/
வாராவாரம்
/
சித்ரா... மித்ரா ( கோவை)
/
குஷியில த.வெ.க.,காரங்க ஊதுறாங்க விசிலு!
/
குஷியில த.வெ.க.,காரங்க ஊதுறாங்க விசிலு!
ADDED : ஜன 27, 2026 05:18 AM

சோ பாவில் அமர்ந்து நாளிதழ்களை வாசித்துக் கொண்டிருந்தாள் சித்ரா.
காபி கோப்பையை நீட்டிய மித்ரா, ''என்னக்கா, ஆளுங்கட்சி சார்புல குனியமுத்துார்ல பிரமாண்டமா தொகுதி அலுவலகம் திறக்கப் போறாங்களாமே...'' என ஆரம்பித்தாள்.
''ஆமாப்பா, ஒவ்வொரு தொகுதிக்கும் பொதுவா ஒரு அலுவலகம் திறக்குறாங்க. ஏற்கனவே சிங்காநல்லுார்ல திறந்துட்டாங்க. நாளைக்கு குனியமுத்துார்ல திறக்கப் போறாங்க. தொகுதி வேலையை இங்கிருந்து செய்வாங்களாம். முன்னாள் அமைச்சர் வேலுமணி, சுகுணாபுரத்துல குடியிருக்காரு. அவருக்கு யாரெல்லாம் தகவல் அனுப்புறாங்கன்னு 'பல்ஸ்' பார்க்குறதுக்காகவே, இந்த ஏரியாவுல அலுவலகம் திறக்குறாங்களாம்...''
''ஏனாம்...''
''2021 தேர்தல்ல சில தொகுதிகள்ல தி.மு.க. ஜெயிக்கிறதுக்கு வாய்ப்பு இருந்திருக்கு. கட்சிக்காரங்க உள்ளடி வேலை செஞ்சு, அவுங்களை கவுத்து விட்டிருக்காங்க. தொண்டாமுத்துார்ல ரெண்டெழுத்து நிர்வாகி ஒருத்தரு அ.தி.மு.க. கூட ரகசிய உறவு வச்சிருந்து, கட்சி வேட்பாளரை 'காலி' செஞ்சதா ஒரு பேச்சு ஓடிட்டு இருக்கு. இதுக்கு ஆதாரமா மொபைல் போன் அழைப்பு விவகாரங்களை லிஸ்ட் எடுத்து கொடுத்திருக்காங்க. இதெல்லாம் பொறுப்பாளர் கவனத்துக்குப் போயிருக்கு. அதனால, அதே ஏரியாவுல முகாம் போடுறாங்களாம்,'' என்றபடி, காபியை உறிஞ்சினாள் சித்ரா.
துண்டு போடும் கமல் ''தெற்கு தொகுதிக்கு ஏகப்பட்ட கிராக்கி வந்துருச்சே...''
''ஆமா, மித்து! ஆளுங்கட்சி கூட்டணியில இணைஞ்சிருக்கிற கமலும் தொகுதி கேட்டு லிஸ்ட் கொடுத்திருக்காரு. அவரு தோத்த இடத்துல ஜெயிச்சுக் காட்டணும்னு ஆசைப்படுறாராம். அவருக்கு ஒரு தொகுதி கண்டிப்பா கொடுப்பாங்கன்னு சொல்றாங்க. முந்தைய தேர்தல்ல தெற்கிலும், சிங்காநல்லுார்லயும் ஜாஸ்தியா ஓட்டு வாங்குனாங்க. இந்த ரெண்டு தொகுதியை குறிப்பிட்டு கேக்குறாராம். இதே ரெண்டு தொகுதியில ஆளுங்கட்சி பிரமுகர்கள் பலரும் போட்டி போடுறதுக்கு காய் நகர்த்திட்டு வர்றாங்க. கமலும் கேக்குறதுனால ஆளுங்கட்சியினர் 'ஷாக்' ஆகியிருக்காங்க,''
தொகுதி மாறும் எல்.எல்.ஏ. ''அ.தி.மு.க. சிட்டிங் எம்.எல்.ஏ. தொகுதி மாறுறாராமே...''
''அதுவா... லோக்சபா தேர்தல்ல மேட்டுப்பாளையம் ஏரியாவுல பா.ஜ.வுக்கு கணிசமா ஓட்டு விழுந்துச்சு. அ.தி.மு.க. ஓட்டு சேர்ந்தா ஜெயிக்கிறது ஈஸின்னு பா.ஜ. கணக்கு போட்டு, தொகுதியை கேக்குது. செங்கோட்டையன் த.வெ.க.வுக்கு தாவுனதுனால, அ.தி.மு.க.வுல அவர் வகிச்ச ஈரோடு புறநகர் மாவட்ட செயலாளர் பதவியை, சிட்டிங் எம்.எல்.ஏ. - ஏ.கே.எஸ்.க்கு கொடுத்திருக்காங்க.
அதனால, கோபியில ஏ.கே.எஸ்.சை களமிறக்கி, கே.ஏ.எஸ்.சை (செங்கோட்டையன்) தோற்கடிக்கணும்னு அ.தி.மு.க.வுல பேச்சு ஓடிட்டு இருக்கு. ஆளுங்கட்சியிலும் காங்கிரசுக்கு தொகுதிய விட்டுக் கொடுக்கப் போறதா சொல்றாங்க. அதனால, ரெண்டு தேசியக் கட்சியும் நேருக்கு நேரா போட்டி போடுவாங்கன்னு அரசியல் வட்டாரத்துல பரபரப்பா பேசிக்கிறாங்க,''
''அதெல்லாம் இருக்கட்டும். ஆளுங்கட்சி முன்னாள் எம்.எல்.ஏ. ஒருத்தரு ரோடு வேலையை நிறுத்தி வச்சிருந்தாராமே... சிட்டிங் எம்.எல்.ஏ. அழுத்தம் கொடுத்ததும் வேலைய ஆரம்பிக்கப் போறதா கேள்விப்பட்டேனே...
''ஆமாப்பா, நானும் கேள்விப்பட்டேன். மேட்டுப்பாளையம் நகராட்சி குப்பை கிடங்குக்கு பக்கத்துல மாஜியின் தோட்டம் இருக்கு; தோட்டத்துக்கு தண்ணீர் இணைப்பு எடுத்திருக்காங்க. கிடங்கை ஒட்டி இருக்கற தார் சாலையை புதுப்பிக்க நிதி ஒதுக்கியிருக்காங்க. ரோடு போட்டா குழாய் சேதமாகிடும்னு, தடுத்து நிறுத்தியிருக்காங்க. அப்போ, முன்னாள் எம்.எல்.ஏ.ன்னு சொல்லாம எம்.எல்.ஏ. சொன்னாருன்னு சம்பந்தப்பட்ட அதிகாரிகிட்ட சொல்லியிருக்காங்க. இதை கேள்விப்பட்ட சிட்டிங் எம்.எல்.ஏ. கண்டிப்பா ரோடு போட்டே ஆகணும்னு அழுத்தம் கொடுக்குறாராம். வேற வழியில்லாம ரோடு வேலையை ஆரம்பிக்கப் போறாங்க,''
த.வெ.க.வுக்கு தெம்பு ''அதெல்லாம் சரி... மாமல்லபுரம் கூட்டத்துக்கு அப்புறம் த.வெ.க.வினர் தெம்பாகிட்டாங்களாமே...''
''சி.பி.ஐ. விசாரணையில விஜய் ஆஜரானதுல கட்சிக்காரங்க ரொம்பமும் நொந்து போயிருந்தாங்க. ஜனநாயகன் படமும் ரிலீசாகாததால 'சைலன்ட்'டா இருந்தாங்க,''
''மாமல்லபுரம் கூட்டத்துல தனித்து போட்டின்னு அறிவிச்சதுனால தெம்பாயிட்டாங்களாம். நம்மூரை சேர்ந்த மாவட்ட செயலாளரை, மேடையில பேசச் சொன்னாங்க. கிணத்துக்கடவு தொகுதியில நடந்த சம்பவத்தை வெளிப்படையா பேசுனாரு. அவருக்கு எப்படியும் 'சீட்' கொடுப்பாங்கன்னு கட்சிக்காரங்க விசிலடிக்க ஆரம்பிச்சிட்டாங்க,''
மோப்ப நாய் தேடல் ''அரசியல் விவகாரம் எல்லாம் போதும்... லஞ்சப்பணத்தை மோப்ப நாய் கண்டுபிடிச்சு கொடுத்துச்சாமே... '' என, சப்ஜெக்ட் மாறினாள் மித்ரா.
''ஆமா, மித்து! வடக்கு தாலுகா ஆபீசுல லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடந்துச்சு. லஞ்சம் வாங்குன அலுவலர், ஜன்னல் வழியா பணத்தை துாக்கி வீசிட்டாரு. பக்கத்துல ஜெயில் வளாகம் இருக்கு. அதுக்குள்ள விழுந்திருக்குமோன்னு சந்தேகம் வந்துச்சு. மோப்ப நாய் வரவழைச்சு சோதனை செஞ்சாங்க. ஒவ்வொரு இடமா சுத்துன மோப்ப நாய், பழைய வண்டிகள் நிறுத்தியிருக்கற இடத்துக்குப் போச்சு. அந்த இடத்தை சல்லடை போட்டு லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை செஞ்சதுல, 7,000 ரூபா சிக்குச்சு...''
''இந்த விவகாரத்துல இன்னும் மூனு பேர் சம்பந்தப்பட்டு இருக்காங்களாம். அவுங்களை போலீஸ்காரங்க விட்டுட்டாங்கன்னு சொல்றாங்க. வழக்கமா, அதிகாரிகளுக்கு லஞ்சம் எவ்வளவுன்னு சொன்னதும், ஆவண காப்பக அறையில இருக்கறவங்கள்ட்ட கொடுத்துட்டு போகணுமாம். அலுவலக உதவியாளர்கள், அந்த தொகையை வாங்கிட்டுப் போயிடுவாங்க. சோதனை நடந்த சமயம் கடைசியா கொடுத்த பணம் மட்டுமே சிக்கியிருக்காம். காலையில இருந்து யார் யாரெல்லாம் லஞ்சம் கொடுத்தாங்கன்னு விசாரணை நடத்துனா, அந்த மூனு பேரும் சிக்குவாங்கன்னு ஊழியர்கள் பேசிக்கிறாங்க,''
''அக்கா... லஞ்சம் வாங்குற ஊழியரின் அடாவடியை பார்த்து, ஒரு அதிகாரியே தலைதெறிச்சு ஓடிட்டாராமே... ''
''அந்த கூத்தை ஏன் கேக்குறே! சுந்தராபுரம் ஏரியாவுல இருக்கற மின் வாரிய ஊழியர் ஒருத்தரு, லஞ்சம் கொடுக்கலைன்னா, எந்த வேலையும் செய்ய மாட்டாரு. ஒவ்வொரு வேலைக்கும் ஒரு ரேட் 'பிக்ஸ்' பண்ணி வச்சிருக்காரு. அவர் மேல ஏகப்பட்ட புகார் மின்வாரியத்துக்கு போயிருக்கு.
லஞ்ச ஊழியர், சிக்கல்ல விட்டுருவாருன்னு பயந்த அதிகாரி, வேறிடத்துக்கு மாறுதல் வாங்கிட்டு கிளம்பிட்டாரு. லஞ்ச பேர்வழியை பிடிக்கறதுக்கு லஞ்ச ஒழிப்பு துறைக்கு நல்ல நேரம் வரணும் போலிருக்கு...'' என்ற சித்ரா, ''போன வாரம் நாம பேசுன லேடி இன்ஸ்பெக்டரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாத்திட்டாங்களாமே,'' என கேட்டாள்.
''ஆமாக்கா, டி.ஜி.பி. அலுவலகத்துக்கு அவரை பத்தி புகார் போயிருக்குன்னு பேசுனோம். அவுங்க மேல நடவடிக்கை எடுத்திருக்காங்க. ஒடனே ஒரு மாசம் லீவு போட்டுட்டாங்களாம். உயரதிகாரிகளை சந்திச்சு, எப்படியாச்சும் 'போஸ்ட்டிங்' வாங்கிடுவாங்கன்னு போலீஸ் வட்டாரத்துல பேசிக்கிறாங்க,''
திமிங்கலம் சிக்குமா ''தங்க நகை மோசடி நடந்துச்சே. அந்த வழக்கு என்னாச்சு, இன்ஸ். ஒருத்தரு சம்பந்தப்பட்டு இருந்தாரே... அமுக்கிட்டாங்களா...'' என, நோண்டினாள் சித்ரா.
''ஆமாக்கா... அந்த வழக்கை நீர்த்துப் போகச் செய்றதுக்கான வேலையை போலீஸ்காரங்களே செஞ்சிட்டு இருக்காங்க போலிருக்கு. இப்போ, சி.பி.சி.ஐ.டி.கிட்ட வழக்கு போயிருக்கு. அவுங்க விசாரிக்காம இருக்காங்க. முறையா விசாரிச்சா ஏகப்பட்ட அதிகாரிகள் சிக்குவாங்கன்னு நேர்மையான போலீஸ்காரங்க சொல்றாங்க. சம்பந்தப்பட்ட இன்ஸ். எந்த பயமும் இல்லாம தைரியமா இருக்காராம்,''
சரக்கு சேல்ஸ் ஜோர் ''மதுக்கடைக்கு பக்கத்துல இருக்கற சட்ட விரோத 'பார்'ல நேத்து மதுபான விற்பனை ஜோரா நடந்துச்சாமே...''
''ஆமாக்கா... போலீஸ்காரங்களுக்கு லஞ்சம் கொடுத்தா போதும்... 24 மணி நேரமும் மதுபானம் விக்கலாங்கிற நிலைமை நம்மூர்ல வந்துருச்சு. குடியரசு தின விழாங்கிறதுனால மதுபானம் விக்கக் கூடாதுன்னு கடையை மூடச் சொல்லி இருந்தாங்க. ஆனா, சட்ட விரோதமா செயல்படுற 'பார்'கள்ல ஜோரா விற்பனை நடந்துருக்கு...''
''நம்ம மாவட்டத்துல 17 'பார்' சட்டவிரோதமா செயல்படுதாம். கவுண்டம்பாளையத்துல நான்கெழுத்து மருத்துவமனைக்கு பக்கத்துல சட்டவிரோதமா நாலரை வருஷமா செயல்படுற 'பார்'ல நேத்து விற்பனை நடந்துருக்கு. சம்பந்தப்பட்ட ஸ்டேஷனுக்கு லஞ்சமா ஒரு லட்சம் ரூபா, மத்தியானம் ஸ்டேஷன்ல இருக்கற அத்தனை பேருக்கும் மட்டன் பிரியாணி கொடுத்திருக்காங்களாம். மதுவிலக்குகாரங்களுக்கு 50 ஆயிரமாம். அதனால கண்டுக்காம விட்டுட்டாங்களாம்,'' என்றபடி, நகர்வலத்துக்கு புறப்பட தயாரானாள் மித்ரா.

