ADDED : மார் 19, 2025 08:48 AM

அடுத்த மூன்று ஆண்டுகளில், வெவ்வேறு எடை பிரிவுகளில் நான்கு இலகு ரக மின்சார வர்த்தக வாகனங்களை அறிமுகம் செய்ய உள்ளதாக, 'டிவோல்ட் எலக்ட்ரிக்' நிறுவன தலைமை செயல் அதிகாரி சஜூ நாயர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, 'தினமலர்' நாளிதழுக்கு அவர் அளித்த பிரத்யேக பேட்டியில்:
மின்சார வாகன திட்டத்திற்கு முருகப்பா குழுமம், மொத்தம் 3,000 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது. எங்களின் வினியோகஸ்தர்களில், 60 சதவீத நிறுவனங்கள் தமிழகத்தில் உள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் உள்ள எங்களது ஆலையில், வாகனங்கள் மற்றும் பேட்டரிகள் அசெம்பிள் செய்யப்படுகின்றன. 5 லட்சம் சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள இந்த ஆலையில், ஆண்டுக்கு 50,000 வாகனங்கள் உற்பத்தி செய்ய முடியும்.
பேட்டரி செல்களை தவிர, இதர உதிரிபாகங்கள் மற்றும் உபகரணங்கள் அனைத்தும் உள்நாட்டுமயமாக்கம் செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 'இவியேட்டர்' இலகு ரக மின்சார சரக்கு வாகனத்தை உற்பத்தி செய்ய துவங்கி உள்ளோம்.
அடுத்த மூன்று ஆண்டுகளில், நான்கு இலகுரக மின்சார வாகனங்களை அறிமுகம் செய்ய திட்டம் உள்ளது.
எங்கள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவில் 300 பேரும், மென்பொருள் பிரிவில் 100 பேரும் பணியாற்றி வருகின்றனர். சீனாவில் எங்கள் தொழில்நுட்ப மையம் உள்ளது.
அதனால், தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப, மற்ற நிறுவனங்களை விட வேகமாக மென்பொருள் மேம்பாடுகளை வழங்க முடியும்.
மின்சார வர்த்தக வாகன துறையில், இலகு ரக வாகனங்கள் 50 சதவீதத்திற்கு மேல் உள்ளதை பெரிய வாய்ப்பாக பார்க்கிறோம். மின்சார வாகனங்களை பற்றிய போதிய புரிதல் வாடிக்கையாளர்களுக்கு இல்லாதது, சார்ஜிங் கட்டமைப்புகள், சார்ஜிங் நேரம் ஆகியவை சவாலாக உள்ளது.
ஒரு முறை மின்சார வாகனங்களை பயன்படுத்தினால், அதன் பலன்களை அவர்கள் புரிந்து கொள்வர். அதனால், வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை பெற முயற்சி செய்கிறோம். இந்த ஆண்டு முடிவுக்குள், 25 நகரங்களில் எங்கள் இருப்பை விரிவுபடுத்த இலக்கு உள்ளது.
பேட்டரி தொழில்நுட்பம் வளர்ந்து வருவதால், லித்தியம் அயான் பேட்டரிகளின் விலை குறைந்து வருகிறது. அதனால், 10 அல்லது 15 ஆண்டுகள் பயன்பாட்டுக்கு பிறகு, பெரிய செலவு இல்லாமல் இந்த வகை பேட்டரிகளை வாடிக்கையாளர்கள் மாற்றிக்கொள்ள முடியும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.