/
வாராவாரம்
/
சித்ரா...மித்ரா (திருப்பூர்)
/
பதிவறையில் பதுக்கிய லஞ்சம்; மது 'பார்' ஆக மாறிய நுாலகம்
/
பதிவறையில் பதுக்கிய லஞ்சம்; மது 'பார்' ஆக மாறிய நுாலகம்
பதிவறையில் பதுக்கிய லஞ்சம்; மது 'பார்' ஆக மாறிய நுாலகம்
பதிவறையில் பதுக்கிய லஞ்சம்; மது 'பார்' ஆக மாறிய நுாலகம்
ADDED : பிப் 04, 2025 07:39 AM

''மித்து... புத்தகக் கண்காட்சில நல்ல கூட்டமாமே...''
சித்ரா ஆர்வத்துடன் கேட்டாள்.
''ஆமாக்கா... புத்தகங்களை வாங்குனா மட்டும் பத்தாது. படிக்கவும் செய்யணும்...''
''நீ சொல்றது கரெக்ட்... கண்காட்சில, சினிமா டைரக்டர் பேசுனதால எழுந்த சர்ச்சையைத் தவிர்த்திருந்தா, பதற்றத்தைத் தவிர்த்திருக்கலாம்.
''வருவாய்த்துறை மற்றும் போலீஸ் அதிகாரிங்க, கண்காட்சி முடியற வரைக்கும் டென்சனா தான் இருந்தாங்களாம்.
''வில்லங்கமா பேசக்கூடாதுன்னு அட்வைஸ் செஞ்சபின் தான், தினமும் பேச்சாளர்களை மேடைல ஏத்துனாங்களாம்''
'உச்' கொட்டினாள் சித்ரா.
''மித்து... ஊத்துக்குளி தாலுகா ஆபீஸ்ல, பட்டா மாறுதல், வாரிசு சான்றுன்னு, சகல'கலா' லஞ்சப் பெண் அதிகாரி, லஞ்சப்பணத்தை பதிவறையில பதுக்கிவச்சுடுவாராம்''
''இங்க வச்சீங்கன்னா எங்களுக்குச் சிக்கல் ஆயிடும்னு மற்றொரு பெண் அலுவலர் எச்சரிச்சாங்களாம்.
''ஒருநாள் இப்படிப் பதுக்கிவச்ச பணத்தைக் காணோமாம். எச்சரித்த பெண் அலுவலர்தான் இதுக்குக் காரணம்ன்னு நினைச்சு லஞ்ச அதிகாரி சண்டை போட்ருக்காங்களாம்.
''எதுக்குடா வம்புன்னு நெனச்ச, பெண் அலுவலர் 'ஏ டூ இஸட்' கலெக்டர்ட்ட புகார் கொடுத்துட்டாங்களாம்.
''டி.ஆர்.ஓ., விசாரணை நடந்திட்டிருக்காம். சகல'கலா' அதிகாரி இப்ப லீவுல இருக்காங்களாம்.
''அவிநாசியில இவங்க ஆர்.ஐ.,யா இருந்தப்ப, பட்டா மாறுதலுக்கு லஞ்சம் வாங்கிய புகார் மீதான விசாரணையே இன்னும் முடியலையாம்... அதுக்குள்ள இப்படி ஒரு பிரச்னை...''
சித்ரா கவலையுற்றாள்.
''மித்து... திருப்பூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைல நோயாளிகளுக்கு உணவோட சேர்த்து தயிர் தனியா கொடுத்திட்டிருந்தாங்களாம்.
''சில நோயாளிகளுக்குத் தயிர் கிடைக்காம போயிருதாம். நோயாளிகள் புகார் கொடுத்திருக்காங்க...
''இதனால சாதத்தோட தயிரைக் கலக்கிக் கொடுத்துடறாங்களாம். தயிர் கொடுத்த மாதிரியும் ஆச்சு... புகாரும் சொல்ல முடியாதுல்ல...
''வடை போச்சேங்கற கதையா, நோயாளிங்கதான் வருத்தத்துல இருக்காங்களாம். சரி... மாநகராட்சிக் கூட்டத்துக்காக நல்ல நேரம் பார்த்தாங்களாமே''
பேச்சை மாற்றினாள் சித்ரா.
'ராகு காலம்' முன்புமாநகராட்சி கூட்டம்
''ஆமாக்கா. கடந்த நவ., மாசம் நடந்த கூட்டத்துல சொத்துவரி விவகாரம் விஸ்வரூபம் எடுத்துச்சு...
''அ.தி.மு.க.,- கம்யூ., கவுன்சிலருங்க மறியல்ன்னு களேபரமாச்சு...
'' இதனால டிசம்பர்ல கூட்டத்தை நடத்தலையாம். கடந்த ஜன., 31ம் தேதிதான் கூட்டம் நடந்துச்சு...''
''காலை 10:30ல இருந்து மதியம் 12 வரைக்கும் ராகு காலம்கறதால, கூட்டம் 10:20க்கு துவங்கும்னு குறிப்பிட்டிருந்தாங்களாம்''
''மித்து... நல்லா இருக்கே இந்த 'திராவிட மாடல்' நிர்வாகம்''
''கடந்த முறை கூட்டத்துல களேபரம் ஆனதால, இந்த முறை போலீஸ் உஷாரா இருந்தாங்களாம்...
''அ.தி.மு.க., வெளிநடப்பு பண்ணுனாங்க... படிக்கட்டுலயும், வளாகத்துலயும் கோஷம் எழுப்பினதோட நிறுத்தீட்டாங்க... ரோட்டுக்கெல்லாம் வரல...
''அப்பாடான்னு நிம்மதிப்பெருமூச்சு விட்டாங்களாம் போலீஸ்காரங்க''
''மித்து... மாநகராட்சி ஆபீஸ்ல நேரம் பார்க்குறாங்கன்னா, கலெக்டர் ஆபீஸ்ல நேரம் காலம் பார்க்கறதில்லை போல''
''எப்படி சொல்றீங்க்கா...''
''துறை ரீதியான அலுவலர் ஆய்வுக்கூட்டம், கடந்த 30ம் தேதி காலை 10:30 மணிக்கு துவங்கி மதியம் வரைக்கும் நடந்திருக்கு... ஆனா செய்திக்குறிப்பை இரவு 11:00 மணிக்குத்தான் அனுப்பினாங்களாம். 'மிட் நைட்' வரைக்கும் வேலை பார்க்குற ஆபீசர்ைஸ மெச்சித்தான் ஆகணும்''
வஞ்சப்புகழ்ச்சியாகச் சொன்னாள் மித்ரா.
''மித்து... சேவூர் சந்தைப்பாளையத்தில கிராம கிளை நுாலகம் இருக்கு... மரங்கள், அருகாமையில் குடிநீர்த்தொட்டியெல்லாம் இருக்கறதுனால குளுகுளுன்னு இருக்கும்.
''திறந்திருக்றப்ப நுால் களைப் படிக்க வர்றவங்களை விட, நுாலகம் மூடியிருக்றப்ப, இங்க 'குடிக்க' வர்றவங்கதான் ஜாஸ்தியாம்.
''மது காலி பாட்டில், டம்ளர், உணவுப்பொருட்களையெல்லாம் நுாலக முன்புறம், வாசல்ல வீசிட்டு போயிடறாங்களாம்''
''நுாலகம் 'பார்' ஆக மாறிடுச்சுன்னு சொல்றீங்க, இல்லையாக்கா''
மித்ரா ஆதங்கப்பட்டாள்.
''சித்ராக்கா... சாலை பாதுகாப்பு மாதத்தை நடத்தி முடிச்சுடாங்களாமே...''
''ஆமா மித்து... ஆனா எந்த நிகழ்ச்சியுமே நடந்த மாதிரி தெரியல... ஆனா எல்லாமே நடந்ததா சொல்றாங்களாம் திருப்பூர் வடக்கு மற்றும் தெற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தினர்...
''நம்பித்தானே ஆகணும்... கணக்கு காட்ட இவங்களுக்குச் சொல்லித்தர வேண்டியதில்லைதானே''
அர்த்தத்துடன் புன்னகைத்தாள் சித்ரா.
கோவில் அருகில்அசைவ வாடை
''சித்ராக்கா... திருப்பூர் பெருமாள் கோவில் பின்னாடி, ராத்திரி நேரத் தள்ளுவண்டிக்கடைல பொரிச்ச மீன், ஆம்லெட், கலக்கி...ன்னு வியாபாரம் களைகட்டும். பக்தர்கள் புகார் கொடுத்ததால, தள்ளுவண்டிக் கடையில் அசைவம் விற்க தடை செஞ்சாங்க...
''ஆனா, மீண்டும் 'கவிச்சி' வாசம் வீச ஆரம்பிச்சுருச்சு... மாநகராட்சி அதிகாரிங்க கண்டிப்பு காட்டணும்''
''மித்து... மாநகராட்சி, நகராட்சிகள்ல இறைச்சி வதைக்கூடம் கட்டி சும்மா வச்சிருக்காங்க. பொது இடத்திலதான் வதை செய்றாங்களாம். இனியாவது, வதைக்கூடத்தைப் பயன்படுத்த உத்தரவிடணும்ன்னு, பிராணிகள் நல ஆர்வலர்கள் கலெக்டர்ட்ட புகார் கொடுத்திருக்காங்களாம். நடவடிக்கை எடுப்பாங்களான்னு பார்ப்போம்''
''சித்ராக்கா... அனுப்பர்பாளையம் போலீஸ் ஸ்டேஷன் முன்னாடி ரெண்டு பெரிய மரங்கள் இருக்கு...
''இடையூறா இருக்குன்னு சொல்லி கிளைகளை முழுமையா வெட்டி மொட்டையாக்கீட்டாங்களாம். புகார் கொடுக்க வர்றவங்க வெயில்ல நிக்க வேண்டியிருக்காம்''
''மக்களுக்குத் தான் நாங்க காவலர்கள், மரங்களுக்கு இல்லைன்னு போலீஸ் சொல்றாங்களோ என்னவோ''
மித்ரா கிண்டலடித்தாள்.
''மித்து... மாநகர்ல இருந்து மாவட்டத்துக்கு மாற்றப்பட்ட அதிகாரி, விதிமுறை மீறி நடக்கும் மது விற்பனையைக் கண்டுக்கிறதில்லையாம். மாநகர்ல கெடுபிடியா இருந்தாரு. இவரோட கவனத்துக்கு கொண்டு போகாம மறைக்கிறாங்களோன்னு நெனைக்கிறேன்''
''இனியாவது சாட்டை சுத்துவாங்களான்னு பார்ப்போம்க்கா... மாநகர்ல பார்காரங்க புலம்பறாங்களாம். ஆளும்கட்சி கவுன்சிலர்கள் தங்கள் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் மாதந்தோறும் வரியை வசூல் பண்ணிட்டு தான் மறுவேலயே பாக்குறாங்களாம்,''
வீட்டில் சோதனைவிலகாத மர்மம்
''மித்து... காளைக்கு பெயர் போன ஊர்ல கந்து வட்டி புகாரில, போலீஸ் அதிகாரி மற்றும் வருவாய்த்துறையினர் கந்துவட்டிக்காரர் வீட்ல சோதனை நடத்தி டாக்குமென்ட், செக் உள்ளிட்டவற்றை பறிமுதல் செஞ்சாங்க... கந்துவட்டிக்காரரும் சரணடைஞ்சுட்டார்.
''இந்த ரெய்டில் ஒரு மர்மம் விலகாம இருக்கு. சோதனைக்கு சென்ற போது, உடன் அழைத்து சென்ற கேமராமேனை வெளியே நிறுத்திட்டாங்க. உடன் சென்ற வருவாய்த்துறை அலுவலரையும் அடிக்கடி வெளிய அனுப்பியிருக்காங்க. என்னவோ நடந்திருக்கு... போலீஸ் எதையோ மறைக்கிறாங்க,''
சந்தேகப்பட்டாள் சித்ரா.
''அக்கா... காளை ஊர்ல உள்ள அதிகாரி, சப்-டிவிஷனில் உள்ள ஸ்டேஷன் விவகாரம், வழக்கு விபரம் எல்லாம் எப்படி பத்திரிகைகாரங்களுக்கு தெரியுது. இனிமேல் யாரும் எதுவும் சொல்லக்கூடாதுன்னு உத்தரவு போட்ருக்காராம். அப்புறம், யார் தகவல் சொல்றதுன்னு கண்டுபிடிக்க, பத்திரிகையாளர்களின் மொபைல்போன் நம்பரை கண்காணிக்கவும் வாய்மொழியா சொல்லியிருக்காராம்''
துணை முதல்வர்பெயர் மாயம்
''மித்து... சிவன்மலை முருகன் கோவில் தைப்பூச தேர்த்திருவிழாவுக்கு அழைப்பிதழ் அடிச்சிருக்காங்க... அதுல துணை முதல்வர் பெயர் மட்டும் இடம்பெறவில்லை. இதை பார்த்த கட்சியோட இளைஞர் அணியினர் லோக்கல் அமைச்சர், அறநிலையத்துறையினர் மீது குற்றஞ்சாட்டுறாங்களாம். பக்கத்து மாவட்டத்துல முருகன் கோவில் பத்திரிகையில் துணை முதல்வர் பெயர் இருக்கு. இங்க மட்டும் எப்படி விடுபட்டுருக்குன்னு கேக்கறாங்களாம்''
''சித்ராக்கா... ஒவ்வொரு கோவில் அழைப்பிதழையும் அமைச்சர் பார்த்துட்டு இருக்க முடியுமா? கிளப்பி விடறதுதான்''
இருவரிடமும் 'குபீர்' சிரிப்பு எழுந்தது.