ADDED : ஜன 22, 2025 08:24 AM

'வேவ் மொபிலிட்டி' நிறுவனம், இந்தியாவின் முதல் சோலார் மின்சார காரான 'இவா' காரை காட்சிப்படுத்தியது. மொத்தம் மூன்று வகையில் வரும் இந்த காரின் முன்பதிவுகள் ஆரம்பமாகி உள்ளது. வினியோகம், அடுத்த ஆண்டு இரண்டாம் பாதியில் ஆரம்பமாக உள்ளதாக இந்நிறுவனம் கூறி உள்ளது.
'எம்.ஜி., காமெட்' காரை விட, இந்த காரின் அளவு பெரியது. குறுகலான பகுதிகளில் எளிதாக இயங்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த காரில், இரு பயணிகள், ஒரு டிரைவர் என மூன்று பேர் பயணிக்க முடியும். அதுவும், முன்புறத்தில் டிரைவர் சீட் மட்டுமே உள்ளது.
இந்த காரை சோலார் மற்றும் மின்சாரம் ஆகிய இரு ஆற்றல்களில் இயக்க முடியும். பேட்டரி பொறுத்த வரை, 9, 12 மற்றும் 18 கி.வாட்.ஹார்., என மூன்று ஆற்றல்களில் வருகிறது. அதாவது, 125 கி.மீ., முதல் அதிகபட்சமாக 250 கி.மீ., வரை இதன் ரேஞ்ச் உள்ளது.
காரின் ரூப் பகுதியில் சோலார் பேனல் பொருத்தப்பட்டுள்ளது. சோலார் ஆற்றல் வாயிலாக ஆண்டுக்கு, குறைந்தபட்சம் 3,000 கி.மீ., வரை பயணிக்கலாம். மின்சாரம், இந்த காரின் முதன்மையான ஆற்றல் ஆகும்.
டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் கார்பிளே இணைப்புகள், ஹில் ஹோல்டு அசிஸ்ட், டிரைவர் ஏர்பேக், வாட்டர் ப்ரூப் பேட்டரி உள்ளிட்ட அம்சங்கள் இதில் உள்ளன.