ADDED : ஏப் 02, 2025 08:51 AM

'நிஸான்' நிறுவனம், 'காம்பேக்ட் எஸ்.யூ.வி.,' மற்றும் 'காம்பேக்ட் எம்.பி.வி.,' ஆகிய இரு புதிய கார்களை இந்த நிதியாண்டில் அறிமுகம் செய்ய உள்ளதாக, அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நடப்பாண்டு பண்டிகை காலத்தில், எம்.பி.வி., கார் அறிமுகமாகும் என்றும், நடப்பு நிதியாண்டிற்குள் காம்பேக்ட் எஸ்.யூ.வி., கார் அறிமுகமாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரு கார்களும், சென்னையில் உள்ள ரெனோ நிஸான் ஆலையில் உற்பத்தி செய்யப்பட உள்ளன.
காம்பேக்ட் எஸ்.யூ.வி.,
இது, 'ரெனோ டஸ்டர்' காரை அடிப்படையாக கொண்ட காம்பேக்ட் எஸ்.யூ.வி., காராகும். இந்த காரில், சர்வதேச சந்தையில் இருக்கும் 'டஸ்டர்' காரில் உள்ள 1.3 லிட்டர், டர்போ பெட்ரோல் இன்ஜின் பயன்படுத்தப்படும் என தெரிகிறது. 5 மற்றும் 7 சீட்டர் வகையில் வரும் இந்த காரில், ஆல் வீல் டிரைவ் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
காம்பேக்ட் எம்.பி.வி.,
இது, 'ரெனோ ட்ரைபர்' எம்.பி.வி., காரை அடிப்படையாக கொண்ட 7 சீட்டர் காம்பேக்ட் எம்.பி.வி., கார் ஆகும். இதில், அதே 1 லிட்டர், என்.ஏ., பெட்ரோல் இன்ஜின் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ட்ரைபர் காரின் டர்போ இன்ஜின் இல்லாததால், இந்த காருக்கும் அது வர வாய்ப்பு இல்லை. இந்த இன்ஜினுடன், 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் எம்.எம்.டி., ஆட்டோ கியர் பாக்ஸ் வழங்கப்படும்.