சொகுசு மின்சார கார் சந்தைக்குள் காலடி வைக்கும் 'டாடா மோட்டார்ஸ்'
சொகுசு மின்சார கார் சந்தைக்குள் காலடி வைக்கும் 'டாடா மோட்டார்ஸ்'
ADDED : டிச 31, 2025 07:40 AM

'அவின்யா' பிரீமியம் மின்சார கார் பிராண்டின் வாயிலாக, சொகுசு மின்சார கார் சந்தையில் 'டாடா மோட்டார்ஸ்' நிறுவனம் நுழைய இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த பிராண்டின் கீழ் எஸ்.யூ.வி., - எம்.பி.வி., என வெவ்வேறு பிரிவுகளில், மொத்தம் ஐந்து கார்கள் அறிமுகமாக உள்ளன. அடுத்த ஆண்டின் கடைசி காலாண்டில், 'அவின்யா' பிராண்டின் முதல் மின்சார கார் அறிமுகமாக உள்ளது. இந்த காரின் விலை, 40 லட்சம் ரூபாயாக இருக்கும் என கூறப்படுகிறது.
'ஹேரியர் இ.வி.,' காரின் உயர்ந்த ரக மாடல், 29.48 லட்சம் ரூபாயில் விற்பனையாகி வருகிறது. இது, இந்நிறுவனத்தின் உயர்ந்த விலை கார் ஆகும். அதை மிஞ்சும் அளவுக்கு 'அவின்யா' மின்சார கார்கள் உருவாக்கப்பட்டு வருவதாக தெரிகிறது.
குறைந்தபட்சம் 500 கி.மீ., ரேஞ்ச், 5 மீ நீளம், 22 அங்குல அலாய் சக்கரங்கள், நவீன அடாஸ் லெவல் 2 பாதுகாப்பு, அல்ட்ரா பாஸ்ட் சார்ஜிங் வசதி என இதுவரை இந்நிறுவன கார்களில் காணாத அளவில் அம்சங்கள் நிறைந்து காணப்படும் என கூறப்படுகிறது. மேலும், இந்த கார் 'டாடா' அடையாளம் கொண்டு வராமல், 'டீ' என்ற அடையாளத்தில் வர இருப்பதாக இந் நிறுவனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

