350 லெகசி எடிஷன் கூடுதல் அம்சங்களுடன் 'ஜாவா' டூரர்
350 லெகசி எடிஷன் கூடுதல் அம்சங்களுடன் 'ஜாவா' டூரர்
ADDED : மார் 05, 2025 01:27 PM

'கிளாசிக் லெஜென்ட்ஸ்' நிறுவனம், 'ஜாவா 350 லெகசி எடிஷன்' என்ற சிறப்பு எடிஷன் பைக்கை அறிமுகப்படுத்தி உள்ளது. 'ஜாவா 350' பைக் இந்தியாவில் அறிமுகமாகி ஒரு ஆண்டு ஆனதை கொண்டாடும் வகையில், இந்த சிறப்பு எடிஷன் பைக் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த பைக்கை முன்பதிவு செய்யும் முதல் 500 வாடிக்கையாளர்களுக்கு, 1.99 லட்சம் ரூபாய் ஆரம்ப விலையில் வழங்கப்படுகிறது. அதற்கு பின் 16,000 ரூபாய் விலை உயர்த்தப்படும் என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஜாவா 350 பைக்குடன் ஒப்பிடுகையில், இன்ஜின், சஸ்பென்ஷன், கியர்பாக்ஸ் உள்ளிட்டவையில் எந்த மாற்றமும் இல்லை. லெகசி எடிஷன் என்பதால், டூரிங் விண்ட் வைசர், பின்புற பயணிக்கு பேக் ரெஸ்ட் வசதி, இன்ஜின் கிராஷ் கார்டு ஆகியவை கூடுதலாக வழங்கப்பட்டுள்ளன. மேலும், வாடிக்கையாளருக்கு லெதர் கீ செயின் மற்றும் சிறிய வடிவத்தில் இருக்கும் ஜாவா பைக் வழங்கப்படுகிறது.
இந்த பைக், அலாய் சக்கரங்கள் மற்றும் டியூப் லெஸ் டயர்களுடன் வருகிறது. ராயல் என்பீல்டு கிளாசிக் மற்றும் ஹோண்டா சி.பி., 350 பைக்குகளுக்கு இந்த பைக் போட்டியாக உள்ளது.