/
வாராவாரம்
/
சித்ரா... மித்ரா ( கோவை)
/
கோவையில யாரு கெத்து? பற்ற போகுது பரபரப்பு!
/
கோவையில யாரு கெத்து? பற்ற போகுது பரபரப்பு!
ADDED : செப் 15, 2025 11:26 PM

ஈ ச்சனாரி விநாயகர் கோயிலுக்குச் சென்றிருந்த சித்ராவும், மித்ராவும் சுவாமி தரிசனம் முடித்து விட்டு, திரும்பினர்.
ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்த மித்ரா, ''அக்கா, நம்மூர்ல செகன்ட் ரவுண்ட் இ.பி.எஸ்.,பிரசாரம் செஞ்சாரே. 'ரிசல்ட்' எப்படி இருந்துச்சாம்...'' என, பேச்சை ஆரம்பித்தாள்.
''பர்ஸ்ட் ரவுண்ட் பிரசாரத்தை விட, 'பெட்டரா' இருந்துச்சுன்னு பேசிக்கிட்டாங்க. தொண்டாமுத்துார்ல கெத்து காட்டுனதுனால, இ.பி.எஸ்.,செம ஹேப்பியாம். வேலுமணியை, வார்த்தைக்கு வார்த்தை, 'தம்பி... தம்பி...'ன்னு பாசமா கூப்பிட்டிருக்காரு. அவரும்... 'அண்ணா....'ன்னு கூப்பிட்டுருக்காரு,''
''குனியமுத்துார்ல ரோட்டுல ரெண்டு சைடும் பிளக்ஸ் பேனர் வச்சிருந்தாங்களே..''
''ஆமாப்பா... அன்னைக்கு பெரிய அளவுல வரவேற்பு குடுத்தாங்க. ரோட்டுல போறவங்களுக்கு கடைகள் தெரியாத அளவுக்கு பிளக்ஸ் பேனர், கொடிக்கம்பங்கள் எக்குத்தப்பா வச்சிருந்தாங்க. இதுக்கு ஒரு கடைக்காரங்க கூட எதிர்ப்பு தெரிவிக்கலை. இருந்தாலும், போலீஸ் தரப்புல பெயரளவுக்கு, கேஸ் போட்டிருக்காங்க...''
''குனியமுத்துார், சுந்தராபுரம் ஏரியாவுல நடந்த கூட்டத்துக்கு, பல இடங்கள்ல இருந்து வண்டிகள்ல ஆட்கள அழைச்சிட்டு வந்திருந்தாங்க. 200ல இருந்து, 500 ரூபா வரைக்கும் தர்றதா கட்சி நிர்வாகிங்க சொல்லியிருக்காங்க. மீட்டிங் முடிஞ்சதுக்கு அப்புறம் பட்டுவாடா செய்றதுக்கு 'லேட்' பண்ணியிருக்காங்க. சிலருக்கு தொகையை குறைச்சுக் கொடுத்திருக்காங்க. அதனால, நிர்வாகிகளை ஆட்கள் திட்டித் தீர்த்துட்டாங்க,''
விஜய்க்கு முட்டுக்கட்டை ''நம்மூருக்கு விஜய் வரப் போறாரே...''
''ஆமா, அக்., 4, 5ல வர்றாரு. 4ம் தேதி நம்மூர்லயும், ஊட்டியிலும் பிரசாரம் செய்றாரு. 5ம் தேதி திருப்பூர்லயும், ஈரோட்டுலயும் பிரசாரம் செய்யப் போறாரு. திருச்சியில ஏகப்பட்ட கண்டிஷன் போட்டும், தானா சேர்ந்த கூட்டத்தைப் பார்த்து, மத்த கட்சிக்காரங்க மிரண்டு போயிருக்காங்க. அதனால, விஜய் பிரசாரத்துக்கு எந்தெந்த வழியில முட்டுக்கட்டை போடலாம்னு, ஆலோசனை பண்ணிட்டு இருக்காங்க,''
''பப்ளிக் பாதுகாப்பை சுட்டிக் காட்டி, பொதுவான நபர் மூலமா, ஐகோர்ட்டுல பொது நல வழக்கு தொடர்ந்து, விஜய் வேன் பிரசாரத்துக்கு தடை வாங்கலாம்ன்னு யோசனை சொல்லி இருக்காங்களாம். அதனால, நம்மூர்ல வேன் பிரசாரம் இருக்குமா அல்லது, ஊருக்கு வெளியே பிரமாண்ட பொதுக்கூட்டம் நடத்துவாங்களான்னு தெரியலை. எந்த வகையில பிரசாரம் செஞ்சாலும், விஜய்க்கு எக்குத்தப்பா கூட்டம் சேரும்னு, உளவுத்துறை தரப்புல 'அலெர்ட் மெசேஜ்' போயிருக்கு... அதனால, விஜய் கட்சியை சேர்ந்தவங்க 'மூவ்மென்டை' கண்காணிக்கிறாங்க,''
ஆளுங்கட்சி மாநாடு ''ஆளுங்கட்சி தரப்புல இளைஞரணி மாநாடு நடத்தப் போறதா கேள்விப்பட்டேனே...''
''யெஸ், மித்து! உண்மை தான்! கரூர்ல முப்பெரும் விழாவை நடத்தி முடிச்சிட்டு, 'மாஜி' மினிஸ்டர் செந்தில் பாலாஜி, நம்மூர்ல 'கேம்ப்' அடிக்கப் போறாராம். கொங்கு மண்டலமே ஆளுங்கட்சி கைவசம் வந்திருச்சுன்னு காட்டுற அளவுக்கு, பிரமாண்டமா இளைஞரணி மாநாட்டை நடத்துறதுக்கு பிளான் வச்சிருக்காங்க,''
''இ.பி.எஸ்., வந்துட்டு போயிட்டாரு; அடுத்த மாசம் விஜய் வந்துட்டு போனதுக்கு அப்புறம்... மெகா மாநாடு நடத்தி, கொங்கு மண்டல ஜனங்க கவனத்தை ஈர்க்கப் போறாங்களாம். அதுக்கப்புறம்... கவர்மென்ட் சைடுல பெரிய அளவுல பங்சன் நடத்தி, செம்மொழி பூங்கா, காந்திபுரம் லைப்ரரி, மேற்கு புறவழிச்சாலை ஓப்பனிங், மெட்ரோ ரயில் திட்டத்துக்கு அடிக்கல், விமான நிலைய விரிவாக்கத்துக்கு பூஜை நடத்தி, நம்மூரை கவர் பண்றதுக்கு முடிவு பண்ணி இருக்கறதா, உடன்பிறப்புகள் சொல்றாங்க...''
பூமி பூஜை கேன்சல் ''அதெல்லாம் சரி, ஏ.டி.எம்.கே., - எம்.எல்.ஏ., வர்றாருன்னு கேள்விப்பட்டதும், பூமி பூஜையை நிப்பாட்டிட்டாங்களாமே...'' என, 'ரூட்' மாறினாள் மித்ரா.
''ஆமா, மித்து! நானும் கேள்விப்பட்டேன். சின்ன தடாகம் கவர்மென்ட் ஸ்கூல்ல எக்ஸ்ட்ரா பில்டிங் கட்டப் போறாங்க. பூமி பூஜைக்கான ஏற்பாடுகளை ஆளுங்கட்சிக்காரங்க செஞ்சிருந்தாங்க. இருந்தாலும், பூஜை நடக்குற இடம் பொதுவான ஏரியாவா இருந்ததால, ஏ.டி.எம்.கே., - எம்.எல்.ஏ., அருண்குமாருக்கு ஆபீசர்ஸ் தரப்புல இருந்து அழைப்பு போயிருக்கு.
தொகுதி எம்.எல்.ஏ.ங்கிற முறையில அவரும் கலந்துக்கிறதுக்கு கெளம்பியிருக்காரு. இதை கேள்விப்பட்ட ஆளுங்கட்சிக்காரங்க, பூமி பூஜையை கேன்சல் பண்ணிட்டாங்க. இதே மாதிரி, கவுண்டம்பாளையம் தொகுதியில நடக்குற அரசு விழாக்கள்ல, அ.தி.மு.க.,வை சேர்ந்தவங்களை ஆளுங்கட்சியினர் பிளான் பண்ணியே புறக்கணிச்சிட்டு வர்றாங்களாம்,''
ஆளுங்கட்சி அடாவடி ''சோமையம்பாளையம் பஞ்சாயத்து ஆபீசை, ஆளுங்கட்சி ஆபீஸ் போல மாத்திட்டு வர்றாங்களாமே...'' என்றபடி, ஆத்துப்பாலத்தை கடந்து, உக்கடம் நோக்கி, ஸ்கூட்டரை முறுக்கினாள் மித்ரா.
''அதையேன் கேக்குற. அந்த பஞ்சாயத்து ஆபீசுல நடக்கறத கேட்டா அதிர்ந்து போயிடுவ. பஞ்சாயத்து ஆபீசுக்கு ஆளுங்கட்சி நிர்வாகிங்க ரெண்டு பேரும் தினமும் வந்துடுறாங்க. ஒருத்தரு பஞ்சாயத்து செகரட்டரி ரூம்ல ஒக்காந்திடுறாரு... இன்னொருத்தரு, மண்டல வட்டார வளர்ச்சி அலுவலர் ரூம்ல ஒக்காந்திடுறாரு,''
''ரெண்டு நிர்வாகிகளுக்கு இடையில, அதிகார மோதல் உச்சத்துல இருக்காம். பஞ்சாயத்து ஆபீசுக்கு வர்ற பப்ளிக் கிட்ட வாக்குறுதிகளை அள்ளி வீசி, பணம் வாங்குறதாவும் கம்ப்ளைன்ட் கெளம்பியிருக்கு. கட்சி ஆபீஸ் மாதிரி நடத்திட்டு வர்றதா சொல்றாங்க. மாவட்ட நிர்வாகம் சைடுல எந்த ஆக்சனும் எடுக்காம இருக்காங்க,''
கல்லா கட்டும் ஆபீசர் ''வடக்கு புறநகர்ல இருக்கற ஒன்றிய ஆபீசர் ஒருத்தரு, வரிஞ்சு கட்டிக்கிட்டு கலெக்சன்ல குறியா இருக்காராமே...''
''ஆமாப்பா, அன்னுார் ஏரியாவை கவனிச்சிக்கிற லேடி ஆபீசருதான், அவரு. பஞ்சாயத்துகள்ல 'பிளான் அப்ரூவலா' இருந்தா, 5,000 ரூபா கொடுக்கலைன்னு கையெழுத்து போடுறது இல்லை. கட்டட பரப்பு ஜாஸ்தியா இருந்துச்சுன்னா... 10,000ல இருந்து, 15,000 வரைக்கும் கேட்குறாங்களாம். சம்பந்தப்பட்ட பஞ்சாயத்து ஆபீசுல இருந்து தொகை வாங்கித் தரலைன்னா, ஒப்புதல் கொடுக்கறதுக்கு இழுத்தடிக்கிறாராம்...''
பலிகடா ஆபீசர் ''தெற்கு ஆர்.டி.ஓ.,வை எதுக்கு டிரான்ஸ்பர் பண்ணுனாங்க. ஆக்ச்சுவலா என்ன நடந்துச்சுன்னு விசாரிச்சிங்களா...''
''மித்து! கனிம வள கொள்ளை நடந்த விவகாரம்னு ஆரம்பத்துல சொன்னாங்க. அதுல, ஒரு ஆபீசரை மட்டும் குறை சொல்றதுக்கு வாய்ப்பில்லை. கெம்பனுார்ல ஜாதி பிரச்னைனால, அண்ணா நகருக்கு கவர்மென்ட் பஸ் விடாதது, கவர்மென்ட்டுக்கு மிகப்பெரிய அளவுல கெட்ட பேர் ஏற்படுத்திக் கொடுத்திருக்கு. ஆளுங்கட்சி தரப்புல சமூக நீதி பேசிட்டு இருக்காங்க,''
''இருந்தாலும், அதே பஸ்சை அண்ணா நகருக்கு விட முடியலை. பேச்சு நடத்தி, வேறொரு பஸ்சை இடைப்பட்ட நேரத்துல விடுறாங்க. இந்த பிரச்னையை ரெண்டு தரப்புலயும் சுமுகமா பேசித் தீர்க்காம, கவர்மென்ட்டுக்கு நெருக்கடி வர்ற அளவுக்கு பெருசாகற வரைக்கும், 'அசால்ட்டா' இருந்ததா, மாவட்ட நிர்வாகம் மேல கம்ப்ளைன்ட் போயிருக்கு. வழக்கம்போல ஒரு ஆபீசரை பலிகடா ஆக்கணுமே; அதுல, ஆர்.டி.ஓ., சிக்கிட்டாருன்னு ரெவின்யூ வட்டாரத்துல பேசிக்கிட்டாங்க,''
கஞ்சா சேல்ஸ் ''காலேஜ் ஸ்டூடன்ஸ் தங்கியிருக்கற ரூம்களுக்கு, போலீஸ்காரங்க அடிக்கடி ரெய்டு போறாங்க. இருந்தாலும், கஞ்சா சேல்ஸ்சை ஒழிக்க முடியலையே... ஏனாம்...'' என்றபடி, போலீஸ் கமிஷனர் அலுவலக கேட்டுக்குள் புகுந்து, ஸ்கூட்டரை நிறுத்தினாள் மித்ரா.
''மித்து, ரூரல் ஏரியாவுல கஞ்சா புழக்கம் ஜாஸ்தியா இருக்கு. கொஞ்ச நாளைக்கு முன்னாடி, மதுக்கரை லிமிட்டுல ரெய்டு போனாங்க. இப்போ, சரவணம்பட்டி ஏரியாவுல 'ரெய்டு' பண்ணியிருக்காங்க. கோவில்பாளையம் பகுதியிலயும் கஞ்சா புழக்கம் இருக்குது. அரை கிலோ, ஒரு கிலோன்னு சின்ன சின்ன வியாபாரிகளை மட்டும் போலீஸ்காரங்க 'அரெஸ்ட்' பண்றாங்க. மொத்த சப்ளையர்களை பிடிக்கறதில்லை. இதுல, ஏதோ மர்மம் இருக்குன்னு சொல்றாங்க. மொத்த சப்ளையர்களையும் துாக்கிட்டா, சில்லரை வியாபாரிகள் தானாவே வேற தொழிலுக்கு போயிடுவாங்கன்னு சொல்றாங்க,''
''அதிருக்கட்டும், கவர்மென்ட் ஆபீசுல இருக்கறவங்களை, மூனு வருஷத்துக்கு ஒரு தடவை டிரான்ஸ்பர் செய்வாங்க. ஆனா, மாநகர போலீசுல எட்டு வருஷமா ஒரே இடத்துல சிலர் டியூட்டி பார்க்குறாங்களாமே...''
''ஆமாப்பா... நானும் கேள்விப்பட்டேன். பொருளாதார குற்றப்பிரிவுல இருக்கற போலீஸ்காரங்க, ஆணியடிச்ச மாதிரி, ஒரே இடத்துல இருக்காங்களாம். யாராச்சும் புதுசா வந்தா, வேற இடத்துக்கு மாத்தி விடுற வேலையை கமுக்கமா செய்றாங்களாம். ரீசன்ட்டா வந்திருக்கிற ஒருத்தரை, வேறிடத்துக்கு மாத்த, ஆபீசரோட டிரைவர் 'மூவ்' பண்ணிட்டு இருக்காராம். அதனால, இந்த செக்சனுக்கு புதுசா வந்திருக்கிற பலரும், 'அப்செட்'டுல இருக்காங்க,'' என்றபடி, கேன்டீனுக்குள் நுழைந்தாள் சித்ரா.
அவளை பின்தொடர்ந்து சென்ற மித்ரா, இரண்டு காபி ஆர்டர் கொடுத்தாள்.