அடுத்த இரண்டு ஆண்டுகளில் மூன்று புதிய ரெனோ கார்கள்
அடுத்த இரண்டு ஆண்டுகளில் மூன்று புதிய ரெனோ கார்கள்
ADDED : ஜூலை 30, 2025 06:40 AM

2025 ரெனோ ட்ரைபர் காரில், டர்போ இன்ஜின், வழங்கப்படாதது, ஏன்?
ரெனோ ட்ரைபர் எம்.பி.வி., காரின் சிறப்பம்சமே, ஒரு 4 மீட்டர் காரில், 7 பேர் பயணிக்க முடியும் என்பது தான். மூன்றாவது வரிசையில் கூட நல்ல இட வசதி ஏற்படுத்தி தந்துள்ளோம். இந்த காரில், 1 லிட்டர், என்.ஏ., பெட்ரோல் இன்ஜின் மட்டுமே பயன்படுத்த முடியும். டர்போ இன்ஜின் பயன்படுத்தினால், காரின் உட்புற இடவசதி பாதிக்கும் அல்லது காரின் நீளம் அதிகரித்துவிடும்.
ரெனோவிற்கு, இந்திய வர்த்கம் எவ்வளவு முக்கியம்?
பிப்ரவரி 2023ல், இந்தியாவில் 5,400 கோடி ரூபாய் முதலீடு செய்வதாக அறிவித்தோம். அதில், அறிமுகமாகும் முதல் கார் இது. அடுத்த இரண்டு ஆண்டுகளில், மேலும் மூன்று கார்களை அறிமுகம் செய்ய உள்ளோம். சென்னை அருகே உள்ள மஹிந்திரா சிட்டியில், புதிய வடிவமைப்பு மையம் துவங்கப்பட்டுள்ளது. இது, பிரான்ஸ் நாட்டுக்கு வெளியே உள்ள பெரிய வடிவமைப்பு மையம் ஆகும்.
உலகத்தரத்திற்கு மேம்படுத்தப்ட்ட உலகின் முதல் 'ஆர் ஸ்டோர்' விற்பனை மையம், சென்னையில் துவங்கப்பட்டுள்ளது. இந்தியாவில், 65 சதவீதம் பேர், 35 வயதிற்குள் உள்ளனர். அவர்கள் அனைவரையும் வாடிக்கையாளர்களாக பார்க்கிறோம். இந்திய சந்தை, தொடர்ந்து வளரும் என்ற நம்பிக்கை உள்ளதால், அதிக முதலீடுகளை செய்கிறோம்.
ரெனோ நிஸான் ஆலையை, ரெனோ நிறுவனம் கையகப்படுத்துகிறது, செயல்பாடுகளில் என்ன மாற்றங்கள் இருக்கும்?
ரெனோ இந்தியா குழுமத்திற்கு, புதிய தலைமை செயல் அதிகாரி நியமனம் செய்யப்பட்டுள்ளார். எங்களின் தொழில்நுட்ப மற்றும் வடிவமைப்பு மையம், உற்பத்தி ஆலை, இதர பிரிவுகள் அனைத்தும் ஒருங்கிணைந்து செயல்பட, ஒரு தலைமைக்கு கீழ் கொண்டுவரப் பட்டுள்ளது. இதனால், விரைவாக முடிவெடுத்து, வேகமாக செயல்பட முடியும்.
சென்னையில் உள்ள வடிவமைப்பு மையம், உலகளவில் என்ன பங்கு வகிக்கிறது?
பிரான்சில் அறிமுகமான 'ஆர் - 5' என்ற மின்சார கார், 100 சதவீதம் இங்கு வடிவமைக்கப்பட்டது. இந்தியா உட்பட உலக சந்தைக்கான ரெனோ கார்களையும் இந்த மையம் வடிவமைக்கிறது.
டஸ்டர், பிக்ஸ்டர் எஸ்.யூ.வி., எப்போது அறிமுகமாகும்?
'பி பிளஸ்', 'சி' பிரிவு களில் புதிய கார்களை அறிமுகம் செய்ய உள்ளோம். ஹைபிரிட், மின்சார கார்களையும் அறிமுகம் செய்ய திட்டம் உள்ளது.
வெங்கட்ராம் மம்மிலப்பல்லே
ரெனோ குழுமம் இந்தியா நிறுவனத்தின்
தலைமை செயல் அதிகாரி & நிர்வாக இயக்குநர்