/
வாராவாரம்
/
சித்ரா...மித்ரா (திருப்பூர்)
/
கட்சி பதவிக்கு கேட்குறாங்க 'லட்சம்'; அதிகாரிங்க வாங்கி தள்றாங்க 'லஞ்சம்'
/
கட்சி பதவிக்கு கேட்குறாங்க 'லட்சம்'; அதிகாரிங்க வாங்கி தள்றாங்க 'லஞ்சம்'
கட்சி பதவிக்கு கேட்குறாங்க 'லட்சம்'; அதிகாரிங்க வாங்கி தள்றாங்க 'லஞ்சம்'
கட்சி பதவிக்கு கேட்குறாங்க 'லட்சம்'; அதிகாரிங்க வாங்கி தள்றாங்க 'லஞ்சம்'
ADDED : மே 20, 2025 12:51 AM

அக்னி நட்சத்திரம் நடக்கும் இவ்வேளையில், துாறல் மழையில் நனைந்தவாறே வீட்டுக்கு வந்த மித்ராவை வரவேற்று டிகிரி காபி கொடுத்து உபசரித்தாள் சித்ரா.
காபியை குடித்த கையோடு, ''நாங்களும் சாமி கும்பிடறவங்க தான்...' என்று ஆளுங்கட்சி சவுத் விஐபி கோஷ்டி விளம்பரம் பண்றாங்க...'' ஆரம்பித்தாள் மித்ரா.
''இது எங்கடி?''
''அக்கா, வேலம்பாளையத்தில் நடந்த கோவில் நிகழ்ச்சிக்கு போன சவுத் விஐபி உற்சவமூர்த்திகளை சுமந்து ஊர்வலம் சென்றார். இதனை போட்டோ எடுத்த அவரது ஆதரவாளர்கள், பெருமையாக, அதனை ேஷர் பண்ணிட்டு இருக்காங்க. அவங்க மட்டுமல்ல, சில தோழர்களும் கூட, அதனை பாராட்டி 'பார்வார்டு' பண்றாங்களாம். தேர்தல் வந்தாலே, இதுபோன்ற காட்சிகளுக்கு பஞ்மில்லை போல...'' விளக்கினாள் மித்ரா.
கோஷ்டி பூசல் தீரலே...
''மித்து, எதிர்கட்சியில நடக்கிற கோஷ்டி பூசலை சொல்றேன் கேளு. முருங்கப்பாளையம் ஏரியாவில, வளையங்காட்டில் திண்ணை பிரசாரம் நடந்துச்சு. அங்கதான், கட்சியோட அமைப்பு செயலாளர் வீடு இருக்கு. ஆனா, அவருக்கு அழைப்பு விடுக்கலையாம். அவரோட ஆதரவாளரா இருக்கும் நிர்வாகிகளுக்கும் சொல்லவே இல்லையாம். இதனால, பிரசார நிகழ்ச்சியை, கட்சிக்காரங்களே புறக்கணிச்சுட்டாங்களாம். தேர்தலுக்கு முன்னாடியே இப்படி கோஷ்டிகானம் பாடினா, இன்னும் என்னவெல்லாம் நடக்கப்போகுதோ தெரியல,''
''ம்..ம்... நீங்க சொல்றது உண்மை தான். அக்கா, அனுப்பர்பாளையம் இ.பி., ஆபீஸ் லிமிட்டில், விதிமுறை மீறி இணைப்பு கொடுத்ததாக வந்த புகாரின் அடிப்படையில், அதிகாரிகள் ரெய்டு நடத்தினாங்க. அதுல, இண்டஸ்ட்ரீ பயன்பாட்டுக்கான இணைப்பை, சட்டவிரோதமாக பயன்படுத்தியதை கண்டுபிடிச்சு, 12 லட்சம் பைன் போட்டுட்டாங்க. அதே கட்டடத்தில், போன வருஷமும் 92 ஆயிரம் பைன் போட்டாங்க. அதற்கு பின்னரும், ஏ.இ., மேல எந்த நடவடிக்கையும் இல்லாததால, இ.பி.,யோட எம்.டி.,க்கு புகார் பறந்துள்ளதாம்...''
''இந்த இ.பி., யில எப்பப்பாரு ஏதாவதொரு பிரச்னை வந்துட்டே இருக்கு,'' என்ற மித்ரா, ''காங்கயத்தில ஆளுங்கட்சி யூத் விங்கில் ஒருவர், அப்பகுதி பெண்ணிடம் ஆபாச போட்டோவுடன் மெசேஜ் அனுப்பியுள்ளார். இந்த பஞ்சாயத்து, ஆளுங்கட்சி முன்னாள் நிர்வாகிகிட்ட போனது. இதுதான் சமயம் என்று பஞ்சாய்து செய்த நிர்வாகியும், அந்த பெண்ணிடம் 'ஜொள்' விட்டது பிரச்னை பெரிதாகி பரபரப்பானது,''
''அக்கா, அதே ஏரியா ஸ்டேஷன் குட்டி அதிகாரி ஒருத்தருக்கு, '3பி' சார்ஜ் எஸ்.பி., கொடுத்துள்ளார். விஷயம் என்னவென்று விசாரித்ததில், அவர் விசாரிக்கும் கேஸ்களில் முறையான டாக்குமென்ட்களை பராமரிப்பது இல்லையாம். இதுதவிர, கட்டப்பஞ்சாயத்து, சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோரிடம், 'கல்லா' கட்டுவது என்று இருந்ததால், சார்ஜ் பாய்ந்துள்ளது. ஆனால், இது போதாது என்று சக போலீஸ்காரர்களே சொல்லும் அளவுக்கு அந்த குட்டி அதிகாரி 'கீர்த்தி' பெற்றுள்ளார்,'' என்றாள் மித்ரா சிரித்தவாறு.
கேபில் ஆபீசருக்கு 'கவனிப்பு'
''அரசு கேபிள் டிவியில நடந்த கூத்து தெரியுமா?''
''சொல்லுங்க்கா...''
''நம்ம டிஸ்ட்ரிக்ட்ல பேரளவுக்கு மட்டும் சில அரசு செட்டாப் பாக்ஸ்களை மட்டும் 'ஆன்' பண்ணிட்டு, மீதமுள்ளவற்றை ஆப்பண்ணி வைப்பது தான் திட்டமாம். அதேமாதிரி தனியார் ஆபரேட்டர்களிடமிருந்து 'கப்பம்' வசூலிக்க, புதிய லைசென்ஸ் பெற்ற அரசு ஆபரேட்டர்களை கருவியாக பயன்படுத்துகிறாராம். இதற்காக, அவிநாசி, கருமத்தம்பட்டி ஏரியாக்களில் அரசு கேபிள் கனெக் ஷன் வழங்க திருப்பூரை சேர்ந்த ஒருவர் லைசென்ஸ் வாங்கி, 6 லட்சம் ரூபாய் செலவில், கேபிள் அமைத்தார்,''
''இதனால, தனியாருக்கு மாறிய கேபிள் ஆபரேட்டர்கள், அதிகாரியை 'சிறப்பா' கவனிச்சிட்டாங்க. இத சாக்கா வெச்சுட்டு, அரசு கேபிள்களை, தனியார் ஆபரேட்டர்கள் துண்டு துண்டாக வெட்டிட்டாங்க. பாதிக்கப்பட்ட ஆபரேட்டர் கலெக்டரிடம் மனு அளித்துள்ளார். கலெக்டரும், வீடுகளுக்கு தாராளமா கனெக் ஷன் கொடுங்கன்னு சொல்லியும் கூட, 'நீங்க எதுவானாலும் சேர்மன்கிட்ட பேசிக்கோங்க'னு நழுவிட்டாராம்,''
''இப்படி அதிகாரி இருந்தா கவர்மென்ட்டுக்கு ரெவின்யூ எப்படி வரும்,'' ஆதங்கப்பட்ட மித்ரா, ''அக்கா, ''தாராபுரம் ஏரியாவுல, தாமரை கட்சியில, லட்சக்கணக்கில பணம் வாங்கிட்டு தான் பதவி கிடைக்கும் என பேரம் பேசி, போஸ்டிங் போட்டிருக்காங்க. இப்படி பணம் வாங்கிட்டு, போஸ்டிங் போடறளவு கட்சி தரங்கெட்டு போச்சுன்னு, பழைய ஆட்கள் புலம்பறாங்களாம்...''
''அதுவும் ஒரு கட்சி தானே. அப்படித்தான் இருக்கும்,'' என்ற மித்ரா, ''சமீபத்துல, அவிநாசி தேர்த்திருவிழா நடந்ததுதில்ல. அதுக்காக, மங்கலம் ரோட்டுல உள்ள ஒரு கிரவுண்ட்ல, ராட்டினம் போட்டாங்க. அதில, ஒன்னு 'ஆன்' செய்ததும் பயங்கர சத்தத்துடன் பல் சக்கரங்கள் உடைஞ்சிருச்சாம். இத பார்த்து, பெண்கள் கத்தி கூச்சலிடவே உடனே ஆபரேட்டர் மெஷினை நிறுத்தினதால, அசம்பாவிதம் ஒன்னுமில்ல. இது போன்ற விளையாட்டு சாதனங்களை அதிகாரிங்க யாரும் ஆய்வு செய்யறதே இல்லை. இப்டியிருந்தா, ஜனங்க உசிருக்கு எப்படி பாதுகாப்பு கிடைக்கும்,'' என்றாள்.
ஆட்டோ ஸ்டாண்ட் 'அட்ராசிட்டி'
''வேற பெரிய பிரச்னை வந்ததான், அதிகாரிங்க கவனிப்பாங்க போல. மித்து, ரயில்வே ஸ்டேஷன் முன்னாடி உள்ள இடத்தில ஒரு கப்பிள் டூவீலர் நிறுத்தினாங்க. உடனே அங்கிருந்த ஆட்டோ டிரைவர்கள், 'ஆட்டோ ஸ்டாண்ட் பக்கத்துல டூவீலர் நிறுத்தாதீங்க. ஆட்டோ நிறுத்த டெண்டர் எடுத்து, பணம் கட்டிருக்கோம்'னு சத்தம் போட்டுள்ளனர். ஒரு நிமிஷத்துல போயிருவோம். அதுக்கு ஏனிப்படி பேசுறீங்க,' கேட்க, டூவீலரில் வந்த லேடி, 'ஆட்டோக்களை இவ்வளவு துாரம் நிறுத்திவீங்களா. உங்களுக்கு பட்டா போட்டு கொடுத்துட்டாங்களான்னு சண்டை போட்டுள்ளனர். இதப்பார்த்த பக்கத்துல இருந்த போலீஸ் ஒருத்தர், ரெண்டு தரப்பையும் சமாதானம் செஞ்சு அனுப்புனாராம்,'' சித்ரா விளக்கினாள்.
''ஒரு சில ஆட்டோ டிரைவர்ஸ் இப்படி சண்ட போடறதால, மத்தவங்களுக்கு கெட்ட பேர் தாங்க்கா வரும். அக்கா, நெருப் பெரிச்சலில், புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து ஒருவர் மண்டபம் கட்டி வாடகைக்கு விட்டிருந்தார். பல பெட்டிஷன்களுக்கு பின், நடவடிக்கை எடுக்கப்பட்டது. இடத்தை மீட்ட ரெவின்யூ டிபார்ட்மென்ட் சார்பில், எச்சரிக்கை போர்டு வைத்தனர். ஆனால், அடுத்த நாளே போர்டு மாயமாகி விட்டது. வழக்கம்போல ஆபீசர்களும் கண்டுகொள்ளல. போர்டு இல்லைன்னா, ஆக்கிரமிப்பு இல்லைன்னு ஆகி விடுமா, என மக்கள் கேள்வியெழுப்புகின்றனர்,''
''மித்து, அதிகாரிகள் சப்போர்ட் இல்லாம எதுவும் நடக்காதுங்றதுக்கு இதொரு சாட்சி,'' என ஆவேசப்பட்ட சித்ரா, ''வடக்கு தாலுகா, செட்டிபாளையம் வி.ஏ.ஓ., மக்கள் கொடுக்கும் விண்ணப்பம் மீது உடனே நடவடிக்கை எடுப்பதில்லையாம். ஒருத்தருக்கு சர்டிபிகேட் தப்பா கொடுத்துட்டாராம். அத சரி செய்ய அவர் நடையாய் நடந்தும் கூட கண்டுக்கலையாம். கடைசியில தாசில்தார் சரி செஞ்சு கொடுத்தாராம். வி.ஏ.ஓ., சங்கத்தில் பொறுப்பில் உள்ளவர் என்பதால், ஆபீசர்ஸ் அவரிடம் 'கோபி'த்து கொள்வதில்லையாம்,''
''இப்படித்தான் சங்க பொறுப்பில் இருக்கும் தைரியத்தில், ரேஷன் கடையில் முறைகேடு செய்தவர் சஸ்பெண்ட் ஆன கதையை குறிப்பிட்டு பொதுமக்கள் வி.ஏ.ஓ.,வை வறுத்தெடுத்து வருகின்றனர்,''
'காசில்லாத' கட்சிகள்?
''உண்மை தான் மித்து. கோர்ட் உத்தரவுப்படி கொடிக்கம்பங்களை அகற்ற அறிவுறுத்தப்பட்டது. ஆனா, திருப்பூர்ல கோர்ட் உத்தரவை இம்மியளவு கூட கட்சியினர் மதிக்கல. ஆனா, கோர்ட் அவமதிப்புக்கு அஞ்சி, ஆபீசர்ஸ், களமிறங்கி, கம்பங்களை அகற்றிட்டு வர்றாங்க. இத தெரிஞ்சிட்டு, கட்சிக்காரங்க உடனே போய் கம்பத்தை எடுத்துட்டு போயிடறாங்களாம். கம்பத்தை எடுக்கறதுக்கு கூட செலவு செய்யாதவங்களுக்கு கட்சி எதுக்கு நடத்துறாங்கன்னு அதிகாரிகள் தலையில் அடித்துக் கொள்ளாத குறையாக தங்களோட ஆதங்கத்தை புலம்பி வருகின்றனராம்,'' சீரியசாக சொன்னாள் சித்ரா.
''அக்கா, தாராபுரம் ஆளுங்கட்சி நிர்வாகியோடா 'அட்ராசிட்டிய' கேளுங்க. பக்கத்திலுள்ள பொட்டிக்காம்பாளையத்தில், கணவரை இழந்த ஆதரவற்ற ரெண்டு லேடீஸ், விவசாய கூலி வேலை பார்க்கின்றனர். இவங்க ரெண்டு பேர் வீட்டுக்கு முன்னாடி உள்ள இடத்தை ஆக்கிரமிச்சு ஆளும்கட்சி எக்ஸ் கவுன்சிலர் ஒருத்தர் வீடு கட்றார். இதப்பத்தி, அதிகாரிகளிடம் புகார் சொல்லியும், கண்டுக்கலையம்,''
''எம்மேல புகார் கூறும் அளவுக்கு போய்ட்டீங்களா சொல்லி, ரெண்டு லேடீஸ்களையும், கணவனும் மனைவியும் ஒருசேர தாக்கி காயப்படுத்திட்டாங்க. இப்ப விவகாரம் போலீசில் போய் நிக்குது,'' என்ற மித்ரா, ''அக்கா... 'சின்னதுரை' கடை வரைக்கும் போலாம் வர்றீங்களா,'' என்றாள்.
''ஓ.கே.,'' என்ற சித்ரா, வீட்டை பூட்டவே, இருவரும் கிளம்பினர்.