2030க்குள் 6 மின்சார கார்கள் அறிமுகம் மாருதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு
2030க்குள் 6 மின்சார கார்கள் அறிமுகம் மாருதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ADDED : ஜன 22, 2025 08:21 AM

2030க்குள் 6 மின்சார கார்களை அறிமுகம் செய்ய உள்ளதாக, மாருதி சுசூகி நிறுவன சந்தைப்படுத்துதல் மற்றும் விற்பனை பிரிவு தலைவர், பார்தோ பானர்ஜீ தெரிவித்துள்ளார்.
பாரத் மொபிலிட்டி வாகன கண்காட்சியில், தினமலர் நாளிதழுக்கு அவர் அளித்த பிரத்யேக பேட்டியில், எங்களின் முதல் மின்சார காரான 'இ - விட்டாரா', இந்தியாவில் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது. இதற்காக, குஜராத் ஆலையில், 2,100 கோடி ரூபாய் முதலீடு செய்து, மின்சார கார் உற்பத்திக்கென பிரத்யேக அசெம்பிளி தடம் அமைக்கப்பட்டுள்ளது.
இங்கு உற்பத்தி செய்யப்படும் கார்களில், 50 சதவீதம் கார்கள் ஜப்பான், ஐரோப்பிய மற்றும் இதர ஆசிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும்.
நடப்பு நிதியாண்டு இறுதிக்குள், இந்த காரின் முன்பதிவு மற்றும் உற்பத்தி துவங்கும். ஆண்டுக்கு 1 லட்சம் இ - விட்டாரா கார்கள், இந்த ஆலையில் உற்பத்தி செய்ய முடியும்.
மின்சார கார்களில் பயன்படுத்தப்படும் பேட்டரி தொழில்நுட்பம் சிக்கலான் ஒன்று.
அதனால், தற்போதைக்கு பி.ஒய்.டி., நிறுவனத்திடம் இருந்து பேட்டரி செல்களை பெற்று வருகிறோம். பேட்டரிகளை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்ய ஆய்வு நடந்து வருகிறது. சார்ஜிங்கட்டமைப்பை பொறுத்த வரை, நாட்டின் முதல் 100 நகரங்களில் உள்ள விற்பனை மையங்களில் பாஸ்ட் சார்ஜிங் நிலையத்தை அமைக்க உள்ளோம். அதேபோல், நாட்டின் 1,000 நகரங்களில் உள்ள, 1,500க்கும் அதிமான விற்பனை மையங்களில் இந்த கார் விற்பனைக்கு வர உள்ளது.
மின்சார கார்கள் விற்பனை சரிவுக்கு, வாகன ரேஞ்ச் முக்கிய காரணமாக சொல்கின்றனர்.
கண்கெடுப்பு எடுக்கப்பட்டதில், மக்கள் குறைந்தபட்சம் 500 கி.மீ., ரேஞ்சை எதிர்பார்க்கின்றனர். அதனால், 500 கி.மீ.,க்கும் அதிகமான ரேஞ்சை வழங்கும் மின்சார காரை அறிமுகப்படுத்தி உள்ளோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.