''ஆமாக்கா... உண்மைதான்! நானும் நேர்ல போயிருந்தேன். பிரசவ வார்டுக்கு பக்கத்துல 'ரூம்' கட்டியிருக்காங்க. நீளமா ஹால் இருந்துச்சு; ஷீட் வேய்ஞ்சு கூடாரம் போட்டிருந்தாங்க. அதுக்கு, 22.10 லட்சம் ரூபாய் செலவாகியிருக்குன்னு, கணக்கு எழுதியிருக்காங்க. இந்த தொகைக்கு வீடே கட்டியிருக்கலாம். கவர்மென்ட் நிதியை கான்ட்ராக்டர்ஸ், எப்படியெல்லாம் சுருட்டுறாங்க பாருங்கன்னு டாக்டர்ஸ் பலரும் புலம்பியிருக்காங்க...''
''கான்ட்ராக்டர்ஸ் சைடுல எல்லை மீறி, கமிஷன் பிரச்னை போகுதுன்னு கேள்விப்பட்டேனே...''
''அதுவும் உண்மைதான்க்கா... அண்ணா மறுமலர்ச்சி ஸ்கீம்ல ஒர்க் எடுக்குற கான்ட்ராக்டர்ஸ் கட்டட வேலையா இருந்தா, 10 சதவீதம், ரோடு வேலை, மழை நீர் வடிகால் கட்டுறதா இருந்தா, 15 சதவீதம் கொடுக்கணும்னு, வாய்மொழி உத்தரவு போட்டிருக்காங்க. கமிஷன் தொகையை நேரு நகர்ல இருக்கறவர்கிட்ட கொடுத்துட்டு வந்தா மட்டுமே, 'ஒர்க் ஆர்டர்' தர முடியும்னு யூனியன் ஆபீசர்ஸ் சொல்றாங்களாம்,''
''ஆளுங்கட்சி வி.ஐ.பி.,க்கு, 15 சதவீதம், ஆபீசர்களுக்கு, 5 சதவீதம், பராமரிப்புக்குன்னு குறிப்பிட்ட சதவீதத்தை பிடிச்சுக்கிறாங்க. மீதமுள்ள தொகையை வச்சு, எப்படி வேலையை தரமா செய்றதுன்னு கான்ட்ராக்டர்ஸ் சைடுல கேக்குறாங்க...''
ரெண்டு பேர் ஆட்டம்
''கார்ப்பரேஷன் ஆபீஸ்ல, ரெண்டு கான்ட்ராக்டர்ஸ் ஆட்டம் தாங்க முடியலையாமே... ஆபீசர்ஸே புலம்புற அளவுக்கு, 'ஒர்க்'குகளை அள்ளுறாங்களாமே...''
''ஒருத்தரு எட்டெழுத்து கான்ட்ராக்டரு; இன்னொருத்தரு ஆறெழுத்து கான்ட்ராக்டரு. மினிஸ்டர் பெயரைச் சொல்லி, கான்ட்ராக்ட்டுகளை 'பிரிச்சுக்' கொடுக்கற வேலையை செய்றோம்னு, அவுங்களே எல்லா வேலையையும் எடுத்துக்கிறாங்களாம். ஒருத்தர் மட்டும் வித விதமா பெயர் வச்சு, அஞ்சு கம்பெனி நடத்துறாராம்.
அந்தந்த கம்பெனி பெயர்ல, 'ஒர்க்' எடுக்குறாராம். இன்னொரு கான்ட்ராக்டருக்கு, ரோடு ஒர்க் செய்ற அளவுக்கு தொழில்நுட்ப அறிவே இல்லையாம். இருந்தாலும் வேலையை எடுத்துட்டு, தரமே இல்லாம செய்றாங்களாம். மத்த கான்ட்ராக்ட்காரங்க, வேலை கெடைக்காம தவிக்கறாங்க. ஆபீசர்ஸ் எதைப்பத்தியும் கவலைப்படாமமீட்டிங் நடத்துறது, ஆய்வுக்கு போறதுல மட்டும் கவனம் செலுத்துறாங்க...''
பணம் சுருட்டல்
''பார்க் மெயின்டனன்ஸ்க்கு கார்ப்பரேஷன்ல இருந்து கோடிக்கணக்குல பணம் ஒதுக்கியிருக்காங்களாமே... அதுல முறைகேடு நடக்குதுன்னு சொல்றாங்க... உண்மையா...''
''ஆமாக்கா... கேள்விப்பட்டேன். பார்க் மெயின்டனன்ஸ் டெண்டர் எடுத்தவங்க, வேலையே செய்யாம, கார்ப்பரேஷன்ல இருந்து மாசம் மாசம் பணம் மட்டும் வாங்கிட்டு இருக்கறது வெளிச்சத்துக்கு வந்திருக்கு. இது கமிஷனர் கவனத்துக்கு போனதும், இன்ஜி., செக்சன் அதிகாரிகளை ஒரு பிடிபிடிச்சிட்டாராம். இனிமேலாவது ஒழுக்கமா, சுத்தம் செஞ்சா நல்லா இருக்கும்னு 'பப்ளிக்' நினைக்கிறாங்க,''
பஞ்சாங்கத்துல பகீர்
''அதெல்லாம் சரி... பஞ்சாங்கம் படிச்சது... வில்லங்கத்துல முடிஞ்சிருச்சாமே...''
''அதுவா... சூலுார் சிவன் கோவில்ல தமிழ் புத்தாண்டு பூஜை ஜோரா நடந்துச்சு. ஆளும்கட்சிக்காரங்க, எதிர்க்கட்சி பிரமுகர்கள், பக்தர்கள்னு கூட்டம் எக்குத்தப்பா இருந்துச்சு. பூஜை முடிஞ்சதும் வழக்கம்போல் பஞ்சாங்கம் படிக்கற நிகழ்ச்சி நடந்துச்சு. புத்தாண்டு பலன் படிக்கிறபோது, பஞ்சாங்கத்துல இருந்த, 'ஆட்சி மாற்றம்'ங்கற வார்த்தையையும் படிச்சாங்க...''
''அதைக்கேட்டு உடன்பிறப்புகள் டென்ஷனாகிட்டாங்க. காரசாரமா கேள்வி கேட்டு, கட்சி மேலிடத்துக்கு தகவல் சொல்லியிருக்காங்க. இப்போ, கோவில் நிர்வாகிங்க, அர்ச்சகர்கள்கிட்ட 'என்கொயரி' நடக்குது. 'பஞ்சாங்கத்துல இருந்ததை படிச்சோம்; அது, தப்பா... எல்லா ஊர்லயும் படிக்கத்தானே செஞ்சாங்க. நம்மூர்ல மட்டும் தேவையில்லாம பிரச்னை பண்ணிட்டு இருக்காங்கன்னு கோவில் நிர்வாகம் தரப்புல நொந்து போயிருக்காங்க...''
லஞ்சமா மெத்தை
''நம்மூர் போலீஸ்காரங்க லஞ்சமா பணம் வாங்குறதுக்கு பதிலா, மெத்தை வாங்குனாங்களாமே...'' என்றபடி, ஜென்னீஸ் ரெசிடென்சி அருகே ஸ்கூட்டரை ஓரங்கட்டினாள் சித்ரா.
கரும்பு ஜூஸ் ஆர்டர் கொடுத்த மித்ரா, ''அந்தக் கூத்தை ஏன் கேக்குறீங்க... மேற்கு போக்குவரத்து புலனாய்வு போலீஸ் ஸ்டேஷன்ல இருக்கற ரெண்டு போலீஸ்காரங்க, ஸ்டேஷன்ல வச்சே கட்டப்பஞ்சாயத்து செய்றாங்க. கம்ப்ளைன்ட் பண்ண வர்றவங்கள்ட்ட விசாரிச்சிட்டு, வழக்கு பதிவு செய்யாம, ரெண்டு தரப்பையும் அழைச்சு சமாதானம் பேசுற மாதிரி, பஞ்சாயத்து பண்ணிட்டு இருக்காங்க,''
''சமீபத்துல, மெத்தை வியாபாரி ஒருத்தரு ஸ்டேஷனுக்கு போயிருக்காரு. ஆக்சிடென்ட் கேஸ் சம்பந்தமா டீல் பேசியிருக்காங்க.
ரெண்டு தரப்பையும் சமாதானம் செஞ்சு வச்சுட்டு, லஞ்சமா 2 மெத்தை வாங்கியிருக்காங்க. ஸ்டேஷனுக்குன்னு ஒரு வக்கீல் வச்சிருக்காங்களாம். அந்த வக்கீலை ரெக்கமென்ட் செஞ்சு, கமிஷன் வாங்கிக்கிறாங்களாம். ஏழை ஜனங்க கேஸ் கொடுக்க போனா, போலீஸ் தோரணையில் மிரட்டி, விரட்டி விடுறாங்களாம்...'' என்றாள்.
ஜூஸ் பருகி விட்டு, அலுவலகம் நோக்கி, ஸ்கூட்டரை முறுக்கினாள் சித்ரா.