/
வாராவாரம்
/
சித்ரா...மித்ரா (திருப்பூர்)
/
'சேவல்' சண்டையில துண்டு விரிக்க துணிந்த 'காவல்'
/
'சேவல்' சண்டையில துண்டு விரிக்க துணிந்த 'காவல்'
ADDED : நவ 25, 2025 06:04 AM

'லைன்' கொடுக்காம 'பில்' கட்டறது எப்படிங்க?
குப்பை மேட்டரில் கூட்டணியில இருந்துட்டு கால வாரியது இப்படிங்க!
'வா மித்து... மழை வர்ற துக்குள்ள வந்துட்டியே,'' என்றவாறு வரவேற்றாள் சித்ரா.
''எப்படியோ... திருப்பூர்ல குப்பைக்கு பிரச்னை நிரந்தர தீர்வை நோக்கி, நகருதுன்னு சொல்ற மாதிரி கார்ப்ரேஷன் ஆபீசர்ஸ் நடவடிக்கை எடுக்க ஆரம்பிச்சுட்டாங்க...' என ஆரம்பித்தாள்.
''ஆமாங்க்கா... கொஞ்ச நாள் முன்னாடி, கார்ப்ரேஷன் சார்பில திடக்கழிவு மேலாண்மை சம்மந்தமா நடந்த மீட்டிங்கிற்கு நானும் போயிருந்தேன். அப்போ, கார்ப்ரேஷன் சீனியர் வி.ஐ.பி.ஸ் பேசியதை கேட்டு, அப்படியே 'ஷாக்' ஆயிட்டேன். '20, 30 வருஷமா குப்பைகளை, பாறைக்குழியில தான் கொட்டிட்டு இருக்கோம்; இப்ப மட்டும் ஏன் கொட்ட கூடாதுன்னு, பிரச்னை கிளப்பறாங்கன்னு சொல்லி பொங்கி எழுந்துட்டாங்க...'' என்றவள் தொடர்ந்தாள்.
''அந்த காலத்துல, திருப்பூர்ல இருந்த மக்கள் தொகை எவ்வளவு? வீடுகளோட எண்ணிக்கை எவ்ளோ; இப்போ இருக்கற மக்கள் தொகை, வீடுகள் எவ்ளோ? கொஞ்சம் வருஷம் கழிச்சு பாறைக்குழி நிரம்பிடுச்சுன்னா என்ன பண்றது? குப்பைக்கழிவால பாறைக்குழியை நிரப்பிக்கிட்டே இருந்தா, நிலத்தடி நீர் மாசுபடாதா? துர்நாற்றம் வீசி, சுகாதாரகேடு ஏற்படாதா? மண்ணும், காத்தும் மாசுபட்டுச்சுன்னா நோய் பரவாதா?''
''இப்படி எத்தனை கேள்விகள் நமக்குள்ளேயே வருது. அப்போ, கவுன்சிலர்கள் எவ்ளோ யோசிச்சிருக்கணும். ஆனா, கொஞ்சம் கூட தொலைநோக்கு சிந்தனையில்லாம, பாறைக்குழி யில குப்பை கொட்றதை நியாயப்படுத்துற மாதிரியே பேசினாங்க அக்கா...'' கோபத்தில் கொந்தளித்தாள் மித்ரா.
''குப்பை பிரச்னைக்கு தீர்வு கிடைக்கணும்னா தொழில்துறையினரோட ஒத்துழைப்பு கண்டிப்பா வேணும் மித்து. ஆனா, மீட்டிங்கில தொழில் துறையை சேர்ந்தவங்க பெரிசா இன்ட்ரஸ்ட் காட்டலையாமா'' குறுக்கிட்டாள் சித்ரா.
''உண்மைதாங்க்கா. கார்ப்ரேஷன் வி.ஐ.பி.யே அதை சொல்லி சங்கடப்பட்டாரு. கடந்த, 25 வருஷத்துக்கு முன்னாடி சாயக்கழிவுநீர் பிரச்னையால, தொழில் முடங்கிடும்ன்னு பேசினாங்க. ஆனா, தொழில்துறையை சேர்ந்தவங்களோட விடா முயற்சியால, அந்த பிரச்னையை சரிகட்டி, இப்போ பெரிய இடத்துக்கு போயிட்டாங்க. அவங்கவங்க தொழிலுக்கு ஒரு பாதிப்பு வரப்போ களத்துல குதிச்சவங்க, ஒட்டு மொத்த ஊரே குப்பை பிரச்னையால பாதிக்கப்பட்டிருக்கு; சும்மா இருப்பாங்களா; கண்டிப்பா ஒத்துழைப்பு கொடுப்பாங்கன்னும், சிலரு பேசி, நம்பிக்கை கொடுத்திருக்காங்க...'' என்றாள் மித்ரா.
'டூ... மச் 'லேட்' ''முக்கியமான இந்த மீட்டிங்கில கலந்துக்க அ.தி.மு.க. - பா.ஜ., கவுன்சிலர்களுக்கு அழைப்பு இல்லைன்னும் சொல்றாங்க. ஏன், அவங்களுக்கு இந்த விஷயத்துல அக்கறை இல்லீங்கற மாதிரி மக்கள்கிட்ட கார்ப்ரேஷன் விஐபி பிளான் பண்றாரு போல'ன்னு எதிர்க்கட்சிக்காரங்க புகார் வாசிக்கிறாங்களாம்,'' என்ற மித்ரா, ''ராயபுரத்துல நடந்து கம்யூ. மீட்டிங்கில பேசின கட்சி நிர்வாகிகள் பலரும், கார்ப்ரேஷன்ல, அறிவியல் பூர்வமா குப்பை மேலாண்மை செய்ய மிஸ் பண்ணிட்டாங்க. அதனால தான், இவ்ளோ பிரச்னை...'' என்றாள்.
''இதக்கேட்ட ஆளுங்கட்சி நிர்வாகி ஒருத்தரு, 'கூட்டணியில இருந்துட்டே, இப்டி கால வார்றது சரியான்னு...' கோவப்பட்டாராம். காலங்காலமா பிரச்னை இருக்கறப்போ, இதுவரைக்கும் 'கப்சிப்'ன்னு இருந்தவங்களுக்கு இப்போவாவது, அறிவியல் பூர்வமா யோசிக்க தோணுச்சே...'' என சிரித்த சித்ரா, ''அந்த கட்சி கூட்டத்துக்கு, வயசான பல பேர கூட்டிட்டு வந்து உட்கார வச்சிருந்தாங்க. நேரம் ஆக ஆக பாதி பேரு எந்திரிச்சு போயிட்டாங்களாம். முக்கிய நிர்வாகி பேபி பேசி முடிக்கிறப்போ, 90 பர்சென்ட் சேர் காலியாயிடுச்சாம்,'' என்றாள்.
'டேக் டைவர்ஷன்' ''இதெல்லாம், அரசியல்ல சகஜம்க்கா...,'' சிரித்த மித்ரா, ''அரசியல்ன்னு சொல்லவும் தான் ஞாபகம் வருது. கோவை, திருப்பூர்ல ஆய்வு செய்யவும், புதிய திட்டங்களை துவக்கி வைக்கவும், சி.எம். வர்றாருல்ல. ஆனா, பக்கத்துல இருக்கற நம்ம மாவட்டத்துக்கு அவரு வரல. போன தடவையும் அப்படி தான் ஆச்சு. திருப்பூருக்கு வந்த அவரு, உடுமலையில ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில கலந்துக்கிட்டு, அப்படியே போயிட்டாரு. திருப்பூர் சிட்டிக்குள்ள வர்றதுக்கே சி.எம். ஏன் யோசிக்கிறாங்கன்னு எதிர்க்கட்சிக்காரங்க மட்டுமில்ல, பொதுமக்களும் பேச ஆரம்பிச்சுட்டாங்க...'' என்றாள் மித்ரா.
''ஓ... இத கால்குலேட் பண்ணி தான், அவர் வர்ற அதே நாள்ல, குப்பை பிரச்னையை மையப்படுத்தி ஆர்ப்பாட்டம் நடத்த அ.தி.மு.க. காரங்க 'பிளான்' பண்ணயிருக்காங்களோ; '' என்ற சித்ரா, ''கார்ப்ரேஷன்ல குப்பை பிரச்னை மட்டுமில்ல. அங்கங்க ஏற்படற குழாய் உடைப்பை கூட சரியா சரி செய்றது இல்லையாம். இந்த வேலையை, ஆளுங்கட்சி தரப்பை சேர்ந்த ஒருத்தருக்கு, ஒட்டு மொத்தமா 'டெண்டர்' விட்டிருக்காங்க போல. குழாய் உடைப்பு சம்பந்தமா புகார் கொடுத்தா, 'ரெஸ்பான்ஸ்' பண்றதே இல்லையாம்,'' ஆதங்கப்பட்டாள் சித்ரா.
''பசங்கள துாண்டிவிட்ட வாத்தியார்ங்க விவகாரம் விஸ்வரூபம் எடுக்குதாம்...'' வேறு மேட்டருக்கு தாவிய மித்ரா, ''கவர்மென்ட் ஸ்கூல்ல மாலை நேர சிறப்பு வகுப்பு நடத்த எதிர்ப்பு தெரிவிச்சு, ஸ்டூடண்ட்ஸ் மறியல் பண்ணாங்கள்ல. அப்போ, 'தோழர்' கட்சியோட ஸ்டூடண்ட்ஸ் அமைப்பை சேர்ந்தவங்க, பசங்க கையில தங்கள் அமைப்போட கொடியை கொடுத்து போராட வச்சிருக்காங்க. போலீஸ் 'என்கொயரி' பண்ணப்போ, மறியல் போராட்டம் நடத்தற அளவுக்கு துாண்டிவிட்டது, அந்த ஸ்கூல்ல வேலை செய்ற சில வாத்தியாருங்க தான்னு தெரிய வந்துருக்கு. மேலிடத்துக்கு 'நோட்' அனுப்பியிருக்காங்களாம்,'' நிலைமையை விளக்கினாள் மித்ரா.
பொங்கல் பரிசு 'பராக்' ''இப்பவே பொங்கல் பரிசு தயாராகிட்டு இருக்காம்...'' புதிர் போட்டாள் சித்ரா.
''கொஞ்சம் புரியற மாதிரி சொல்லுங்க்கா,'' ஆர்வமானாள் மித்ரா.
''பல்லடம் தொகுதி 'ஆனந்தமான' வி.ஐ.பி. வர்ற எலக்ஷன்ல, சிட்டி சவுத் பக்கம் போயிடலாமான்னு யோசிச்சு, அதுக்கான வேலைகளை செய்துட்டு இருந்தாராம். ஆனா, அந்த தொகுதியில தாமரைக்காரங்க விதை துாவறாங்கற விஷயம் காத்து வாக்குல பரவ, இருக்கிறத விட்டுட்டு, பறக்கிறதுக்கு ஆசைப்பட வேண்டாம்ன்னு நினைச்சு, பொங்கல் பண்டிகையப்போ, மக்களுக்கு 'கிபட்' கொடுத்து, இருப்பை தக்க வைக்க ஏற்பாடு பண்ணிட்டு இருக்காராம். இதுக்காக, மும்பையில இருந்து 'ஆர்டர்' போட்டிருக்காருன்னு பேசிக்கிறாங்க.... '' என்றாள் மித்ரா.
''சவுத் அ.தி.மு.க.வில கோஷ்டி அரசியல் எக்கச்சக்கமாம். ஒரே குடும்பத்தை சேர்ந்தவங்களுக்கு கட்சிப் பதவியை அள்ளி கொடுத்ததால, மத்தவங்களுக்கும் கட்சிப்பதவியை பகிர்ந்து கொடுக்கணும். குறிப்பா, எலக்ஷனுக்குள்ள கோஷ்டி பூசலை சரிகட்டணும்ன்னு பேசிக்கிறாங்க,'' என்றாள் சித்ரா.
''பல்லடம்ன்னு சொல்லவும் தான் இன்னொரு விஷயம் ஞாபகம் வருது மித்து. பல்லடம் பிளாக்ல, அடுத்தடுத்து ரெண்டு வி.ஏ.ஓ.ஸ், விஜிலென்ஸ் ரெய்டுல சிக்கினாங்கள்ல. அதுக்கப்பறம், ரெவின்யூ டிபார்ட்மென்ட்டை சேர்ந்தவங்க, கிலியடிச்ச மாதிரி இருக்காங்களாம். சில வி.ஏ.ஓ.ஸ் லீவு போட்டுட்டே போய்ட்டாங்கன்னா பாரேன். இருந்தாலும் மாதப்பூர் கிராமத்தை கவனிக்கிற றெண்டு ஆபீசர், 'கவனிப்பு' இல்லாம எந்த வேலையும் செய்றது இல்லையாம்; வசூல் அள்றாங்கன்னு பேசிக்கிறாங்க. இதெல்லாம், அந்த 'சிவ'மான 'சாமி'க்கே வெளிச்சம்ன்னும் மக்கள் புலம்பறாங்க'' என்றாள் சித்ரா.
மெத்தனப்போக்கு ''நம்ம மெடிக்கல் காலேஜ் ஹாஸ்பிடல்ல அப்பப்போ குழாய்ங்க திருட்டு போகுதாம். அங்க இருக்கற பிரைவேட் ஏஜன்ஸியை சேர்ந்த செக்யூரிட்டிங்க தொடர்ந்து கண்காணிச்சு, சம்பந்தப்பட்ட நபர் யாருன்னு போலீசுக்கு சொல்லியிருக்காங்க. அந்நபரை அழைச்சுட்டு போன போலீஸ்காரங்க, விசாரணை பண்ணாம ரிலீஸ் பண்ணிட்டாங்களாம். விசாரிச்சு பார்த்ததுல, அந்த ஆசாமி, அங்க இருக்கற குவார்ட்டஸ்ல தங்கி வேலை செய்யற ஒரு நர்ஸோட வீட்டுக்காரராம்,'' என்றாள் மித்ரா.
''அடக்கொடுமையே...'' என அதிர்ச்சியடைந்த சித்ரா, ''தாராபுரம் பக்கத்துல, கிளினிக் வைக்கிறதுக்கான லைசென்ஸ் மட்டும் வாங்கி வச்சுக்கிட்டு, பி.பார்ம். கூட முடிக்காம, வீட்ல கிளினிக் வச்சு, ஊசி போட்டுட்டு வந்த ஒரு ஜோடி சிக்கினாங்கள்ல. 2015ல் இருந்து இந்த கிளீனிக் ரன் ஆனது எப்படி மெடிக்கல் டீமுக்கு தெரியாம போச்சுன்னு பலரும் பேசிக்கிறாங்களாம்...'' என்றாள் சித்ரா.
''இதே மாதிரி தான், பெருந்தொழுவு பக்கத்துல, தொங்குட்டிபாளையத்துல, கவர்மென்ட்டோட பசுமை வீடு கட்டின ஒருத்தரு, இ.பி.லைன் வாங்க மின் இணைப்பு கேட்டு விண்ணப்பிச்சிருக்காரு. அதுக்காக 'டெபாசிட்' கட்டிட்டாரு. ஆனா, கனெக் ஷன் கொடுக்கவே இல்லையாம். ஆனா, அடுத்த மாசமே, பில் கட்டுங்கன்னு எஸ்.எம்.எஸ். வருதாம். 'ஷாக்' ஆன வீட்டோட ஓனர், பெரிய ஆபீசருக்கு புகார் பண்ணவே, அதை உறுதிப்படுத்தின பெரிய ஆபீசர் டென்ஷனாகிட்டாராம். மெத்தனமா இருந்த ஊழியருங்க மேல, ஸ்ட்ராங்கா ஆக்ஷன் எடுங்கன்னு சொல்லியிருக்காராம்,'' என்றாள் மித்ரா.
'சபாஷ் அதிகாரி' ''மித்து, லாஸ்ட் வீக், தெக்கால உள்ள டிராபிக் ஆபீசர பத்தி பேசினோமில்ல. இது பெரிய அதிகாரி காதுக்கு போயி, அவரு விசாரிச்சாரு. அதுக்கு மறு நாளே, காங்கயம் ரோடு பகுதியில் ரோந்து போனப்ப, ரோட்டுல இடையூறா குழி தோண்டியிருக்காங்க. அதப்பத்தி, சம்பந்தப்பட்ட டிராபிக் ஆபீசரிடம் கேட்டதற்கு, கரெக்டா பதில் சொல்லலையாம். இதனால டென்ஷனான பெரிய ஆபீசர், அவர ஏ.ஆர்.-க்கு ரிப்போர்ட் பண்ண சொல்லிட்டாரு. உடனடியா, ஆர்டர் போட்டு, வேற ஒருத்தர டிராபிக்கு ஆபீசரா போட்டு ட்டாரு,'' என்றாள் சித்ரா.
''அக்கா, நீங்க சொன்னத நானும் கேள்விப்பட்டேன். இன்னொரு மேட்டர் கேளுங்க...'' என்ற மித்ரா, ''மங்கலம் பக்கத்து தோட்டத்தில சேவல்கள வச்சு பெட் கட்டிய கும்பல புடிச்சு, 21 வண்டிகள 'சீஸ்' பண்ணிட்டாங்க. இத வழக்கம் போல, ஸ்டேஷன் பெயிலில போற மாதிரி கேஸ் ரெடி பண்றத கேள்விப்பட்ட பெரிய ஆபீசரு, மைக்கில வெளுத்துட்டாராம். அதுக்கப்பறம் தான், வேற செக் ஷன்ல கேஸ் போட்டாங்களாம்,'' என்ற மித்ரா, ''அக்கா. மழை நின்னுடுச்சு. நான் கெளம்பறேன்,'' என புறப்பட்டாள்.

