கோல்ப் ஜி.டி.ஐ., டிக்வான் ஆர் - லைன் போக்ஸ்வேகன் 'மெகா' விருந்து
கோல்ப் ஜி.டி.ஐ., டிக்வான் ஆர் - லைன் போக்ஸ்வேகன் 'மெகா' விருந்து
ADDED : மார் 05, 2025 01:33 PM

'போக்ஸ்வேகன்' நிறுவனம், 'கோல்ப் ஜி.டி.ஐ.,' மற்றும் 'டிக்வான் ஆர் - லைன்' என்ற இரு ஸ்போட்ஸ் ரக கார்களை இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த கார்கள், நடப்பாண்டின் இரண்டாம் காலாண்டில் அறிமுகமாக உள்ளன.
கோல்ப் ஜி.டி.ஐ.,
இது, நடப்பாண்டின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட காராக மாறி உள்ளது. 'ஜி.டி.ஐ.,' என்பது இந்நிறுவனத்தின் ஸ்போர்ட்ஸ் டிசைன் கொண்ட அதிவேக காரை குறிக்கிறது. அதாவது, கோல்ப் காரின் இன்ஜின் அதிக செயல்திறன் வழங்கும் வகையில், ட்யூன் செய்யப்பட்டுள்ளது. 'பிரண்ட் வீல் டிரைவ்' அமைப்பில் வரும் இந்த கார், இந்தியாவில் இறக்குமதி முறையில் விற்பனையாக உள்ளது. இதனால், இந்த காரின் விலை, 52 லட்சம் ரூபாயாக இருக்கும் என கூறப்படுகிறது. முதற்கட்டமாக, 250 கார்கள் இறக்குமதி செய்யப்பட உள்ளன.
டிக்வான் ஆர் - லைன்
'ஆர் - லைன்' என்பது ஸ்போர்ட்ஸ் டிசைன் கொண்ட கார் ஆகும். இன்ஜினில் எந்த மாற்றமும் இருக்காது. ஏற்கனவே இந்திய சந்தையில், டிக்வான் எஸ்.யூ.வி., கார் உள்ளது. ஆனால் 'ஆர் - லைன்' என்பது, டிக்வான் காரின், உயர்ந்த விலை மாடல் ஆகும். உலக சந்தையில், மூன்று பெட்ரோல் இன்ஜினிலும், ஒரு டீசல் இன்ஜினிலும் இந்த கார் வருகிறது. தற்போது, இந்தியாவில், 2 லிட்டர், 4 சிலிண்டர், டர்போ பெட்ரோல் இன்ஜின் கொண்ட டிக்வான் கார் உள்ளதால், அதே, இன்ஜினில் வர அதிக வாய்ப்பு உள்ளது.