/
வாராவாரம்
/
சித்ரா... மித்ரா ( கோவை)
/
இலை கட்சிக்கு ஓ.பி.எஸ்., துாண்டில் அமைச்சரிடம் பணம் கேட்ட கவுன்சிலர்கள்!
/
இலை கட்சிக்கு ஓ.பி.எஸ்., துாண்டில் அமைச்சரிடம் பணம் கேட்ட கவுன்சிலர்கள்!
இலை கட்சிக்கு ஓ.பி.எஸ்., துாண்டில் அமைச்சரிடம் பணம் கேட்ட கவுன்சிலர்கள்!
இலை கட்சிக்கு ஓ.பி.எஸ்., துாண்டில் அமைச்சரிடம் பணம் கேட்ட கவுன்சிலர்கள்!
UPDATED : ஜன 16, 2024 02:59 AM
ADDED : ஜன 15, 2024 11:11 PM

வீட்டில் மா இலை தோரணம் கட்டி, பொங்கல் திருநாளை கோலாகலமாக கொண்டாடி விட்டு, கோனியம்மன் கோவிலுக்குச் செல்வதற்காக, பாரம்பரிய உடையணிந்து, சித்ராவும், மித்ராவும் ஸ்கூட்டரில் புறப்பட்டனர்.
நகரெங்கும் பொங்கல் விழா களை கட்டியிருந்தது. ஆங்காங்கே, தி.மு.க.,நிர்வாகிகள் பலரும், வார்டுக்குள் விழா நடத்தி, செல்வாக்கை காட்டிக் கொண்டிருந்தனர்.
அதை கவனித்த மித்ரா, ''அக்கா, பொங்கல் பண்டிகை கொண்டாடுறதுக்காக, ஆளுங்கட்சி நிர்வாகிகளுக்கு பணம் கொடுத்தாங்களாமே...'' என, கேட்டாள்.
''ஆமாப்பா! பொங்கல் பண்டிகைக்கு, மாவட்ட பொறுப்பு அமைச்சரான முத்துசாமி, பண்டிகை பணம் கொடுத்திருக்காரு. ஒன்றியம், பகுதி கழகச் செயலாளருக்கு தலா ஒரு லட்சம்; நகரச் செயலாளர்களுக்கு, 50 ஆயிரம்; கிளைச் செயலாளர்களுக்கு 2,000, பாக முகவர்களுக்கு, 500 முதல், 1000 ரூபாய் வரை வழங்கியிருக்காரு. இதே மாதிரி, கவுன்சிலர்களுக்கும் அள்ளிக் கொடுத்திருக்காரு,''
''அதுல, கம்யூ., கட்சிகளை சேர்ந்த கவுன்சிலர்களுக்கும் அழைப்பு போயிருக்கு. அவுங்களும் அமைச்சரை சந்திச்சு பேசியிருக்காங்க; அப்போ, மக்கள் பிரச்னை சம்பந்தமா மட்டும் பேசி, மனு கொடுத்துட்டு வந்தாங்களாம். பண்டிகை பணத்தை வேணாம்னு சொல்லிட்டு வந்துட்டதா, கட்சி நிர்வாகிகள் சொல்றாங்க,''
மாசம் மாசம் தாங்க!
''மாசம் மாசம் பணம் கொடுக்குற மாதிரி ஏற்பாடு செய்யச் சொல்லி, மினிஸ்டர் கிட்ட முறையிட்டாங்களாமே...''
''அதுவா... ஏ.டி.எம்.கே., ஆட்சியில, 'டாஸ்மாக்' கலெக்சன் தொகையை பங்கு பிரிச்சு, ஒவ்வொரு வார்டு செயலாளருக்கும் ரூ.25 ஆயிரம் கொடுத்தாங்க. தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும் அதே மாதிரி, பணம் கெடைக்கும்னு உடன்பிறப்புகள் நம்பிட்டு இருந்தாங்க. ஆனா, ஒருத்தருக்கும் வருமானம் கெடைக்கலை,''
''ஏ.டி.எம்.கே., ஆட்சியில இருந்த மாதிரி, மாசம் மாசம் பணம் வர்ற மாதிரி ஏற்பாடு செய்யுங்க. அப்போ தான், லோக்சபா எலக்சன் சமயம், தாராளமா செலவு செய்ய முடியும்னு மினிஸ்டர்கிட்ட உடன்பிறப்புகள் சொல்லிட்டு வந்திருக்காங்களாம்,''
பார் கலெக்சன்
''டாஸ்மாக் பார் லைசென்ஸ் வாங்கித்தர்றோம்னு சொல்லி, வசூல்ல உடன்பிறப்புகள் பின்னிப் பெடலெடுத்துட்டதா கேள்விப்பட்டேனே...''
''அதுவும் உண்மைதான்! தொழிற்சங்கத்தைச் சேர்ந்த ஒருத்தரு, கட்சி நிர்வாகி மூலமா 'பார்' லைசென்ஸ் வாங்கித் தர்றதா சொல்லி, ஒரு கடைக்கு ரூ.85 ஆயிரம் வீதம் கலெக்சன் போட்டிருக்காரு. நாச்சிபாளையத்தைச் சேர்ந்த ஒருத்தரு, அதை நம்பி பணம் கொடுத்திருக்காரு; அவருக்கு லைசென்ஸ் கெடைக்கலை. அதனால, கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்டிருக்காரு; அதுக்கு, 'பணத்தை மேலிடத்துக்கு கொடுத்திட்டோம்; திரும்பக் கெடைக்கறதுக்கு வாய்ப்பில்லை'ன்னு சொல்றாராம். அதனால், கட்சி தலைமைக்கு புகார் கடிதம் எழுதிட்டு, ஆக் ஷனுக்காக காத்துட்டு இருக்காரு,''
வி.ஐ.பி., - பி.ஏ.,
''மதுக்கடைகளை படிப்படியா மூடுவோம்னு சட்டசபை எலக்சன் சமயத்துல வாக்குறுதி கொடுத்தாங்க. இப்போ, ஊரெல்லாம் 'எப்.எல்., 2 பார்' ஓபன் பண்ணிட்டு இருக்காங்களே... அதைப்பத்தி விசாரிச்சீங்களா...''
''ஆமாப்பா... நானும் கேள்விப்பட்டேன். மதுரை பக்கத்துல இருக்கற, திருப்புவனத்தைச் சேர்ந்த வெற்றி விநாயகரின் வேறு பெயரைக் கொண்ட ஒருத்தரு, 10 பார்களை நடத்திட்டு வர்றாராம். எப்.எல்., 2 பார் லைசென்ஸ் வாங்கித்தர்றதுக்கு, மிக முக்கிய புரோக்கராவும் செயல்படுறாராம்,''
''துறை வி.ஐ.பி.,யின் பி.ஏ.,வும், இவரும் கூட்டாளிகளாம். ஒரு லைசென்ஸ் வாங்கித்தர, 25லிருந்து, 30 லட்ச ரூபாய் காசு பார்க்கிறார்களாம். ஆளும்கட்சி பிரமுகர்கள் சிலரும், எப்.எல்., 2 பார்களை புதுசு புதுசா ஆரம்பிச்சிட்டு இருக்காங்க,'' என்றாள் சித்ரா.
ஓ.பி.எஸ்., டீம் மூவ்
ஓட்டலுக்கு அருகே அ.தி.மு.க., கொடி கட்டிய கார் ஒன்று நின்றிருந்தது. அதைப்பார்த்த மித்ரா, ''அக்கா, இலைக்கட்சியைச் சேர்ந்த ரத்தத்தின் ரத்தங்கள் ரொம்பவும் சோர்ந்து போயிருக்காங்களாமே... அணி தாவுறதுக்கு தயாரா இருக்கறதா சொன்னாங்க...''
''ஆமா, மித்து! சூலுார் ஏரியாவை சேர்ந்த இலைக்கட்சி நிர்வாகிகள் மத்தியில இணக்கமும், ஒருங்கிணைப்பும் இல்லாம இருக்குது. கட்சி சார்புல ஏதாச்சும் விழா நடத்துனா மட்டும் நிர்வாகிகள் தலை காட்டுறாங்க. மத்த நேரங்கள்ல எந்த ஊருக்கும் எட்டி கூட பார்க்குறதில்லையாம்; தொண்டர்களையும் சந்திக்கறதே இல்லையாம்,''
''விரக்தி மனப்பான்மையில கட்சிக்காரங்க இருக்கறதை, ஓ.பி.எஸ்., டீம் புரிஞ்சு வச்சிருக்கு. அதனால தான், நம்மூர்ல மீட்டிங் நடத்தியிருக்காரு. அவரோட பேச்சுல மயங்குனவங்க, அவர் அணிக்கு தாவுறதுக்கு தயாரா இருக்காங்களாம். எம்.பி., எலக்சனுக்கு முன்னாடி, இலைக்கட்சி கூடாரத்தை கலைக்கறதுக்கு, ஓ.பி.எஸ்., டீம் 'மூவ்' பண்ணிட்டு இருக்குதாம்,''
தாமரைக்காரங்க மகிழ்ச்சி
''பா.ஜ.,தரப்பிலும், 'பண்டிகை பணம்' கொடுத்ததா சொன்னாங்களே...''
''ஆமாப்பா, நீலகிரி தொகுதியில பா.ஜ., போட்டியிட முடிவு செஞ்சுருக்கு. தொகுதியை தயார்படுத்துற வேலை, ரொம்ப நாளா நடந்துட்டு இருக்குது; தெனமும் ஒரு மீட்டிங் நடத்துறாங்க; இன்ஸ்ட்ரக்சன் வந்துட்டே இருக்கு,''
''பொங்கல் பண்டிகையை கோலாகலமா கொண்டாடுறதுக்காக, ரெண்டு நாளைக்கு முன்னாடி, பூத் கமிட்டி பொறுப்பாளர்களுக்கு, பணம் கொடுத்திருக்காங்க. அதனால, தாமரை கட்சிக்காரங்க உற்சாகமா வேலை பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க,'' என்றபடி, கோவிலுக்குள் நுழைந்தாள் சித்ரா.
பின்தொடர்ந்து சென்ற மித்ரா, ''கோசாலை செயல்படுற இடத்தை அபகரிக்கிறதுக்கு, கவுன்சிலர் கணவர் முயற்சி செஞ்சாராமே... கமிஷனர் தலையிட்டு தடுத்து நிறுத்திட்டதா கேள்விப்பட்டேனே,'' என, கேட்டாள்.
''உண்மைதான் மித்து! நேரு ஸ்டேடியம் பக்கத்துல அம்மன் கோவில் இருக்குது; அங்க இருக்கற கோசாலையில, 11 மாடு பராமரிக்கிறாங்க. கோசாலையை சுத்தப்படுத்துறதுக்காக, மாடுகளை வெளியே கட்டி வச்சிருக்காங்க,''
''கவுன்சிலர் கணவர் துாண்டுதலால, கார்ப்பரேஷன் ஆபீசர்ஸ் போயி, மாடுகளை சிறைபிடிச்சு, வ.உ.சி., பூங்காவுக்கு கொண்டு போயிட்டாங்க. மறைமுகமா, கோசாலை இடத்தை அபகரிக்க பிளான் போட்டது தெரிஞ்சிருக்கு,''
''இந்த விஷயம், கார்ப்பரேஷன் கமிஷனர் கவனத்துக்கு போனதும், 'இப்படி எல்லாம் செய்யக் கூடாதுன்னு புத்திமதி சொல்லி, மாடுகளை விடுவிச்சிட்டாராம்; கவுன்சிலரின் கணவருக்கும் பக்குவமா அட்வைஸ் சொல்லியிருக்காராம்,''
ஆர்வமில்லாத வீரர்கள்
''நேரு ஸ்டேடியம்னு சொன்னதும், எனக்கொரு விஷயம் ஞாபகத்துக்கு வருது. நம்மூரிலும் கேலோ விளையாட்டு போட்டி நடக்கப் போகுதாமே...''
''ஆமா, மித்து! வர்ற, 19ல இருந்து, 31 வரை நடக்குது. மொத்தம், 28 வகையான விளையாட்டு போட்டிகள் நடத்தப் போறாங்க. இதுல, நம்மூர்ல கூடைப்பந்து, தாங் டா போட்டி நடத்துறதுக்கு ஏற்பாடு நடந்துக்கிட்டு இருக்குது,''
''தமிழக அணிக்கு வீரர்கள் செலக்சன், ஸ்டேட் முழுக்க நடத்திட்டு வர்றாங்க. களரி பயட்டு போட்டிக்கு நம்மூர்ல வீரர்கள் தேர்வு செஞ்சாங்க.
ஒரு அணிக்கு ரெண்டு பேருன்னு மொத்தமாவே மூனு அணி மட்டுமே கலந்துக்கிட்டாங்களாம். காலையில, 7:00 மணியில இருந்து மாலை, 4:00 மணிக்கு விளையாட்டு அதிகாரி, காத்துக்கிட்டு இருந்தாராம். அதுக்கப்புறம் தேர்வு நடத்தி, ஒரு அணியை தேர்வு செஞ்சாங்களாம்,''
ஆபீசரின் பாராமுகம்
''கலெக்டர், கார்ப்பரேஷன் கமிஷனர், போலீஸ் கமிஷனர், எஸ்.பி., உள்ளிட்ட பல ஆபீசர்களும், மக்களிடம் ரொம்பவும் நெருக்கமா இருக்காங்க. காது கொடுத்து கேட்டு, பிரச்னைகளுக்கு தீர்வு ஏற்படுத்துறாங்க. ஆனா, அந்த லேடி ஆபீசர் மட்டும் மக்களை சந்திக்கவே மறுக்குறாங்களாமே...''
''பத்திரப்பதிவுத்துறையில இருக்குற லேடி ஆபீசரைத்தானே சொல்ற... 'நேர்மையான அதிகாரி'ன்னு பெயர் பெற்ற அவரிடம், அத்துறையை சேர்ந்த கீழ் அதிகாரிகள் எவ்ளோ தப்பு செய்றாங்க; லஞ்சம் எவ்வளவு வாங்குறாங்கன்னு புகார் சொல்றதுக்கு போனா... யாரையும் பார்க்காமல் திருப்பி அனுப்புறாராம்.
லஞ்சம் வாங்காம நேர்மையா இருந்தாலும், சக அதிகாரிகளை கண்டிக்க வேண்டிய ஆபீசர், வேடிக்கை பார்க்கலாமான்னு பாதிக்கப்பட்ட ஜனங்க புலம்புறாங்க,'' என்றபடி, தரிசனம் முடிந்து, கோவிலை விட்டு வெளியே வந்தாள் சித்ரா.
போலீஸ்காரங்க வருத்தம்!
டவுன்ஹால் பகுதியில் போலீசார், போக்குவரத்தை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தனர்.
''ஆயுதப்படை மைதானத்துல காவல்துறை சார்புல தடபுடலா பொங்கல் விழா நடத்தி, அசத்திட்டாங்களாமே...''
''ஆமாப்பா... கலெக்டர் ஆபீசுல நடந்த விழாவுல, கலெக்டரே களமிறங்கி, கயிறு இழுக்கும் போட்டியில கலந்துக்கிட்டாரு; கண்ணைக்கட்டிக்கிட்டு உறியடிச்சாரு. அதே மாதிரி, போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், மாட்டு வண்டி ஓட்டி கலக்கிட்டாரு,''
''இருந்தாலும், ஆயுதப்படை போலீஸ்காரங்க மனசுக்குள்ள லேசா மன வருத்தம் இருக்குதே...''
''அதுவா... ஆயுதப்படையில வேலை பார்க்குற போலீஸ்காரங்களுக்கு, 2,500 ரூபாய் பயணப்படி கொடுப்பாங்களாம்; அஞ்சு மாசமா கொடுக்காம இருக்காங்களாம்.
இதே மாதிரி, தனி நபர் (எஸ்கார்ட்) பாதுகாப்புக்கு போற போலீஸ்காரங்களுக்கு, உணவுப்படி கொடுப்பாங்க; இந்த பணமும் கொடுக்காம நிறுத்தி வச்சிருக்காங்க.
எஸ்கார்ட் டூட்டிக்கு போற போலீஸ்காரங்க நைட் துாங்கறதுக்கு இடம் இல்லாம தவிக்கிறாங்களாம்,'' என்றபடி, ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்தாள் சித்ரா.