மஹிந்திரா தார் ராக்ஸ் எஸ்.யு.வி., காட்டுக்கே நான் தான் ராஜா
மஹிந்திரா தார் ராக்ஸ் எஸ்.யு.வி., காட்டுக்கே நான் தான் ராஜா
ADDED : ஆக 21, 2024 09:40 AM

'மஹிந்திரா' நிறுவனம், அதன் ஐந்து டோர் 'தார் ராக்ஸ்' எஸ்.யு.வி., காரை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த கார், பெட்ரோல் மற்றும் டீசல் வகையிலும், 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோ கியர் பாக்ஸ் வகையிலும், ரியர் வீல் மற்றும் 4 வீல் டிரைவ் வகையிலும் வருகிறது.
மூன்று டோர் தாரை ஒப்பிடுகையில், இதன் நீளம், அகலம், உயரம் மற்றும் வீல் பேஸ் ஆகிய அனைத்தும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் வீல் பேஸ் மட்டும் 400 எம்.எம்., அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் கிரவுண்ட் கிளியரன்ஸ் 235 எம்.எம்., ஆகவும், தண்ணீரில் பயணிக்கும் திறன் 650 எம்.எம்., ஆகவும் உள்ளன.
வெளிப்புற டிசைன் பொறுத்த வரையில், 6-பேக் கிரில், கம்பீரமான வீல் ஆர்ச்சுகள், அகலமான ஆப்ரோட் டயர்கள் மற்றும் 19 அங்குல அலாய்சக்கரங்கள், அதே பின்புற தோற்றம், சி-வடிவ எல்.இ.டி., டி.ஆர்.எல்., லைட்டுகள் ஆகியவை இந்த காரை ஆப்ரோட் அசுரனாக காட்டுகிறது.
நான்காம் தலைமுறை குறைந்த எடை சேசிஸில் கட்டமைக்கப்பட்டுள்ள இந்த காரில், ஹைட்ராலிக் ஸ்டியரிங்கிற்கு பதிலாக எலக்ட்ரானிக் ஸ்டியரிங், புதிய மல்ட்டி லிங் சஸ்பென்ஷன் அமைப்பு ஆகியவை புதிதாக வழங்கப்பட்டுள்ளன.
மேலும், அடாஸ் பாதுகாப்பு வசதி, 'ஆப்ரோடிங்கின்'போது எளிதாக திரும்ப இன்டெல்லி டர்ன் உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகளும் இந்த காரில் உள்ளன.
போர்ஸ் கூர்கா, மாருதி சுசூகி ஜிம்னி ஆகிய கார்கள் இதற்கு போட்டியாக உள்ளன.

