/
வாராவாரம்
/
சித்ரா...மித்ரா (திருப்பூர்)
/
லஞ்சம் வாங்க தனியறை... 'வெளங்குமா' கனிமவளத்துறை!
/
லஞ்சம் வாங்க தனியறை... 'வெளங்குமா' கனிமவளத்துறை!
ADDED : நவ 25, 2024 10:58 PM

'சாயங்காலம் ஆயிடுச்சுனா பனி விழற மாதிரி இருக்கு சித்ராக்கா; கொஞ்சம் குளிர் ஜாஸ்தி தான்...'' என புலம்பியபடியே, சோபாவில் அமர்ந்தாள் மித்ரா.
''ஆமா மித்து. 'கிளைமேட்' மாறுறதுதான். நிறைய இடங்கள் குழந்தைகளுக்கு சளி, காய்ச்சல் பரவுது. 'ெஹல்த் டிபார்ட்மென்ட்'காரங்க முன்கூட்டியே அங்கங்க 'கேம்ப்' போட்டாங்கன்னா பரவாயில்ல,'' என்றாள் சித்ரா.
''இப்பெல்லாம் ஆஸ்பிட்டல்களில் நல்ல கூட்டம். இதுல இன்னொரு விஷயம் என்னனென்னா, சித்தா படிச்சிட்டு, சிலர் அலோபதி மருத்துவம் பார்க்கிறது, நிறைய இடங்கள்ல நடக்குது. மருத்துவப்பணிகள் துறையினரும், அப்பப்போ 'ரெய்டு' போய் நடவடிக்கை எடுத்துட்டு இருந்தாங்க. மாசத்துக்கு ஒன்னு, ரெண்டு பேரையாவது கையும் களவுமா பிடிப்பாங்க. போன நாலு மாசமா, ஜே.டி., பதவி காலியா இருக்கிறதால, பொறுப்பு ஆபீசர்ங்க தான் கவனிக்கிறாங்களாம். அவங்க 'ரெய்டு' போறதே இல்லையாம்; இதனால, போலி டாக்டருங்க ஜாலியா சுத்தறாங்களாம்...'' என்றாள் மித்ரா.
குவாரிக்காரர்கள் வைத்த 'வெடி!'
''லஞ்சத்தை ஒழிக்கிற வேலையை செய்ற விஜிலென்ஸ் போலீஸ்காரங்க மேலயே, கல் குவாரிக்காரங்க சி.எம்., செல்லுக்கு, 'கம்ப்ளைன்ட்' பண்ணிட்டாங்களாம்,'' என்றாள் சித்ரா.
''அடடே... அப்படியா?'' ஆச்சர்யமானாள் மித்ரா.
தொடர்ந்து சொன்ன, சித்ரா, ''திருப்பூர் சப்- கலெக்டர் ஆபீஸ்ல வேலை செய்ற மூனு ஆபீசர் பேர குறிப்பிட்டு, 'இவங்க மாசாமாசம் கல் குவாரியில இருந்து லட்சக்கணக்குல பணம் வாங்கி, கனிமவளத்துறையில உள்ள சில ஆபீசர்களுக்கு கொடுத்துட்டு இருக்காங்க. பணம் கொடுக்கலைன்னா, ஆய்வுங்கற பேர்ல, 'டாக்குமென்ட்'டை பார்க்குறது; அதுல தப்பு இருக்குன்னு சொல்றதுன்னு, மிரட்றாங்க. லஞ்சம் வாங்கறதுக்குன்னே, தனி ரூம் கூட 'ஆபீஸ் கேம்பஸில்' ரெடி பண்ணி வச்சிருக்காங்க. விஜிலென்ஸ் போலீஸ்காரங்களும் இவங்களை கண்டுக்கிறது இல்லை'ன்னு, அந்த லெட்டர்ல போட்டு உடைச்சிட்டாங்களாம்,'' என்றாள் சித்ரா.
''இப்படி குவாரிக்காரர்கள் வச்ச 'வெடி'யில, யாரு சிக்கப்போறாங்கன்னு தெரியலையே..'' என்ற மித்ரா, ''அதேமாதிரிதான், பல்லடம் தாலுகா ஆபீசில, 'சர்வே' செக் ஷன் வேல செய்ற ஒரு ஆபீசர், நிலம் உட்பிரிவு செய்றது, பட்டா மாறுதல் செய்றதுக்கு, 'ஆன்லைன்'ல விண்ணப்பிச்சாலும், ஏக்கருக்கு, 10 ஆயிரம் ரூபாய் வரை 'கப்பம்' வசூல் பண்ணிடறாராம். பணம் தரலைன்னா, சம்மந்தப்பட்டவங்களோட விண்ணப்பத்தை 'ரிஜெக்ட்' செஞ்சிடறார். இது சம்பந்தமாவும், விவசாயிங்க சிலரு, சி.எம்., செல்லுக்கு 'பெட்டிஷன்' அனுப்பியிருக்காங்க,'' என்றாள் மித்ரா.
'திரிசங்கு' நிலையில் ஆபீசர்ஸ்
''தெருநாய்ங்க கடிச்சு ஆடுகள் சாகுற விவகாரத்துல, ஆபீசர்களுக்கு 'திரிசங்கு' நிலைமையில் சிக்கிட்டு இருக்காங்களாம்,'' என்றாள் சித்ரா.
''எப்படி சொல்றீங்க அக்கா...?'' ஆர்வமானாள் சித்ரா.
''தெருநாய்கள் கடிச்சு சாகிற ஆடுகளுக்கு இழப்பீடு கொடுக்கணும்ன்னு, ஆறு மாசத்துக்கு மேல விவசாயிங்க சொல்லி, பல போராட்டங்களையும் நடத்தினாங்க. 'இழப்பீடுக்கு பரிந்துரை பண்ணியிருக்கோம்'ன்னு மட்டும் திரும்பத்திரும்ப ஆபீசர்ஸ் சொல்லிட்டு இருந்தாங்களே தவிர, அதுக்கான எந்த ஏற்பாடும் நடந்ததா தெரியல. 'இழப்பீடுக்கு வாய்ப்பே இல்லை'ன்னு கூட பேச்சு வந்துச்சு.
பொறுமையிழந்த விவசாயிகள், கலெக்டர் ஆபீசில, கால்நடைகளோட குடியேறும் போராட்டத்தை அறிவிச்சாங்க. அவங்க போராட்டத்துல இறங்கின அன்னைக்கு தான், '45 நாள்ல இறந்த ஆடுகளுக்கு இழப்பீடு கொடுக்கப்படும்'ன்னு, மாவட்ட நிர்வாகம் சார்பில எழுத்துப் பூர்வமாக உறுதி கொடுத்தாங்க. இத்தனை நாள், இந்த விவகாரத்துல அமைதி காத்த ஆபீசர்ஸ், விவசாயிகளின் உச்சக்கட்ட கொந்தளிப்புக்கு அப்புறம்தான், அறிவிப்பை வெளியிட்டிருக்காங்க,'' என்றாள் மித்ரா.
கூட்டணிக்குள் 'லகலக'
''ஆளுங்கட்சி கூட்டணியில இருக்கற காங்கிரஸ்காரர்கள், கவர்மென்ட்டுக்கு ஆபோசிட்டா, ஆர்ப்பாட்டமோ, போராட்டமோ பெரியளவுல நடத்தறது இல்ல. சும்மா பேர் பண்றதுக்கு தான் நடத்திட்டு இருந்தாங்க. உள்ளாட்சி கவுன்சிலர்கள் கூட, ஆளுங்கட்சி தீர்மானத்துக்கு எதிரா வாய் திறக்க மாட்டாங்க. ஆனா, இப்ப நிலைமை மாறிட்டு இருக்கு. சொத்து வரி, தொழில் வரி, குடிநீர் கட்டண உயர்வை கண்டிச்சு, காங்கிரஸ்காரர்களும் கொந்தளிக்க துவங்கிட்டாங்க. திருப்பூர் கார்ப்பரேஷன்ல சொத்து வரி மறு சீராய்வு தீர்மானத்துக்கு எதிராக, 17 ஏ.டி.எம்.கே., கவுன்சிலர்களும், 51வது வார்டு காங்கிரஸ் கவுன்சிலர், 26, 56வது வார்டைச் சேர்ந்த பி.ஜே.பி., கவுன்சிலர்ங்க எதிர்ப்பு தெரிவிச்சிருக்காங்க,'' என்றாள் சித்ரா.
''கூட்டணியில இருக்கிறோம்ங்கறதுக்காக மக்களுக்கு ஏற்படற பாதிப்பை சுட்டிக்காட்டாம இருந்தாங்கன்னா, அவங்களுக்கு தான் மக்கள்கிட்ட கெட்ட பேரு வரும்ன்னு உணர துவங்கிட்டாங்க போல,'' என்றாள் மித்ரா.
அரசாங்க சம்பளம் எதுக்கு?
''கட்சிகளை பத்தி பேசவும் தான், எனக்கொரு விஷயம் ஞாபகம் வருது மித்து. தேர்தல் பார்வையாளர் முன்னிலையில, ரெண்டு நாளைக்கு முன்னாடி, வாக்காளர் பட்டியல் சம்பந்தமா, அனைத்துக்கட்சி ஆலோசனைக்கூட்டம் நடந்துச்சு. இதுல பேசின டி.எம்.கே., அப்புறம் கம்யூனிஸ்ட் கட்சியினர், 'ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு, வீடா போய் கள ஆய்வு செய்றதே இல்லை. இதனால, பட்டியல்ல இருக்கற குறைகள் சரி செய்யப்படாமல் இருக்குன்னு சொல்லியிருக்காங்க''
''புகாரை எழுத்துப்பூர்வமா கொடுங்க. அதோட, பூத் ஏஜன்டுங்க பூர்த்தி செஞ்சு தர்ற படிவங்கள் தொடர்பான விவர பட்டியலை பி.எல்.ஓ.,கிட்டேயும், கலெக்டர் ஆபீஸ்லேயும் கொடுத்துடுங்க'ன்னு, ஆபீசர்ஸ் சொல்ல, கடுப்பான ஆளுங்கட்சி தரப்பு, ''நாங்களே இந்த வேலைய பார்த்துட்டா, அரசாங்க சம்பளம் வாங்குற பி.எல்.ஓ., ஆட்களுக்கு என்ன வேலை? நாங்க சொல்ற கம்ப்ளைன்டை காதுல வாங்கிட்டு, நடவடிக்கை எடுங்க. அதை விட்டுட்டு, எழுத்துப்பூர்வமா கேட்கிறது நியாயமில்லை'ன்னு சொல்லியிருக்காங்க,'' என்றாள் சித்ரா.
போலீசாருக்கு 'ஷாக்'
''மங்கலம் ஸ்டேஷன் பக்கத்துல இருக்கற போலீஸ் குடியிருப்புல, 60 வீடுகள் இருக்கு மித்து,'' என பேச்சை மாற்றிய சித்ரா, ''அங்க வசிக்கிற போலீஸ் குடும்பத்துக்காரங்க, 'இ.பி., பில் கட்டறதே இல்லையாம். 'யுனிபார்ம் டியூட்டி'ங்கற ஒரே காரணத்துக்காக, இ.பி.,காரங்க, 'பீஸ்' கட்டையை கழற்றாம விட்டு வச்சிருக்காங்களாம். இப்படியே விட்டதால, மின்கட்டண பாக்கி, ரெண்டு வருஷத்துல பல லட்சம் ரூபாயை தாண்டிடுச்சாம். பொறுமையிழந்த இ.பி., அதிகாரிகள்,எஸ்.பி.,கிட்ட விவகாரத்தை கொண்டு போக, 'எல்லாரும் இ.பி., பில் கட்டிடுங்க'ன்னு ஆபீசர் சொல்லிட்டாராம்,''
''அதனால, 20 வீட்டுக்காரங்க கட்டிட்டாங்களாம். மத்தவங்க கட்டாம, 'நாங்க இப்பதான் வீடு மாத்தி வந்தோம்; பழைய 'பில் அமவுன்ட்' எல்லாம் கட்ட முடியாது' அப்படி, இப்படின்னு சாக்கு போக்கு சொல்லிட்டு இருக்காங்களாம். அந்த மாதிரி முரண்டு பிடிக்கிறவங்க வீட்டோட இணைப்பை துண்டிச்சிட்டாங்களாம். இருந்தாலும், அசராத அவங்க, பக்கத்துல இருந்து, ஒயரை இல்லீகலா இழுத்து இணைப்பு கொடுத்து, மின்சாரத்தை பயன்படுத்திட்டு இருக்காங்களாம்.'' என்றாள் மித்ரா.
''அடக்கொடுமையே...,'' என அதிர்ச்சியுற்ற சித்ரா, ''நானும் இ.பி., சம்மந்தமா ஒரு மேட்டர் சொல்றேன்'' என்றவள், ''2022ம் வருஷம், ஊத்துக்குளி மின்வாரிய கோட்ட அலுவலகம் திறந்தாங்க. ஆனா, இதுவரைக்கும் அந்த ஆபீஸ் திறக்கலையாம். இதனால, கோட்ட அலுவலகம் சார்ந்த மின் நுகர்வோர், பெருந்துறை வரைக்கும் போய்ட்டு வர வேண்டியிருக்காம்'' என ஆதங்கப்பட்டாள் சித்ரா.
காற்றில் பறந்த உத்தரவு!
''போலீஸ்ன்னு சொல்லவும் தான் எனக்கொரு விஷயம் ஞாபகம் வருதுங்க அக்கா,'' என்ற மித்ரா தொடர்ந்தாள். ''காங்கயம் ஸ்டேஷனுக்கு, புகார் சம்பந்தமா போன ஒருத்தருகிட்ட, அங்க இருக்கற போலீஸ்காரர் ரொம்ப அநாகரிகமா நடந்துக்கிட்டாராம். அவரு, டி.எஸ்.பி.,க்கிட்ட புகார் சொல்ல, அந்த போலீஸ்காரர், 'ஓ.டி.,' பேர்ல இங்க வேலை பார்த்துட்டு இருக்கிறது தெரிய வந்துருக்கு. அவரு மாதிரி, அந்த சப் டிவிஷனில், 20 - 25 பேர் வரைக்கும் ஓ.டி.,யில வேல பார்க்குறது தெரிய வந்திருக்கு. 'நாலு நாள்ல ஓ.டி.,யில வந்தவங்க எல்லாரும் அவங்க அவங்க ஸ்டேஷனுக்கு போயிடணும்' ன்னு, பெரிய ஆபீசர் சொல்லியும், அந்த உத்தரவை மதிக்காம, நிறைய பேரு 'ஓ.டி., டியூட்டி' தான் பார்த்துட்டு இருக்காங்களாம்,'' என்றாள் மித்ரா.
''பணத்தை இழந்த பெண்ணின் வேதனையை புரிஞ்சுக்காதா போலீஸ்...'' என சித்ரா சொன்னதும், ''எங்கே நடந்ததுங்க்கா...'' ஆர்வமாய் கேட்டாள் மித்ரா.
''ரெண்டு நாள் முன்னாடி பெண் ஒருவர் தெற்கு போலீஸ் ஸ்டேஷன் அருகே அரசு டவுன் பஸ்சில் போயிருக்காங்க. விஜயாபுரம் போறதுக்குள்ள, அவர் வச்சிருந்த 40 ஆயிரத்தை யாரோ திருடிட்டாங்க. பணம் திருட்டு போனதால, அழுதபடி கண்டக்டரிடம் சொல்ல, அவரு, எதையும் கண்டுக்காம போலீசில புகார் கொடுங்கன்னு சொல்லிட்டு, நடுவழியில் அப்பெண்ணை இறக்கி விட்டுட்டு போயிட்டாங்க,''
''அந்த பெண், தெற்கு ஸ்டேஷனுக்கு போனப்ப, டியூட்டியில இருந்த சில போலீஸ்காரங்க, 'ஏம்மா, இவ்ளோ பணத்தை பஸ்சில கொண்டு போகலாமான்னு சத்தம் போட்டு, அலட்சியமாக நடந்துட்டாங்க. இந்த விஷயம் அதிகாரி காதுக்கு போனதும், சம்பந்தப்பட்ட போலீஸ்காரரை கண்டித்ததும், உடனடியாக சி.எஸ்.ஆர்., போட்டுகொடுத்து இருக்காங்க,'' என்றாள் சித்ரா.
''புகார் தர்றவங்ககிட்ட கனிவா நடந்துக்கணும்னு, கமிஷனர் எவ்வளவு சொன்னாலும், சிலர் கேட்பதேயில்லக்கா...'' சொன்ன மித்ரா, '' அக்கா, அவிநாசி மேட்டர் தெரியுமா?'' என அடுத்த மேட்டருக்கு தாவினாள்.
''சொன்னாத்தானே தெரியும் மித்து''
இப்படியும் ஏமாத்தறாங்க...
''அவிநாசி டவுன் பஞ்சாயத்து ஆபீசில வேல பார்க்கற, 'விஜய'மான ஒருத்தர், அடுக்குமாடி குடியிருப்பில வீடு வாங்கி தரேன்னு சொல்லிட்டு, மூனு லேடீஸ்கிட்ட 5 லட்சத்து 20 ஆயிரத்தை வாங்கிட்டு ஏமாத்திட்டாராம். அதிலயும், அவரோட பேருக்கு 'டிடி' எடுக்க சொல்லி, வீட்டுவசதி வாரியத்தின் வாயிலாக வீடு ஒதுக்கப்பட்டதாக போலியாக கடிதம் தயார் செஞ்சும் கொடுத்துட்டாராம்.''
''ரொம்ப நாளாகியும் வீடு கிடைக்காததால பாதிக்கப்பட்ட பெண்கள், டவுன் பஞ்சாயத்து ஆபீசரிடம் மனு கொடுத்தாங்க. ஆனா, இன்னைக்கு வரை ஒரு நடவடிக்கையும் இல்ல. இதனால, கலெக்டர் கிட்ட மனு கொடுத்தும் கூட நோ ரெஸ்பான்சாம். இவ்வளவு நடந்தும், அந்த அலுவலர், தினமும் ஆபீசுக்கு வந்துட்டு இருக்கறாராம்,''
''இதெல்லாம் ரொம்ப ஓவர்டி,'' ஆவேசப்பட்ட சித்ரா, ''அதே ஊரில் உள்ள கிரைம் அதிகாரி, தனக்கு கீழே வேலை பார்க்கிற போலீசை விட்டு, தீபாவளிக்கு 'கல்லா' கட்டியிருக்காங்க. அதேபோல, டிராபிக் அதிகாரி, நேரடியா தானேபோய் கலெக் ஷன் பண்ணிட்டாருன்னு, ஸ்டேஷன் முழுக்க பேச்சு உலா வருது மித்து...'' என்று கூறியவாறு, சுடச்சுட ஏலக்காய் டீ கொண்டு வந்தாள்.