உலக ஏற்றுமதி மையமான 'தமிழகம்' 8,400 கோடிக்கு 'கேட்டர்பில்லர்' முதலீடு
உலக ஏற்றுமதி மையமான 'தமிழகம்' 8,400 கோடிக்கு 'கேட்டர்பில்லர்' முதலீடு
ADDED : டிச 12, 2024 09:00 AM

இ ந்தியாவில் கடந்த 50 ஆண்டுகளில், 8,400 கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு செய்துள்ளோம் என்று முன்னணி கட்டுமான இயந்திர நிறுவனமான 'கேட்டர்பில்லர்' நிறுவனத்தின் இந்திய மேலாளர் மற்றும் பொறியியல் பிரிவு துணைத் தலைவர் புவன் ஆனந்தகிருஷ்ணன் கூறி உள்ளார். 'தினமலர்' நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டியில்,
உலகம் முழுதும் கடந்த 20 ஆண்டுகளில், 2.54 லட்சம் கோடி ரூபாய்க்கு முதலீடு செய்துள்ளோம். மாற்று எரிபொருள், டிஜிட்டல் மற்றும் இணைப்பு வசதி, மின்சார இயந்திரங்கள், செயற்கை நுண்ணறிவு என பல தொழில்நுட்பங்களில் முதலீடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்தியா முழுதும், 3,500 பொறியாளர்கள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவில் பணியாற்றி வருகின்றனர். கேட்டர்பில்லர் பொறியாளர்கள் அதிகம் உள்ள இரண்டாவது நாடாக இந்தியா விளங்குகிறது.
கடந்த 1971ம் ஆண்டு முதல், இந்தியாவில் உற்பத்தியை மேற்கொண்டு வருகிறோம். தற்போது, தமிழ்நாடு, கர்நாடகா, மஹாராஸ்டிரா மற்றும் புதுடில்லியில், இந்நிறுவன உற்பத்தி ஆலை, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு வசதி மற்றும் அலுவலகங்கள் அமைந்துள்ளன.
தமிழ்நாட்டில் திருவள்ளூர் மாவட்டத்திலும் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியிலும் எங்கள் உற்பத்தி ஆலைகள் அமைந்துள்ளன. இதில் திருவள்ளூர் ஆலை, நாட்டிலேயே முதன்மையான ஆலையாகும். சுரங்க லாரிகள், எக்ஸ்கவேட்டர்கள், பேக்ஹோ லோடர்கள் உள்ளிட்ட பல இயந்திரங்கள் இங்கு உற்பத்தி செய்யப்படுகின்றன. தமிழகம் எங்களின் முக்கிய ஏற்றுமதி மையமாகவும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
கார்பன் இல்லா நிலையான இயந்திரங்களை 2030க்குள் உற்பத்தி செய்ய பல முயற்சிகளை எடுத்து வருகிறோம். இதில் முதற்கட்டமாக, இரு முன்மாதிரி மின் எக்ஸ்கவேட்டர்கள் மற்றும் லோடர்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இயந்திரங்களுக்கான ஹைப்ரிட் பவர்டிரை னையும் உருவாக்கி வருகிறோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.